கரூர் துயர சம்பவத்தில் ஒரு முதிர்ச்சியான அரசியல் தலைமை, எப்படி நடக்க வேண்டுமோ அப்படி விஜய் நடக்கவில்லை என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் விஜய் சந்தித்து பேசியுள்ளது குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- விஜயின் அரசியல் ஆரம்பத்தில் இருந்தே குளறுபடியாக தான் இருக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினரை என் வீட்டுக்கு வாங்க, துக்கம் விசாரிக்கிறேன் என்று யாரும் சொன்னதில்லை. கரூக்கு செல்வதற்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் அளித்த மனுவில் என்ன என்ன பாதுகாப்பு கேட்டார்கள்.
தற்போதுதான் பாஜக உடன் நெருக்கமாகிறார்கள் என்று செய்தி வருகிறது. அப்போது பிரதமர் எப்படி பத்திரிகையாளரை சந்திக்க மாட்டாரோ, அதேபோல் இவரும் செய்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தரப்பினர், பாவம் விஜய் என்ன செய்வார் என்று கேட்கிறார்கள். அதேநேரத்தில், இருவர் விஜயை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்களுக்கு 5 நட்சத்திர விடுதியில் தங்கவைத்து, அவர்களுக்கு தேவையானவற்றை செய்தால் விஜய் நல்ல மனிதர், இல்லாவிட்டால் இதை செய்வாரா? என்கிற எண்ணம் தோன்றும்.

விஜய் ஏன் கரூருக்கு போகவில்லை? என்று கேட்டால், நாமக்கல்லில் தான் மண்டபம் கிடைத்தது. அதனால் மாமல்லபுரத்துக்கு மாற்றிவிட்டோம் என்று சொல்கிறார்கள். அப்போது கரூருக்கு மாமல்லபுரம் தான் பக்கம் போல. 41 பேர் இறந்தபோது ஒரு திகைப்பு காரணமாக விஜய் அந்த இடத்தை விட்டு போய்விட்டார் என்றால், பத்திரிகையாளர்களை ஏன் அவர் சந்திக்கவில்லை. அதற்கு காரணம் கேள்வி கேட்டு குடைந்துவிடுவார்கள் என்பதால்தான். பாதிக்கப்பட்டவர்களை இதுவரை சந்திக்காத விஜய், இவ்வளவு நாட்கள் கழித்து ஏன் சந்திக்கிறார். சிபிஐ விசாரணை நடத்தினால் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்களா? என சந்தேகம் எழாதா? ஒரு முதிர்ச்சியான அரசியல் தலைமை, எப்படி நடக்க வேண்டுமோ அப்படி விஜய் நடக்கவில்லை.
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனையின்படி, நீரிழப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் தண்ணீர் இல்லாததுதான். அதற்கு காரணம் தவெகதான். இதை கேட்டால் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட செயலாளர் மதியழகன் தான் காரணம் என்கிறார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு நெறிமுறைகளை வகுக்க கூறியுள்ளனர். எனவே இனிமேல் பிரச்சார கூட்டங்களை மைதானங்களில் தான் நடத்த வேண்டும். இனி சாலையோரங்களில் பிரச்சாரம் நடத்தக்கூடாது என்று அரசு சொல்லிவிடும்.

கரூர் துயர சம்பவத்தில் தார்மீக பொறுப்பு விஜய்க்கு தான் இருக்கிறது. அதற்காக விஜய் மீது வழக்கு தொடக்க முடியாது. ஆனால் விஜய் தலைமைப் பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் என்று சொல்ல முடியும். மாமல்லபுரத்தில் விஜய் ஒவ்வொரு குடும்பங்களையும் 15 நிமிடங்கள் வரை சந்தித்து பேசியதாக சொல்கிறார்கள். இந்த சந்திப்பின்போது கலங்கி இருக்கலாம். வருத்தத்துடன் பேசி இருக்கலாம். ஆனால் அதை ஊடகங்கள் சொல்கிறபோது அழுதுவிட்டார். கதறிவிட்டார் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் இவர்களை எல்லாம் விஜய் அழைத்து பேசுவதற்கு சிபிஐ விசாரணையும் ஒரு காரணம் என்று எண்ண தோன்றுகிறது.
ஒரு தெளிந்த அரசியல்வாதி என்பவர் இதுபோன்ற விபத்துக்களே நடக்காமல் பார்த்துக்கொள்வார். அப்படி தன்னையும் மீறி விபத்து நடைபெற்றால், அதை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்கு தெரியும். இதே சம்பவம் எம்ஜிஆரின் கூட்டத்தில் நடைபெற்று இருந்தால், அவர் மேடையில் இருந்து கீழே குதித்து இருப்பார். அவரை சுற்றியும் 10 பாதுகாவலர்கள் இருப்பார்கள். விஜய் கூட்டத்தில் நுழைந்த ரசிகரை, அவரது பவுண்சர்கள் தூக்கி வீசினார்கள். ஆனால் அதை விஜய் கண்டுகொள்ளவே இல்லை. பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக அப்படிதான் செய்வார்கள். ஆனால் தலைவர் என்பவர் அவருக்கு ஆறுதலாவது சொல்ல வேண்டும். தலைவர் என்பவர் மக்களுக்காக தான் இருக்கிறார்கள். விஜய் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


