2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 104 தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளதாகவும், மு.க.ஸ்டாலின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் நடைபெறும் SIR பணிகளால் நடைபெற போகும் ஆபத்துக்கள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் நேர்காணல்:- SIR நடவடிக்கையால் பிஎல்ஓக்கள், வாக்காளர்கள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள். இதனை எதிர்த்து திமுக தொடர்ந்துள்ள வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. என்னை பொருத்தவரை SIRக்கு தீர்வு என்பது நிச்சயம் கிடைக்காது. SIR நடத்தப்பட்டு ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். பீகார் மாநிலத்தவர்கள், வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட ஒரு கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப் படுவார்கள். 104 தொகுதிகளில் திமுக 5000 முதல் 10000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. 46 தொகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்று இருக்கிறது. இந்த தொகுதிகள் அனைத்திலும் வாக்காளர்கள் நீக்கம் நடைபெறும்.
பெயர்கள் சேர்க்கையும் நடைபெறும். இதன் மூலம் ஆட்சி மாற்றமும் நடைபெறும். ஆனால் திமுக இதை பார்த்துக்கொண்டே தான் இருக்கும். அனைத்தும் நம் கண் முன்னால் தான் நடக்கும். உச்சநீதிமன்றம் சென்றாலும், ஒன்றும் நடக்காது. மக்கள் தரையில் இறங்கி போராடா விட்டால் இதற்கு வாய்ப்புகளே கிடையாது. மக்களின் வாக்குகளை திருடக்கூடிய மிகப்பெரிய அயோக்கியத்தனத்தை தேர்தல் ஆணையம் செய்துகொண்டிருக்கிறது.

SIR நடவடிக்கை காரணமாக அரசு அதிகாரிகள், பிஎல்ஓக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். 2002 தரவுகள் பாதி பேருக்கு கிடைக்கவில்லை. வெளி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பியவர்களின் தரவுகளை எடுக்க முடியவில்லை. பாதி பேருக்கு வாக்குகள் இல்லாமல் போகும். மம்தா பானர்ஜி புறக்கணித்ததை போல தமிழ்நாடும் புறக்கணித்திருக்க வேண்டும். திமுக சட்டப் போராட்டம், மக்கள் போராட்டம் நடத்துவது எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடாது. பாஜக 146 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தார்கள் என்றால்? கண்டிப்பாக ஆட்சி மாற்றம் உறுதி. பாஜக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் வருவதற்கு மிகப்பெரிய வாய்ப்புகளும் இருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எஸ்.ஐ.ஆர் காரணமாக ஒரு கோடி பேரை நீக்கியதால் பீகாரில் பாஜக ஆட்சி அமைத்ததாகவும், அதேபோல் எஸ்ஐஆரால் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும் கூறியுள்ளார். அவர் உண்மையை தான் சொல்கிறார். திமுகவுக்கு வாக்களிப்பவர்கள், சிறுபான்மையினர், தலித்துகள் போன்ற ஒரு கோடி பேரை நீக்கிவிட்டால், நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையை பாஜக கொடுத்திருக்கும். அதை திண்டுக்கல் சீனிவாசன் பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.

திமுக நம்பிக்கையோடு எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறபோது அவர்களின் நம்பிக்கை உடைபடும். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஒரு கோடி பேர் தூக்கப்படுவார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து வழிகளிலும் களம், தயாரிக்கப்படும். அரசியல் கட்சிகள் எவ்வளவு விழிப்புணர்வோடு செயல்பட்டாலும், அவர்கள் நீக்க வேண்டியவர்களை கட்டாயம் நீக்கிவிடுவார்கள். தமிழ்நாடு அரசு என்ன ஆவணங்களை கொடுத்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள். வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு வாக்குகப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வார்கள். அதை வைத்து வெற்றி பெறுவார்கள். பீகாரில் நடைபெற்றது போன்ற ஒரு காட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டிலும் நடைபெறும்.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதால் எந்த பயனும் கிடையாது. பாஜக அனைத்து மட்டங்களிலும் திட்டம்போட்டு, சோசியல் இன்ஜினியரிங் செய்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து, வாக்காளர் பட்டியலை திருடி தெளிவாக மோசடிகளை செய்வதற்கான கட்டமைப்புகளை வைத்துள்ளது. ராகுல்காந்தி திடீரென வந்து பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் செய்வது, போராட்டம் நடத்துவதால் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திட முடியாது. எஸ்.ஐ.ஆரை எதிர்த்து, நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டத்தை நடத்தினால்தான் இதற்கு விடிவு கிடைக்கும். இல்லாவிட்டால் போராட்டத்தால் எந்த பயனும் கிடையாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவிடம் இருந்து வெற்றி பறிக்கப்படும். பாஜகவின் பொம்மை முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். இதுதான் பாஜகவின் திட்டமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


