எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லாவிட்டால், பாஜக எதற்காக அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடத்துகிறது? என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ்நாட்டைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவின் போராட்டம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- எஸ்.ஐ.ஆர் பணிகளில் திமுக அடாவடி செய்வதாக குற்றம்சாட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிமுகவினரின் இந்த நடவடிக்கைகள் திமுகவுக்கு தான் சாதகமாக முடியும். அதிமுகவுக்கு எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை தான் உள்ளது. தற்போது தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் தான் மாநில அரசு ஊழியர்கள், பணிபுரிகிறார்கள். அப்படி முடியவில்லை என்றால், பிரதமர் மோடியிடம் பேசி ஊழியர்களை தேர்தல் ஆணையத்த்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்காக தான் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
முதலில் எஸ்.ஐ.ஆரை ஆதரிப்பதாக சொல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது எஸ்.ஐ.ஆரை ஆதரிக்கிறோம். ஆனால் ஊழியர்கள் எல்லாம் அரசின் பக்கம் இருக்கிறார்கள் என்று சொல்கின்றனர். திமுகவினரை போன்று அதிமுகவும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு சென்றால் அவர்களால் முறைகேடு செய்ய முடியுமா? கட்சியின் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் திமுகவினரோடு அனுசரித்து செல்கின்றனர். ஜெயலலிதா இருந்தால் இப்படி நடக்குமா?

பி.எல்.ஓ-க்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால், எஸ்.ஐ.ஆர் விண்ணம் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பிஎல்ஓக்களுக்கே அரசியல் கட்சியினர் தான் சொல்லித் தருகிறார்கள். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் மாநில அரசை குறை சொல்வதால் எந்த பயனும் கிடையாது. எஸ்.ஐ.ஆரை ஆதரிப்பதாக சொன்ன போதே, அவர்களுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை என்று தெரிந்துவிட்டது.எஸ்ஐஆர் வேண்டாம் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு சேர்த்து, எஸ்ஐஆர் வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர்.
அடிப்படையே தெரியாமல் அரசியல் செய்கிறார்கள். கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை முடுக்கிவிடுவதை விடுத்து அதிமுக வழக்கு தொடர்கிறது. அதை செய்யாமல் எல்லாவற்றுக்கும் வழக்கு தொடர்ந்தால் ஒன்றும் ஆகி விடாது. பீகாரில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த பாஜகவினர், தங்களுடைய அனுபவங்களை தமிழ்நாட்டு பாஜகவினருக்கோ, அதிமுகவினருக்கோ கடத்தவில்லை. அதற்கு மொழி ஒரு தடையாக இருக்கிறது.

எஸ்.ஐ.ஆர் பணிகள் கிராமப்புற பகுதிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை நிரப்புவது தொடர்பாக தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் மக்களுக்கு உதவி செய்கின்றனர். மக்களும் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை நிரப்புகிறார்கள். ஆனால் சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் எஸ்.ஐ.ஆர் பணிகள் தொய்வாக நடைபெறுகிறது. தினமலர் நாளிதழில் வெளியான செய்தியில் இதுவரை 10 சதவீதம் விண்ணப்பங்கள் தான் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். மற்ற விண்ணப்பங்கள் தரப்படாவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கி விடுவார்கள். வாக்குகள் நீக்க நீக்க பாஜகவுக்கு சாதகமாகும். எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணிப்பது என்பது முட்டாள்த்தனமானது ஆகும்.
திமுக தங்கள் வாக்குகள் மட்டுமின்றி தங்களின் கூட்டணி கட்சிகளின் வாக்காளர்களையும் காப்பாற்றிவிடும். ஆனால் அதிமுக என்ன செய்யும்? எஸ்ஐஆர் பணிகள் தொடங்கி 17 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எஸ்ஐஆரை எதிர்கொள்வது குறித்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக, திமுக எஸ்.ஐ.ஆர் பணிகளை கவனித்து வருகிறார்கள். ஆனால், பாஜகவுக்கு அதிமுக நிச்சயம் பார்க்காது. வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் அதிகளவு பாஜகவினர்தான் நீக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆரில் வாக்காளராக சேர்வதற்கான ஆதாரமாக, பீகார் எஸ்.ஐ.ஆர். பட்டியலில் பெயர் இருந்தால் போதும், வேறு ஆவணங்கள் தேவை இல்லை என்று தேர்தல் ஆணையம் 13வது ஆவணமாக சேர்த்துள்ளது. இதன் படி பீகார் தேர்தலில் வாக்களித்தவர்கள், தமிழ்நாட்டில் சராசரி குடிமகனாக சேரும் வாய்ப்புள்ளது. எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கபில் சிபில், 13வது ஆவணமாக பீகார் எஸ்.ஐ.ஆரை சேர்த்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது நாட்டில் முதன் முறையாக பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடைபெற்றுள்ளதால் அதை ஆதாரமாக வைத்ததாக தெரிவித்தனர். ஆனால் இது ஏற்கக்கூடியது அல்ல. இது மிகவும் அராஜகமானது. அப்படி பீகார் மாநிலத்தவரை தமிழ்நாட்டில் சேர்த்தால் 4 மாதங்களுக்கு முன்பு பீகாரில் வாக்களித்தவர்கள், தமிழ்நாட்டில் மீண்டும் வாக்களிப்பார்கள். இந்த பிரச்சினைகளோடு தான் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டாக வேண்டும். எஸ்.ஐ.ஆரை ஆதரித்து அதிமுக செய்வது ஏற்புடையது அல்ல. எஸ்ஐஆரை அதிமுக ஆதரிப்பது சராசரி தொண்டர்களுக்கு ஏற்புடையது அல்ல.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் எதற்காக அண்ணாமலை கூட்டம் போட வேண்டும். வானதி சீனிவாசன் மொத்த பழியையும் தூக்கி திமுக மீது போடுகிறார். பிஎல்ஓ-க்களுக்கு பயிற்சி இல்லை என்றால் அவர் குற்றம்சாட்ட வேண்டியது தேர்தல் ஆணையத்தை தான். அர்ச்சனா பட்நாயக், தேர்தல் ஆணையத்தின் ஊழியர். அவர் ஞானேஸ்வர்குமாரின் கீழ்தான் பணி புரிகிறார். இந்த அடிப்படை விஷயம் கூட அதிமுக, பாஜகவுக்கு தெரியவில்லை. திமுக எதிர்ப்பதை எல்லாம் ஆதரிப்போம் என்று வரிந்து கட்டிக்கொண்டு போய் நின்றார்கள். அதற்கு தற்போது விலை கொடுக்கிறார்கள்.
டி.என்.சேஷன் போன்றவர்கள் காலத்தில் எவ்வளவு வாக்காளர்களை உயர்த்த முடியுமோ அவ்வளவு அதிகரித்து, வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்று நினைத்தனர். ஆனால் தற்போதுள்ள தேர்தல் ஆணையம் எவ்வளவு பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியுமோ, அவ்வளவு பேரை நீக்க வேண்டும். வாக்குப்பதிவு சதவீதத்தை முடிந்த அளவுக்கு குறைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். எனவே முடிவு மக்கள் கைகளில் தான் இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


