
முதலமைச்சர் ஆவது அவ்வளவு எளிதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தொல்.திருமாவளவன் எம்.பி. மேடையில் பேசியதாவது, “முதலமைச்சர் ஆவது என்பது அவ்வளவு எளிதல்ல. முதலில் கட்சியை நடத்த வேண்டும், கட்சியை நடத்துவது அவ்வளவு எளிது இல்லை எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதனை சந்திக்க வேண்டும். மக்களை சந்தித்தாக வேண்டும் உட்கட்சி முரண்களை சந்திக்க வேண்டும். களப் பணிகள், மக்கள் சந்திப்பு, கட்சியின் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்வது தேர்தல்களை சந்தித்து கட்சி நிற்பது என்பதெல்லாம் அவ்வளவு எளிதல்ல.
தலைமை பண்பு என்பது வெறும் சொல் அல்ல வார்த்தை அல்ல அது தானாக வந்து விடாது. தலைமைப் பண்பு வருவதற்கு நம்ம செயல்பாடுகள் முக்கியமானது.நாம் சொல்லுவது ஒன்றும் செய்வது ஒன்றும் என மாறுபடக்கூடாது. மாறுபட்டால் நம்பகத்தன்மை இழந்துவிடும் நம்பகத் தன்மைய இழந்தால் தலைவராக நீடிக்க முடியாது. மாணவ பருவத்தில் இருந்தே சொல்லும், செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் தலைமை பண்பு வரும். நேரம் தவறாமல் அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும்.
தலைவர் என்று அறிவித்து விடுவது என்பது முக்கியமில்லை, சூழ்நிலையை அறிவது தான் தலைவருக்கான அழகு. தனி ஆளாக எதையும் சாதிக்க முடியாது. எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் அவருக்கு வேலை செய்ய ஒரு டீம் தேவைப்படுகிறது. முடிவு எடுக்கும் திறன் தெளிவாக இருக்க வேண்டும். அது தான் தலைமை பண்புக்கு முக்கியமானது. நாம் இல்லாமல் அரசியல் இல்லை. நாமும் சேர்ந்தது தான் அரசியல் நாமும் பங்கேற்க வேண்டியது தான் அரசியல். நம்மையும் இணைத்து தான் அரசியல் இங்கே இயங்குகிறது. அதிகாரம் இருப்பதினால் அரசியலில் பொருளாதாரத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

அரசியல் என்பது மிக உயர்ந்த நோக்கத்தை கொண்டது. அதிகார பீடம், மக்களுக்கான தேசத்திற்கானது;. எதிர்காலத்தை கட்டமைப்பதற்கானது; அரசுக்கான கொள்கையை வரையறுப்பது,; சட்டங்களை இயற்றுவது; இயற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது. இது தான் அரசு என மாணவர்கள் மத்தியில் பேசினார். ஒரு கட்சியில் உறுப்பினராகி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராவது என்பது அரசியல் இல்லை, மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய ஒரு களம் மனதில் இது தான் இருக்க வேண்டும். அது தான் அரசியல்வாதியின் தகுதி. அறிவு வளர வளர ஆளுமை திறன் வளரும். கல்வியை போல தான் விளையாட்டும் அனைவருடன் சேர்ந்து விளையாடுவது வெற்றி தோல்வி அனுபவங்கள் என அனைத்திலிருந்தும் கற்றுக்கொள்ள முடியும்.
அரசியல் என்பது ஆண்களுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் தான். மாணவ மாதிரி சட்டசபை நிகழ்ச்சி என்பது கலந்து கொண்ட மாணவர்களுக்குமானது இல்லை. ஒவ்வொரு மாணவருக்குமானது. நான் 8ம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியில் இதுபோல மாதிரி சட்டசபை நடைபெற்றிருக்கிறது. அன்று மாணவனாக இருக்கும் போது நான் இப்படி அரசியலுக்கு வருவேன். ஒரு கட்சிக்கு தலைவர் ஆவேன் என்று நினைக்கவில்லை. எந்த பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்தவன் வான். கல்வி தான் என் ஆற்றலை எனக்கு உணர்த்தியது. உங்களிலிருந்து நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.


