அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவால் கர்நாடக தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க உள்ளது. அதிமுகவில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நீதிமன்ற இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் 10 நாட்களில் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகள், நிர்வாகிகள் மாற்றம் ஆகியவற்றையும் தேர்தல் ஆணையம் ஏற்றது.

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது பொதுச்செயலாளர் நியமனம், மூல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் வாதம் எடுத்துரைக்கப்பட்டது. இந்த மனு மீது 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.


