

2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஆயத்தமாகி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என இத்தேர்தலில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளை தங்களை பலப்பத்தும் முனைப்புடன் நிர்வாகிகள், பூத் ஏஜென்ட்டுக்கள் நியமனம், பொதுக்கூட்டம், பரப்புரை, தொண்டர்களை சந்திப்பது என கட்சிகளின் தலைமை சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கின்றன. இருப்பினும் தேமுதிக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிகள் இன்னும் உறுதியாகாமல் உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு விதமாக தயாராகி வரும் நிலையில், அதிமுக சில்லு சில்லாக உடைந்து கொண்டிருக்கிறது. அதிமுகவை பலமாக வைத்திருப்பதாக கூறி வரும் எடப்பாடி பழனிசாமி, சொந்தக் கட்சியினரையே அரவணைத்து செல்ல விரும்பாமல் அனைவரையும் கட்சியை விட்டு வெளியேற்றி வருகிறார். ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேற்றியவர்களை மீண்டும் இணைக்கும் எண்ணமும் அவரிடம் இல்லை. சொந்தக் கட்சியினருக்கே இந்த நிலை என்றால் கூட்டணிக் கட்சிகளுக்கு சொல்லவா வேண்டும்.
கட்சியில் உள்ள மூத்த தலைவர்களையும், நிர்வாகிகளையும், தொண்டர்களையும் எப்போதோ கை நழுவ விட்டுவிட்ட எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் போர்வைக்குள் பதுங்கிக்கொண்டு இன்னமும் அதிமுக பலமாக இருப்பதாக கூறிக்கொண்டு இருக்கிறார். பாஜக இணையதளங்கள், தொழில்நுட்பங்களை கையாண்டு மாற்ற மாநிலங்களில் செய்த யுக்திகளை போன்றே தமிழகத்திலும் செய்ய தொடங்கிவிட்டது. இப்படியான பின்வாசல் வழியாக நுழையும் வழியைத் தவிர தற்போது வேறு வழி இல்லை என்பதால் எடப்பாடி பழனிசாமியும் , பாஜகவின் கைப்பாவையாக மாறியுள்ளார்.
மௌனம் ஆபத்தானது :
“தீயவர்களின் கொடுஞ்செயலை விட, அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் மௌனம் மிக ஆபத்தானது” என்பார்கள். அப்படி ஒரு ஆபத்தான செயல்களைத்தான் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியும் செய்திருந்தார். தொடர்ந்து செய்துகொண்டும் இருக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளை வெளிமாநிலத்தவர்களும் எழுதலாம். அவர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை; தேர்வில் தேர்ச்சி பெற்றபின் 2 ஆண்டுகளுக்குள் அவர்கள் தமிழை கற்றுக்கொண்டால் போதும் என்கிற அறிவிப்பு வெளியானது. இந்த வழக்கம் 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே எஸ்.எஸ்.சி, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதே கேள்விக்குறிதான். ஏற்கனவே நாடு மூழுவதும் உள்ள ரயில்வே அதிகாரிகளாகவும், மத்திய அரசு அலுவலகங்களிலும் வட இந்தியர்களின் ஆதிக்கமே கொடிக்கட்டி பறக்கிறது.

இதில் இந்த அறிவிப்பின் பலனாக கிரமப்புறங்களில் உள்ள இந்தியன் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மாநில பொதுத்துறை அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் வட இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டனர். பெரும்பாலான கிராமப்புறங்களில் பொதுமக்கள், ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் கொஞ்சம் கூட தமிழ் தெரியாத வட மாநிலத்தவர்களே அலுவலர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்தனர். இதனால் பொதுமக்கள் தேவைகளை புரிந்துகொள்ள முடியாமலும், அவர்கள் கூறுவதை பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்காக தனியே மொழி பெயர்ப்பாளர்களை நியமித்து பணியாற்றும் சூழல் ஏற்பட்டது. இது காலப்போக்கில் சரியாகிவிடும் நிலைதான் என்றாலும், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு நம் நாட்டிலேயே பறிபோகும் அபாயம் இருப்பதை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணரவில்லை போலும். ஆகையாலே மத்திய அரசின் கைப்பாவையாகி மௌனமாக இருந்துள்ளார்.
ஆனால் 2021 தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இந்த ஆபத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழியை கட்டாய தகுதி தாளாக அறிவித்து உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தகுதித்தேர்வாக நடத்தப்படும் என்றும், தமிழில் 40 பெறாவிடில் இதர தாள்கள் திருத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் பலனாக தமிழக அரசுப் பணிகளில் 90% தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆபத்து :
இதேபோன்றுதான் நாட்டில் அடுத்தடுத்து நிகழப்போகும் அபாயங்களை அறிந்தும் எடப்பாடி மௌனம் சாதித்து வருகிறார். SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஆபத்தை உணர்ந்தும், அதை அறியாதவராக பாஜகவுக்கும் ஆதரவு தெரிவித்து மௌனமாக இருந்து வருகிறார். எஸ்.ஐ.ஆர் மிகவும் ஆபத்தானது என ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும் கண்டன குரல் கொடுத்து வரும் நிலையில், சிரித்த முகமாக எடப்பாடி பழனிசாமி மட்டும் ‘எஸ்.ஐ.ஆர் என்கிற வார்த்தையை கேட்டாலே திமுக பயப்படுகிறது. இறந்த வாக்காளர்களை மட்டுமே நீக்குகிறார்கள்” என்கிறார். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நிக்கப்பட்டுள்ளார்களே என கேள்வியெழுப்பினால், பீகாரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் தமிழகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறேன் என்கிறார் பாஜகவின் கைப்பாவையாக..

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காள சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை டிசம்பர் 4ம் தேதிக்குள் B.L.O.-க்கள் வழங்கும் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதுவும் மூன்று முறை மட்டுமே அவர்கள் வீடு தேடி வர இருக்கிறார்கள். அந்த நேரங்களில் நாம் வேலைக்குச் சென்று விட்டால், ஏதாவது பணிகளுக்குச் சென்று விட்டால், வீட்டில் இல்லாமல் இருந்தால், நம்முடைய வாக்குரிமையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதில் வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்.
அவ்வாறு டிச.4க்கு உள்ளாக அளிக்கப்படும் பெயர்கள் மட்டும்தான் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்ற ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பணி முடிந்த பிறகு ஆன்லைனில் நாம் தொடர்பு கொண்டு சேர்க்கின்ற முயற்சி இருக்கிறது. ஆனால் இது ஏழை எளியவர்கள், உழைப்பாளர்கள், கிராம மக்கள் , கல்வியறிவு பெறாத மக்களுக்கு எத்தகைய கடும் சவால்களை கொடுக்கும் என்பதை யோசிக்க வேண்டும். அதுவும் தேர்தல் நேரத்தில் எவ்வளவு பெரிய நெருக்கடியான , ஆபத்தான சூழல் என்பதை உணர வேண்டும்.
இந்த ஒரு மாதத்திற்குள்ளாக வாக்காளர் பட்டியலில் இடம்பெறாவிட்டால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும். இதுவே மத்தியில் ஆளும் பாஜகவிற்கு தேவைப்படும் ஒன்றாகும். பிற மாநிலங்களில் அரங்கேறியுள்ள வாக்கு திருட்டை போன்று, தமிழகத்திலும் பூத் ஏஜெண்டுகளுக்கூட தெரியாமல் centralised software மூலம் போலி வாக்காளர்களை சேர்த்து புறவாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் தான் சக கட்சித் தலைவர்கள் வேண்டாம், சொந்த கட்சியின் மூத்த தலைவர்கள் , நிர்வாகிகள் வேண்டாம், தொண்டர்கள் வேண்டாம்; ஆனால் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று மட்டுமே யோசித்து எடப்பாடி பழனிசாமியும் மௌனியாக இருந்து வருகிறார்.
இதுஒருபுறமிருக்க பிரபல யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்களைக் கொண்டு மறைமுகமாக அதிமுக – பாஜக வெற்றி வாய்ப்புகள் குறித்த பரப்புரைகள் தொடங்கப்பட்டுவிட்டன. தொகுதிவாரியான கருத்துக்கணிப்புகள் என்கிற பெயரில் பல இடங்களில் அதிமுக – பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும், பல இடங்களில் திமுக – அதிமுக சமநிலையில் (இழுபறி) இருப்பதாகவும் மாய தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே மக்கள் நலனில் அக்கறை கொண்டு எதிர்ப்புக் குரலை பதிவு செய்ய துணியாத எடப்பாடி பழனிசாமி, 2026ல் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் வாக்குரிமைகள் பறிபோவது, தேசிய கல்விக்கொள்கை அமலுக்கு வரலாம், அரசுப்பணிகளில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாவது, தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகள் முடக்கப்படுவது உள்ளிட்ட பல அதிரடியான சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. அவர் முழுக்க முழுக்க மத்திய அரசின் கைப்பாவையாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அடகு வைத்துவிடுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..


