திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை போலி ஆவணம் மூலம் தனது உறவினர் அபகரித்ததாக கூறி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி வேலாம்பட்டி மீனாட்சிபுரத்தில் கருப்பையா என்பவருக்கு சொந்தமான 2,000 சதுர அடி வீடு உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 30 லட்சம் ஆகும். அந்த வீட்டை அவரது மகன்களான காசி மற்றும் பாண்டியன் குடும்பத்தினர் அனுபவித்து வந்தனர். காசி மற்றும் பாண்டியன் இறந்துவிட்ட நிலையில், அந்நிலத்தை அவர்களது வாரிசுகளான செல்வகுமார் மற்றும் குருவம்மாள் அனுபவித்து வந்தனர். பாண்டியனின் மகளான குருவம்மாள் (85) தனது பேத்தியான சண்முக பிரியாவுடன் கடந்த 20 வருடமாக மதுரையில் வசித்து வருகிறார். இதனிடையே காசியின் மகனான செல்வகுமார் (55) மீனாட்சிபுரத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் செல்வகுமார் காசி பாண்டியன் என்பது ஒரே பெயர் எனக்கூறி போலியாக வாரிசு சான்றிதழ் தயாரித்து போலி பத்திரம் தயார் செய்து, மீனாட்சிபுரத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டை தனது பெயருக்கு மாற்றம் செய்து, பேரூராட்சியில் வீட்டு வரி, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற்று வசித்து வருகிறார். செல்வகுமார் போலியாக வாரிசு சான்றிதழ் மற்றும் போலி பத்திரம் தயார் செய்து தனக்கும் பாத்தியமான பூர்விக வீட்டை மோசடி செய்திருப்பது காலதாமதமாக குருவம்மாளுக்கு தெரியவந்தது. இது குறித்து குருவம்மாள் செல்வகுமாரிடம் கேட்டபோது இது தனக்கு சொந்தமான வீடு என்றும் உனக்கு இதில் பங்கு கிடையாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குருவம்மாள் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நத்தம் காவல் நிலையத்திலும், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த உருவம்மாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனது பாத்தியப்பட்ட வீட்டினை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளாா்.
அதிகாலை கொள்ளை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்களால் பரபரப்பு…


