ஆலங்குளம் அருகே மனைவியை வெட்ட முயன்ற போது தன் உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றிய தாயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பவுண்ட் தொழு தெருவைச் சேர்ந்தவர் கருப்பு துரைச்சி (55). இவரது கணவர் சமுத்திரம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் மூத்த மகள் கோமதி திருமணமாகி கேரளாவில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் காளிராஜ் இவர் வீ.கே. புதூரில் சொந்தமாக டூவீலர் ஒர்கஷாப் நடத்தி வருகிறார். மூன்றாவது மகள் காளீஸ்வரிக்கும் சேர்ந்தமரம் அருகிலுள்ள கீழப்பொய்கை கிராமத்தில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பாலசுப்பிரமணியன் சமையல் எரிவாயு டேங்கர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இதனால் அவர் மாதம் ஒரு முறை அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறை தான் ஊருக்கு வந்து சில நாள்கள் வீட்டில் வந்து தங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. எப்போதாவது வீட்டிற்கு வரும் பாலசுப்பிரமணியன் தனது மனைவியிடம் தாய் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரச் சொல்லி வற்புறுத்துவார் எனவும் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்ப்பார் எனவும் கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினர் உறவினர்களும் இருவருக்கும் அறிவுரை கூறி வந்துள்ளனர். எனினும் சண்டை தீர்ந்த பாடில்லை. இந்நிலையில் கணவன் வேலைக்குச் சென்றிந்த போது காளீஸ்வரி தனது மகள்கள் 5 ஆம்வகுப்பு படிக்கும் வினிஷா, 3ம் வகுப்பு படிக்கும் மேகவர்ஷனா ஆகியோரை அழைத்துக் கொண்டு ஊத்துமலையில் நடந்த கோயில் கொடை விழாவில் பங்கேற்க கடந்த திங்களன்று வந்துள்ளார். எனினும் தாய் வீட்டிற்கு வருவது குறித்து கணவனிடம் கூறவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை முன் அறிவிப்பின்றி தனது ஊரான கீழப்பொய்கைக்கு, விடுமுறைக்காக வந்துள்ளார் பாலசுப்பிரமணியன். அங்கு மனைவி, குழந்தைகள் இல்லாதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர், மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் ஊத்துமலையில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஊத்துமலைக்குச் சென்ற பாலசுப்பிரமணியன் கடும் ஆத்திரத்தில் மனைவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டில் இளநீர் வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து, மனைவியை வெட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்செயலால் அதிர்ச்சியடைந்த காளீஸ்வரியின் தாயார், கருப்பு துரைச்சி, மகளைக் காப்பாற்றும் நோக்கில் குறுக்கே பாய்ந்துள்ளார். இதில் மகளின் கைப்பகுதியிலும் தாயின் கழுத்து பகுதியிலும் வெட்டு விழுந்துள்ளது. இதில் கருப்பு துரைச்சி ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
தனது கண் முன்னே தாய் வெட்டப்பட்டதைக் கண்ட காளீஸ்வரி, தாய் சலனமற்றுக் கிடப்பதைக் கண்டு கணவனின் சட்டையைப் பிடித்துக் கதறி அழுதார். உடனே பாலசுப்பிரமணியன் மனைவியைத் தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். காளீஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ஊத்துமலை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கருப்பு துரைச்சியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதே மருத்துவமனையில் காளீஸ்வரிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொலையை செய்து விட்டு சாவகாசமாக தனது ஊருக்குச் சென்று வீட்டில் இருந்த பாலசுப்பிரமணியனைப் ஊத்துமலை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், பாலசுப்பிரமணியன் டேங்கர் லாரியில் வட மாநிலங்களுக்கும் செல்வதால் மாதம் ஒரு முறையே வீட்டுக்கு வர முடியும், நல்ல சம்பளம் இருந்தாலும் குடும்பத்தில் கடன் இருந்து வந்தது. எனக்குத் தெரியமாலேயே வீட்டில் இருந்த தங்க நகைகளை அடகு வைப்பதும், கடன் வாங்குவதும், அம்மா வீட்டிற்குச் செல்வதுமாக மனைவி இருந்து வந்தாள். இதனால் அவள் நடத்தையிலும் எனக்குச் சந்தேகம் உண்டு.
வியாழக்கிழமை ஊருக்கு வந்த போது அவள் வீட்டில் இல்லை, ஊத்துமலைக்குச் சென்று பார்த்த போது, அடகு வைத்திருந்த 2 மோதிரம் ஏலத்திற்கு போவதாக இருந்ததால் கழுத்தில் அணிந்திருந்த செயினை அடகு வைத்து, மோதிரத்தை மீட்டுள்ளேன். எனவே செயினை மீட்க பணம் வேண்டும் என மனைவி கேட்டாள். எனவே கடும் கோபம் கொண்டு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்ற போது, மாமியார் குறுக்கே பாய்ந்ததால் மனைவிக்குப் பதில் மாமியார் உயிரிழந்துவிட்டாதாக பாலசுப்பிரமணியன் போலீஸார் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலசுப்பிரமணியனைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
டிக்-டாக் மூலம் அறிமுகம்.. ஏமாற்றிய காதல் மனைவி.. குழந்தைகளுடன் கண்ணீர் வடிக்கும் 5வது கணவர்..


