மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் மாநில சுயாட்சிக்கு ஆபத்து என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.


மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு விதித்தது தொடர்பாக குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் கால தாமதம் செய்கிறார், தனக்கு இல்லாத அதிகாரத்தை அவர் பயன்படுத்துகிறார் என்று வாதிடப்பட்டது. அதை ஏற்று உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்தது. அத்துடன் நிலுவையில் இருந்த மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.
இதனையொட்டி சட்டக் கேள்விகள் எழுப்பப் பட்டன. அதற்கான பதிலாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. 75 வருட உச்சநீதிமன்றத்தின் வரலாற்றில் இதுபோன்று 15 முறை குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதில் சிக்கல் என்ன என்றால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, இந்த பதில் கட்டுப்படுத்தாது. வழக்குகளின் விசாரணையின் போது உச்ச நீதிமன்ற கருத்து எடுத்து வைக்கப்படும்.

15 முறை குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பிய போதும், உச்சநீதிமன்றம் வழங்கிய பதில் நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதிவிடவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு அதிகார பரவலாக்குதல் தான் முக்கியம். மத்தியில் அதிகாரங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு அதிகாரமே இல்லை. மீண்டும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த பதில் மத்திய அரசின் அதிகார குவிப்புக்கு உதவியுள்ளது. இந்த பதில் காரணமாக மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்புகிற மசோதா மீது ஆளுநர் அனுமதி ஒன்று வழங்கலாம், 2வது திருப்பி அனுப்பலாம், மூன்றாவது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். இதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது. அதேநேரத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு தனிப்பட்ட சட்ட பாதுகாப்பு தான் உள்ளது. அவர்களுடைய அலுவலகத்திற்கு கிடையாது.
அதன்படி ஆளுநர் அலுவலகத்திற்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது. கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டது. உச்சநீதிமன்றம் தன்னுடைய பதிலில் அப்படி மசோதாக்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சொல்கிறது. அதற்கு காரணமாக ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்கிறது. எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்யவோ, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவோ முடியாது என்று சொல்கிறது.

அதேவேளையில் 10 சட்டமசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தாமாக ஒப்புதல் வழங்க வேண்டிய காரணம் எப்படி ஏற்பட்டது. காலவறையற்ற தாமதம் தான் அதற்கு காரணமாக அமைந்தது. நாட்டில் குடியரசுத் தலைவராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். இந்த வழக்கில் ஒரு சின்ன நிவாரணம் என்ன என்றால் ஆளுநர், குடியரசுத் தலைவர் மீது தான் நாம் சட்ட ரீதியாக கேள்வி எழுப்ப முடியாது. அவர்களுடைய அலுவலகம் மீது கேள்வி எழுப்பலாம். எனவே ஆளுநர் அலுவலகம் வழக்கை தாமதிக்கிறது என்று நாம் மாற்ற வேண்டும். அவர்களுக்கு நாம் காலக்கெடு நிர்ணயிக்கக்கூடாது. மாறாக ஆளுநர் அலுவலகம் அல்லது குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று நாம் மாற்ற வேண்டும். இந்த காலக்கெடு ஆளுநர் அலுவலகத்திற்கு பொருந்தும் என்று நாம் வாதிட வேண்டும். இந்த பதில் மூலமாக இன்னும் பல வழக்குகள் போய் சேரும்.

உச்சநீதிமன்றத்தின் பதிலை மேற்கோள் காட்டி, ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்ய மத்திய அரசு விரும்பினால், வழக்கில் தீர்ப்பு வழங்கிய 2 நீதிபதிகள் முன்பாக தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் மறு சீராய்வு மனுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு முன்னதாக 15 முறை குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், அப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு நிலுவையில் இருந்தால் கேள்வி எழுப்ப முடியாது என்கிற உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் காரணமாக மத்திய அரசு தங்களுடைய மறுசீராய்வு மனுக்களையே திரும்ப பெற்றுக்கொண்டு உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பினார்கள். இந்த பதில் வாயிலாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்தாலும், இதை நேரடியாக சுட்டிக்காட்ட முடியாது. எனவே இந்த வழக்கில் க்யூரேட்டிவ் பெட்டிஷன் தான் தாக்கல் செய்ய முடியும்.

தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இதற்கு மத்தியில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக பல்கலைக் கழகங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் எல்லாம் தடை போடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக பல்கலை.கள் துணை வேந்தர்கள் இல்லாமல் தொடரும். உடனடியாக நிவாரணம் கிடைக்கவும் வழியில்லை. ஆளுநர் தரப்பில் அதிரடியாக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதாக தொடங்குவார். மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும். இதனால் ஒட்டுமொத்தமாக மாநில கல்விதான் பாதிக்கப்படுகிறது. அதற்கான தீர்வு காண்பதற்கு ஒரு மாநிலத்திற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை என்று ஆகிவிடுகிறது. எனவே இதை மாநில சுயாட்சிக்கான ஒரு ஆபத்தாக தான் இந்த தீர்ப்பை பார்க்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


