சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான அம்பத்தூர் தொழிற்பேட்டை புதிய பேருந்து நிலையத்தின் செயல்பாட்டை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துவைத்து தொடங்கி வைத்துள்ளார்.


அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 11 கோடியே 81 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 24, 2025) திறந்து வைத்தார்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் சுமார் 53 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டை தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழில் மையமாக உருவெடுத்ததால் அப்பகுதியில் வரும் பொது மக்களும் அதிக அளவு பயன்படுத்தி வந்ததால் பேருந்து நிலையத்திற்கு நாளடைவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
பேருந்து நிலையம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததால் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த கோரி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். கோரிக்கையின் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 11.81 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் 26,346 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் அண்மையில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. மின்தூக்கி வசதியுடன், 20 பேருந்துகள் நிற்கும் வசதி, 2 ஏடிஎம் மையங்கள், 11 கடைகள், பல்பொருள் அங்காடி, அலுவலக அறைகள், மூத்தகுடிமக்கள் காத்திருப்பு அறைகள், பயணச்சீட்டு வழங்கும் அறை, உணவங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிப்பறை வசதிகள், உணவருந்தும் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து தொழிலாளர் ஓய்வு அறைகள், சிசிடிவி கேமராக்கள், நவீன கழிப்பிட வசதி, உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இங்கு ஒரு நாளுக்கு 140 பேருந்துகள் சுமார் 1,400க்கும் மேற்பட்ட தடவைகள் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு நாசர், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல, சென்னை மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலாளர் காகர்லா உஷா சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உறுப்பினர் செயலர் பிரகாஷ் போக்குவரத்து கழக இயக்குனர் பிரபு ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


