spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆதாரத்தை வெளியிட்ட PTR! அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்! SIRல் நடக்கும் தில்லு முல்லு!

ஆதாரத்தை வெளியிட்ட PTR! அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்! SIRல் நடக்கும் தில்லு முல்லு!

-

- Advertisement -

தமிழகத்தில் பெரும்பான்மையான எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளதை ஆதாரங்களுடன் அமைச்சர் பிடிஆர் தவறானது என்று நிரூபித்துள்ளதாக பத்திரிகையாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்டிடிவிக்கு போட்டி அளித்துள்ளார். அதில் அமைச்சர் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து பத்திரிகையாளர் சத்யராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை முக்கால்வாசி முடித்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணிகள் தொடங்கிய 3 நாட்களுக்குள்ளாக கிட்டத்தட்ட 78 சதவீதம் மக்களை நேரில் சந்தித்து விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றை நிரப்பி வாங்கிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் தங்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் வரவில்லை என்று அதிருப்தி தெரிவித்தும் இருந்தனர்.  இந்த நிலையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் குறித்த புள்ளி விபரங்களுடன் என்டிடிவிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அனைத்து தரவுகளும் அடிப்படையில் தவறானவை என்பதை நிரூபணம் அவர் செய்திருக்கிறார்.

தேர்தல் ஆணையம் முதல் 3 நாட்களில் 78 – 80 சதவீதம் வரை எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் வழங்கிவிட்டதாக சொல்கிறது. ஆனால், களநிலவரம் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் உள்ள தரவுகளின் படி முதல் 3 நாட்களில் 25 முதல் 27 சதவீதம் பேருக்கு தான் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் 78 சதவீதம் விண்ணப்பம் விநியோகிக்கப் பட்டதாக சொல்கிறார்கள்?. அவர்களின் தரவுகளின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவிடும் பணிகளில் திமுகவின பாக முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தரப்பில் இதுவரை வாக்குச்சாவடி அலுவலர்களால்  10 முதல் 12 சதவீதம் விண்ணப்பங்கள் தான் பொதுமக்களிடம் வழங்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில், மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் குழுவினர் தரவுகளை சேகரித்து, அதனை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிட்ட 4 வாக்குச் சாவடிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், வாக்குச்சாவடி ஒன்றுக்கு அதிகபட்சமாக 300 பேர் வரை தான் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் திமுக சார்பில் ஒரு குழுவும் மக்களிடம் நேரடியாக சென்று எவ்வளவு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் எவ்வளவு விண்ணப்பங்கள் திருத்தப்பட்டு இருக்கிறது என்கிற விவரங்களையும் சேகரித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக 20 முதல் 25 சதவீதம் விண்ணப்பங்கள் தான் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படவே இல்லை. எனவே தேர்தல் ஆணையம் சொல்கிற தரவுகள் உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை.

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எஸ்.ஐ.ஆர் ஒரு உள்நோக்கத்துடன் நடத்தப்படுவதாக தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் வாக்காளர் பட்டியல் விவரங்களை கேட்டால் முன்பு மெஷின் ரீடபிள் பார்மேட்டில் எக்ஸெல் ஷீட்டில் வழங்குவார்கள். அதனை கணினி உதவியுடன் ஆய்வு செய்து, பலமுறை இடம்பெறும் வாக்காளர்களின் பெயர்களை எளிதாக கண்டறியலாம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் அப்படி எளிதாக கணினியில் கண்டறிய முடியாத வகையில், மெஷின் ரீடபிள் இல்லாத பி.டி.எப் பார்மேட்டில் வழங்குகிறது. அப்போது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் ஏதோ ஒரு திட்டமிட்ட உள்நோக்கம் இருப்பதாக அமைச்சர் பிடிஆர் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் தகவல்களை மறைப்பதற்கு 2 காரணங்கள் இருக்கலாம். ஒன்று ஆணையம் வாக்காளர் பட்டியல் பணிகளை சரியாக செய்யவில்லை. மற்றொன்று குறிப்பிட்ட பகுதியின் வாக்காளர் பட்டியல் விவரங்கள் யாருக்கும் கிடைத்துவிட கூடாது என்று திட்டமிட்டு இதை செய்யலாம் என சொல்கிறார். பிடிஆரின் இந்த கேள்விக்கு தேர்தல் ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும்.

அமைச்சர் பிடிஆர், பிஎல்ஓ-க்களால் எஸ்.ஐ.ஆர் பணிகளை சரிவர செய்ய முடியாது என்பதற்கான ஆதாரங்களையும், அவர்கள் எதிர்கொள்கிற சிக்கல்கள் குறித்தும் களத்தில் உள்ள நிலவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார். 2002 , 2005ஆம் ஆண்டுகளில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கு எல்லாம் வாக்குகள் இருந்ததோ அவர்களுக்கு தேர்தல் ஆணையம் வாக்குரிமையை வழங்கிவிடலாம். 2005க்கு பிறகு வந்த புதியவர்களுக்கு மட்டும் எஸ்.ஐ.ஆர் விவரங்களை பரிசோதிக்கும்போது சிக்கல் இருக்காது. வேலையும் சற்று குறையும் என்று அமைச்சர் சொல்கிறார். ஆனால் தேர்தல் ஆணையம் அக்.28ல் தமிழ்நாட்டில் உள்ள அனைவருடைய வாக்குகளும் செல்லாது என்று அறிவித்துவிட்டது.

நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை அனைவரும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களை புதிதாக வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டது. ஆனால் இந்த ஒரு மாதத்திற்குள்ளாக விண்ணப்பங்களை பெறுவது தொடர்பாக பிஎல்ஓ-க்களுக்கு ஏதேனும் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கிறதா? என்று அமைச்சர் பிடிஆர் வினா எழுப்பியுள்ளார். எந்த வித பயிற்சியும் இல்லாமல் அடிமட்டத்தில் இருக்கின்ற அங்கன்வாடி ஊழியர்கள், நகராட்சி பணியாளர்கள், பள்ளிகளில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்களை பணிகளில் ஈடுபடுத்துகிறபோது, அவர்கள் உண்மையிலேயே மிகவும் சிரமப்படுகிறார்கள்.

தனது பேட்டியில் வடக்கு மதுரை சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு அமைச்சர் பிடிஆர் ஒரு விஷயத்தை சொல்கிறார். இந்த தொகுதி 2005ஆம் ஆண்டிற்கு பிறகு உருவாக்கப்பட்டதாகும். அதனால் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதிகளில் ஒட்டுமொத்த வாக்காளர்களையும் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்த்திட வேண்டும். ஏற்கனவே வேறு தொகுதிகளில் வாக்காளர்களாக இருந்தவர்கள், குறிப்பிட்ட புதிய தொகுதியை உருவாக்கும்போது அவர்களை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. புதிதாக விண்ணப்பங்களை வழங்கி சேர்ப்பதால், பிஎல்ஓக்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கிறார். அதையும் ஒரு புதிய தொகுதியில் ஒட்டுமொத்த தொகுதிக்கும் புதிதாக விண்ணப்பம் கொடுத்து வாங்கும்போது, அங்கிருக்கும் மக்களுக்கே நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக 2005க்கு பிறகு உருவாக்கப்பட்ட பல தொகுதிகளில் வாக்குகள் பறிக்கப்படும் என்பதுதான் அமைச்சர் பிடிஆரின் கருத்தாக உள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தெரிவிக்கும் படிவம் 17 மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை குறிப்பிடும் படிவம் 20 ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வழங்காதது ஏன்? என்றும் பிடிஆர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு தேர்தலில் பதிவாகிய வாக்குகளும், எண்ணப்பட்ட வாக்குகளும் சரியாக இருக்கும்போது தான் அந்த தேர்தல் நியாயமாக நடைபெற்றது என்று அர்த்தம். ஆனால் படிவம் 17 மற்றும் படிவம் 20ல் உள்ள விவரங்கள் ஒத்துபோவது கிடையாது. வாக்களிப்பது மற்றும் வாக்கு எண்ணிக்கை விவரங்களில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்ததை அடுத்து இந்த 2 படிவங்களையும் வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் நிறுத்தி விட்டது. ஆவணங்களை மறைப்பது ஏன்? என பிடிஆர் கேள்வி எழுப்பி இருப்பதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மை  மீது மிகப்பெரிய சவுக்கடி விழுந்துவிட்டது. அவருடைய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்கிறதா? என்று பொருத்திருந்து பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ