சென்னை அண்ணா நகரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற போது ஆட்டோ டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாசர்பாடியைச் சேர்ந்த முருகன் (வயது 40), தினமும் அண்ணா நகர் – சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்துள்ளாா். வழக்கம்போல் அண்ணா நகரில் மூன்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சேத்துப்பட்டு தனியார் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். அண்ணா நகர் 15வது மெயின் ரோட்டில் சென்ற போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலி அதிகமானதால், முருகன் ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி உடனே மயங்கி விழுந்துள்ளாா்.
அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த திடீர் மரணம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



