spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅஜித் சொன்ன அந்த வார்த்தை! மூடி மறைக்கும் ஊடகங்கள்! கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

அஜித் சொன்ன அந்த வார்த்தை! மூடி மறைக்கும் ஊடகங்கள்! கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!

-

- Advertisement -

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு விஜய் மற்றும் சில காட்சி ஊடகங்களை தவிர்த்து, மற்ற அனைவரும் கூட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று  பத்திரிகையாளர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த நடிகர் அஜித்குமாரின் பேட்டி தொடர்பாக பத்திரிகையாளர் சத்தியராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் நடிகர் அஜித்குமார் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் நேரடியாகவே விஜயை சாடி பேசுகிறார். பல ஊடகங்கள் அவர் அளித்த பேட்டியில் சில விஷயங்களை மட்டும் வெட்டி எடுத்து போட்டு விஜய்க்கு ஆதரவான கருத்து போன்று மாற்றுகிறார்கள். சிலர் எதுவுமே போடாமல் ஃபிளாட்டான ஸ்டேட்மென்ட் என்று போடுகிறார்கள். ஆனால் அஜித் தெரிவித்துள்ள கருத்தை நாம் மிகவும் கவனமுடன் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. அது நேரடியாக விஜய்க்கு ஒரு எச்சரிக்கைதான்.

பேட்டி எடுத்த பத்திரிகையாளர் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு யார் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நேரடியாக கேட்கிறார். அதற்கு பதில் அளித்த அஜித், கரூர் கூட்டநெரிசல் என்பது ஒரு தனிப்பட்ட நபரின் பொறுப்பு மட்டும் கிடையாது. இந்த துயரத்துக்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு. முக்கிய ஊடகங்களுக்கு இதில் பங்கு இருக்கிறது. கூட்டத்தை கூட்டி செல்வாக்கை காட்டுகிற ஒரு சமுதாயமாக நாம் மாறிவிட்டோம். முதல் நாள் முதல் காட்சி மீதான மோகத்தை ஊக்குவிப்பதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று அஜித் சொல்கிறார்.

இந்த கருத்தை சொல்ல தொடங்குகிறபோதே இந்த சம்பவத்திற்கு காரணம் ஊடகங்கள் தான் என்று அஜித் சொல்கிறார். அஜித் சொன்ன கருத்தை அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டார்களே தவிர, அவர்கள் யாரும் அஜித் என்ன சொன்னார் என்பதை துல்லியமாக சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள். அல்லது மறைக்கிறார்கள். விஜய் வீட்டில் இருந்து புறப்பட்டார். விமான நிலையம் வந்துவிட்டார் என்று முன்னணி தொலைக்காட்சிகள் தொடர்ச்சியாக நேரலை ஒளிபரப்பி விஜய்க்கு ஹைப்பை ஏற்படுத்துகிறார்கள்.

கரூர் சம்பவம் நடைபெற்ற பிறகு விஜய் உடனடியாக சென்னைக்கு திரும்பிவிட்டார். ஆனால் இந்த ஊடகங்கள் அவரிடம் இருந்து, சம்பவத்திற்கு தார்மீக வருத்தமோ, மன்னிப்போ கோரவில்லை. மாறாக விஜய் சோகமாக இருக்கிறார். விஜய் சாப்பிடவில்லை. விஜய் யாரிடமும் பேசவில்லை என்று தான் செய்திகள் வெளியிட்டனர். நடைபெற்ற சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பு யார் என்கிற விவாதத்தை கிளப்பாமல், விஜய் வருத்தமுடன் இருப்பதாக ஒரு சிம்பதியை தொலைக்காட்சிகள் எதற்காக ஒளிபரப்பின என்பதுதான் கேள்வி.

முதல் நாள் முதல் காட்சி மீதான மோகத்தை ஊடகங்கள், ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக சென்னை ரோகிணி திரையரங்கம், நெல்லையில் உள்ள சில திரையரங்குகளில் விஜய் ரசிகர்களால் இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. அஜித்குமார், ஊடகங்கள் இரு நடிகர்களை ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இரு நடிகர்களை ஒப்பிட்டு இவர் பெரியவரா? அவர் பெரியவரா? என்று கேள்வி எழுப்பி, இருவரது ரசிகர்களையும் தவறாக வழிநடத்திச் செல்வது ஊடகங்கள் தான் என்று அடித்துச் சொல்கிறார். அதை நாம் வரவேற்க வேண்டும். அஜித் பேசிய இந்த கருத்துக்கள் குறித்து எதாவது ஒரு தொலைக்காட்சி பேசி உள்ளதா? கரூர் சம்பவத்திற்கு விஜய் தான்தோன்றித்தனம் எப்படி ஒரு பொறுப்போ, அதே அளவுக்கு இந்த ஊடகங்கள் கொடுக்கும் ஹைப் ஆகும்.

140 கோடி மக்கள் வாழுகிற இந்தியாவில் மக்கள் கூட்டம் கூட்டுவது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. அதை வைத்து நாம் செல்வாக்கை காட்ட வேண்டிய தேவை இல்லை என்று அஜித்குமார் ஆலோசனை சொல்லியுள்ளார். அரசியல் என்பது மிகவும் கடினமானது. அரசியல்வாதிகளிடம் எதுவும் மந்திரக்கோல் கிடையாது. அவர்களிடம் நாம் தொடர்ந்து எதிர்பார்த்து கொண்டிருக்கக்கூடாது.  இலவசங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கக் கூடாது. இந்த பேட்டிக்கு பின்னர் என்னை விமர்சிக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் இதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

கரூர் சம்பவம் நடைபெற்ற உடன் தவெகவினர், ஊடகங்கள், நடுநிலையாளர்கள் என்று ஒட்டுமொத்தமாக திமுக மீது விமர்சனத்தை வைத்தார்கள். தமிழக அரசு திட்டமிட்டு நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும், செந்தில் பாலாஜி ஆள்வைத்து கொலை செய்ததாகவும் சொன்னார்கள். அரசியல்வாதிகள் குறித்து இவ்வளவு தவறான நேரேஷனை எப்படி தவெகவோ, நடுநிலையாளர்களோ முன்வைக்கிறார்கள்? இது தவறு என்பதைதான் அஜித் சொல்கிறார். இந்த விவகாரத்தில் எல்லோரும் தங்களுடைய பொறுப்பை உணர வேண்டும் என்று அஜித் சொல்கிறார்.

இந்த விவகாரத்தில் எல்லோரும் தங்களுடைய பொறுப்பை உணர்கிறார்கள். தமிழக அரசு தன்னுடைய பொறுப்பை உணர்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், எந்த அரசியல் கட்சி தலைவரும் தன்னுடைய தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று சொல்கிறார். முதல்வர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதேபோல் அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் பொறுப்பே எடுத்துக்கொள்ளாத ஒரே நபர் விஜய் மட்டும்தான். அதனால் அஜித் சொல்கிற இந்த கருத்தில் ஒரு சின்ன மாறுதல் என்ன என்றால்?

விஜயை தவிர்த்து மற்ற அனைவரும் கூட்டு பொறுப்பை எடுத்துக்கொண்டார்கள். விஜய் மற்றும் சில தொலைக்காட்சிகள் மட்டும் தான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு எடுத்துக்கொள்ளவில்லை. திமுகவுக்கு எதிராக விஜயை தூக்கி பிடிக்க வேண்டும் என்கிற சில ஊடகங்களின் பிரக்கிங் பசிக்காக மக்களை சாவடித்த பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. அஜித்தின் பேட்டி என்பது எந்த நடிகர்களுக்கும் வராத துணிவாகும். இதை வரவேற்க வேண்டும். அவருடைய பல கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோம். சில விஷயங்களில் உடன்பாடு இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ