எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் யாருடைய வாக்குரிமையும் பறிபோக கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாகவும், ஆனால் அதிமுக, தவெக அப்படியான நிலைப்பாட்டை எடுக்காதது வருத்தத்திற்குரியது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


எஸ்.ஐ.ஆர். விவகாரம், அதிமுக – பாஜக கூட்டணி உள்ளிட்டவை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவு இருப்பதால் அறிவுத் திருவிழா நடத்துகிறோம் என்று சொல்லியுள்ளார். அறிவு இருப்பதாலும், அறிவை பேணி பாதுகாக்க வேண்டும் என்கிற விருப்பம் இருப்பதாலும் இதனை நடத்துகிறார்கள். சில விஷயங்களை ஆண்டுதோறுமோ, அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ மக்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மறந்துபோவது மக்களின் இயல்பு. மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும். அறிவுத்திருவிழா குறித்து விஜய் போன்றவர்கள் பேசுவது அறிவீணமாகும். அறிவு போதாமையை தான் இது காட்டுகிறது. அறிவை நாம் இன்னொரு தலைமுறைக்கு கடத்துகிறபோது அதை எதிர்ப்பது மேட்டுக்குடிதான்.
பேராசிரியர் அன்பழகனாரின் தந்தை நூல் விற்பனை நிலையம் நடத்தினார். திராவிட இயக்க பத்திரிகைகளை விற்பனை செய்ய ஆள் இல்லாதபோது, திராவிட இயக்க தோழர்கள் அவர்களே நூல் விற்பனை நிலையங்களை நடத்தினார்கள். பலர் பத்திரிகை முகவர்களாக செயல் பட்டிருக்கிறார்கள். அப்படி எல்லாம் வளர்ந்தது திராவிட இயக்கம். 75 வருடங்கள் ஆனாலும் இது 750 வருட இயக்கம் போன்றதாகும். யோசித்து பார்த்தால் இதனுடைய வேர்கள் எல்லாம் மிகவும் முன்னால் இருந்து இருக்கும். உணர்வுக்கு அண்ணா அரசியல் வடிவம் கொடுத்தார். அந்த உணர்வு ராவணன் காலம் முதலே இருந்து வருகிறது. அதற்கு வடிவம் கொடுத்தவர் புலவர் குழந்தை.

தமிழ்நாட்டின் உணர்வுகளை எம்ஜிஆர் புரிந்துகொண்டு தான், 1977ல் ஐந்து விவகாரங்களில் திமுகவும், அதிமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிவிட்டார். சமூகநீதி, மாநில சுயாட்சி போன்ற எல்லாம் இதில் வந்துவிடும். செயல்திட்டங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது உண்மையான திராவிட இயக்க பற்றாளர்களுக்கு வருத்தம்தான். அதிமுக மீது எனக்கு பரிவு உண்டு. காரணம் எம்ஜிஆரின் பத்திரிகையில் தான் நான் பத்திரிகையாளராகவே ஆனேன். அதை மறுக்கவில்லை.
ஆனால் அந்த 5 அடிப்படை உணர்வுகளில் இருந்து எப்போது அதிமுக விலகுகிறபோது, அது அதிமுக இல்லை என்று ஆகிறது. திராவிட இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று முயற்சித்தவர் பிஜு பட்நாயக் முயற்சித்தார். அதற்கு எம்ஜிஆர், கலைஞர் சம்மதித்தபோதும், இரண்டாம் கட்ட தலைவரகளிடம் கடத்தவில்லை. அந்த இணைப்பு சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. தற்போது எதோ ஒரு வகையில் திமுக, அதிமுக இணைவதற்கான காலம் வந்துவிட்டதோ என்கிற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.

SIR வருவதற்கு முன்பு இருந்து அது மிகவும் கடினமானது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நாம் எதிர்க்கவில்லை. அதை ஏற்படுத்துவதற்கான அவசரத்துக்கு பின்னால் சதி இருக்கிறது என்று நாம் சந்தேகிக்கிறோம். நாளையில் இருந்து SIR பணிகளில் ஈடுபட மாட்டோம் என்று அரசு ஊழியர்கள் சங்கம் ஏன் அறிவித்துள்ளது? அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கவில்லை என்று திமுக அரசு மீது குறைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். SIR பணி என்பது வெறுமனே விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றை நிரப்பி பெறுவது மட்டும் அல்ல. அவற்றை இணையத்தில் பதிவேற்றி, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த பணிகளை ஒரு மாதத்தில் முடித்து வரைவு பட்டியலை வெளியிட வேண்டும். ஒரு வருடம் செய்ய வேண்டிய வேலையை ஏன் ஒரு மாதத்தில் அவசரமாக செய்ய வேண்டும்? அந்த கேள்விக்கு இதுவரை பதிலே கிடையாது. எதார்த்தத்தில் இந்த வாக்காளர் பட்டியல் பழைய பட்டியலை விடவும் மோசமாக இருக்கும். அப்போது இதில் என்ன பயன் இருக்கிறது? இந்த கேள்வியை கேட்டலே இங்கே தவறு என்றாகி விடுகிறது.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டித்து விஜய் போன்றவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த கேள்விகளை எல்லாம் அவர்கள் முன்வைத்திருந்தால் பாராட்டலாம். ஆனால், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை திமுக தவறாக செய்கிறது என்பது போன்று அவர் பேசினார். ஆளுங்கட்சி எப்படி தவறாக செய்ய முடியும்? திமுகவினர் வராவிட்டால் தங்களால் மனுக்களை விநியோகம் செய்திருக்கவே முடியாது என்று வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறியுள்ளனர்.
அப்படி திமுக உதவி செய்து வாக்காளர் பட்டியல் தயார் செய்தாலும், அதற்காக திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். திமுகவின் உழைப்பில் மற்ற கட்சிகள் தான் பயன்பெற போகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதையே தான் யாருடைய வாக்குரிமையையும் பறிக்கக்கூடாது. யாருடைய வாக்குரிமையும் பறிபோகக் கூடாது என்று சொல்கிறார். அப்படியான ஒரு இலக்கை அதிமுக, தவெக வகுத்திருந்தால் நமக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.

எம்.ஜி.ஆர் 1977ல் கொண்டு வந்ததை போன்ற மாற்றத்தை விஜய் கொண்டு வருவார் என்று சொல்கிறார்கள். எம்ஜிஆர் கால கட்ட மாற்றம் என்றால் 1979ல் வந்த தேர்தலில் எம்ஜிஆரும் தோற்று இருக்கிறார். கூட்டணி மற்றும் அந்த கூட்டணிக்கான கணக்குகள் மிகவும் முக்கியம். அதைவிட முக்கியம் கூட்டணியின் கெமிஸ்ட்ரி. சாணக்யா கருத்துக்கணிப்பில் சொல்வது போல அதிமுக, பாஜக, தவெக 3 கட்சிகளும் ஒரு அணியாக அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் கணக்கு படி அதிமுக 20, பாஜக 10, தவெக 10 என மொத்தம் 40 சதவீதம் வாக்குகள் என்பதுதான் கணக்கு.
பாஜக பெற்ற வாக்குகள் என்பது, திமுக – அதிமுக எதிர்ப்பு வாக்குகளாகும். அதேபோல் அதிமுகவில் பலர் வெளியேறிவிட்ட நிலையில், பழையபடி 20 சதவீதம் வாக்குகள் அவர்களுக்கு வராது. இன்றைய சூழலில் ஏறத்தாழ 25 சதவீதம் வந்தாலே பெரிது. இதில் விஜய் ஒரு பங்களிப்பும் தர மாட்டார்கள். அவருடை சிங்கிள் பாப்புலாரிட்டியை தவிர. அதற்கு அவர் கொடுக்கப் போகிற விலை என்பது அனைத்து பிரச்சார கூட்டங்களுக்கும் போக வேண்டும். விஜய்தான் முதலமைச்சர் என்று நம்புகிற அவருடைய கட்சியினருக்கு ஏமாற்றம்.இது அவருக்கு மைனஸ் பாய்ண்ட் ஆக அமையும்.

3 பேரும் சேர்ந்தாலும் 35 சதவீதத்திற்கு மேலாக வாங்க முடியாது. மறுபுறம் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி விஜயுடன் சேர்ந்துவிடும் என்கிறார்கள். அப்படி விலகினால், திமுகவுக்கு தான் நல்லது. காங்கிரஸ் கொடுக்கும் இடத்திற்கு அவர்கள் வெற்றி பெற இவர்கள்தான் பாடுபட வேண்டும். அந்த 25 இடங்களை வைத்து புதிய கட்சியை கொண்டுவந்தால், திமுக கூட்டணி இன்னும் வலிமையாகும். மற்றொருபுறம் காங்கிரஸ், தவெக சேர்ந்தால் கிட்டத்தட்ட 4 அணிகள் உருவாகிடும். 2 அணிகளுக்கு இடையில் 5 முதல் 10 சதவீதம் வாக்கு வித்தியாசம் இருந்தால் முதல் இருக்கும் அணிக்கு, 200 சீட் வரும்.
பிகாரில் பாஜகவுக்கு 200 இடங்கள் என்றுதான் நாங்கள் கணக்கு போட்டோம். என்.டி.ஏ – இந்தியா கூட்டணி இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது 8 சதவீதம் ஆகும். அதில் 200 இடங்கள் வந்துள்ளது. தமிழ்நாட்டில் 1971 உதாரணமும் அதுதான். 5 சதவீதம் வித்தியாசம் வந்தால் ஒரு இடத்தில் அடித்துச் சென்றுவிடும். ஜெயித்தவர்களுக்கு எல்லாம் போய்விடும். இந்த மாதிரியான சிஸ்டம் இப்படிதான் இருக்க முடியும். என்னுடைய கணக்குப்படி கூட்டணிகள் இப்படிதான் போகிறது என்றால்? திமுக 180 – 200 இடங்கள் வரை வெல்லும் என்பதுதான் என்னுடைய கணக்கு ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


