திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக தொடர்ந்து சண்டை போடுகிறது. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு சிலர் வாயை மூடிக்கொண்டு இருப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.


சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- திராவிட கொள்கையாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கோ, உற்றார் உறவினர்களுக்கோ கொள்கையை திணிக்க மாட்டார்கள். எனது தந்தையும் அவரது கொள்கையை என்னிடம் திணித்ததில்லை. ஆனால் அதற்கான சூழலை, திராவிட இயக்க அரசியல் பின்பற்றுவதற்கு உருவாக்குவார்கள். நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றத்திலே கலவர சூழ்ச்சியை நாம் உடைத்துப் பேச வேண்டும்.
பாஜக, இந்துத்துவ அமைப்புகள் தேர்தல் கால கட்டத்தில் திருப்பரங்குன்றம் போன்ற பிரச்சினைகளை கிளப்புவார்கள். இதனை திட்டமிட்டு அவர்கள் செய்துவருகின்றனர். 1978ஆம் ஆண்டுவாக்கில் தேர்தலின்போது பெரியாரின் கடவுள் குறித்தான கருத்துகள், ஊர்வலம் போன்றவற்றை பிரச்சாரமாக முன்னெடுத்து கலைஞரின் வெற்றியை தடுக்க முயற்சி மேற்கொண்டனர். தேர்தல் நெருங்கும்போது பொய்யான கருத்துகளை வைத்து அரசியல் செய்வது இந்துத்துவ, பாஜகவின் அரசியல் திட்டம். பீகார் தேர்தலின்போது தமிழ்நாட்டில் இந்தி மொழியே இருக்கக் கூடாது என்கிற பொய்யான தகவலை பரப்பினர். ஆனால் தமிழ்நாடு பக்குவப்பட்ட பூமியாகும்.

நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் தீபம் ஏற்ற முடியவில்லை என உண்மைக்கு புறம்பான ஒரு தகவலை ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பவன் கல்யாணின் இந்த பதிவு குறித்து வடஇந்தியாவில் உள்ளவர்களுக்கு, அதன் உண்மைத் தன்மையை யார் விளக்குவார்கள்? திமுக இந்துக்களுக்கு எதிரி என்கிற பிம்பத்தை கட்டமைத்து, அதனை வைத்து வட இந்தியாவில் திமுக இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு எதிராக வட இந்திய பாமரர்களை மடைமாற்றுகிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்? தீபம் ஏற்ற அனுமதியே கேட்டிருக்க மாட்டார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டவர் போல ஒரு முதலமைச்சர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தமிழ்நாடு பல்வேறு தளங்களில் வளர்ச்சியடைந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. இதனையெல்லாம் ஊடகங்கள் பாசிட்டிவ் ஆன கண்ணோட்டத்தில் பேச மறுக்கின்றனர். பிரதான இந்துக்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறது என்கிற பிம்பத்தை கட்டமைக்கும் போது தமிழ்நாடு மக்கள், வியாபாரிகள் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என அவர்களை விரட்டுகின்றனர்.

வடஇந்திய ஊடகங்கள் திமுக, இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்கிற பொய்யை திட்டமிட்டு கட்டமைக்கின்றனர். வடஇந்திய பகுதிகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கத்தினருக்கு இதன் உண்மைத் தன்மையை கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது. பாஜக மத்திய அமைச்சர் எல்.முருகன், நாடாளுமன்றத்தில் பேசும் போது திமுக எம்.பி-க்கள் தான் எதிர்வினையாற்றினர். மற்ற தோழமை கட்சி எம்.பி-க்கள் என்ன மிக்சரா சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்களா?
அவர்களும் திமுக எம்.பி-க்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டுமல்லவா? காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்க தேசிய தலைவர்கள், திருப்பரங்குன்றத்தின் உண்மைத் தன்மையை, பிரச்சினைகளை சுட்டிக்காட்ட வேண்டும். தேசிய கட்சிகளின் அத்தகைய விளக்கங்கள் தான் நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு சென்று சேரும்.

மாணவர்களிடம் அரசியல் பேசக்கூடாது என்று கூறுவதே அரசியல்தான். கல்லூரிகளில் ஏன் அரசியல் இல்லை என்பதே ஒரு அரசியல். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாம் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறோம். ஆனால், அவர்களை கொள்கை எதிரி என்று கூறிவிட்டு வாயையை மூடி இருப்பவர்களை இப்போது தான் பார்க்கிறேன். இதான் சார் உங்கள் டக்கு? என்பது போல உள்ளனர். அவர்கள் கூட உள்ள இளைஞர்கள் தான் பேசுங்கப்பா, பேசுங்கப்பா என கதவைத் தட்ட வேண்டியுள்ளது. 3 நாட்கள் தானே ஆகிவிட்டது. கொஞ்சம் பொறுமையாக அறிக்கை தருவோம். நாம் அறிக்கை தானே அளிப்போம். அதுவும் லேட்டா தானே அளிப்போம் என்ற நிலையில் உள்ளனர்.
கல்லூரி வளாகங்களில் குறிப்பிட்ட அவரின் பெயர் சொன்னாலே லபோ, திபோனு கத்துகிறார்கள். ஏன்?, எதனால்?, எதற்காக கத்துகிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். முதல் காட்சிகளில் ரசிகர்களாக அவர்கள் கத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கல்லூரி வளாகங்களில் கத்துவது என்பதை என்ன கூறுவது? கல்லூரி வளாகத்தில் உள்ள அரசியல் இடைவெளியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

மத ரீதியாக பிளவுப்படுத்தி சிறுபான்மையினரை அச்சப்படுத்துகிறார்கள். குல்லா அணிந்துகொண்டு பிரியாணி சாப்பிடுவது முக்கியமல்ல. We are not allowing, we face the consequences என்று கூறும் முதலமைச்சர்தான் தேவை. மாணவர்களிடம் Hero யாரு? pseudo hero யார்? என்பதை நாம் தெரிவிக்க வேண்டும். 2,500 ஆண்டுகளாக மனுதர்ம கோட்பாடுகளை பாதுகாப்பாக கட்டிக் காக்கிறார்கள். படிப்பதை நாம் நிறுத்தி விட்டோம். நாம் அனைவரும் படிக்க வேண்டும். அச்சுத் துறையால் தான் புரட்சி ஏற்படும். படிப்பில் இருந்து நம்மை விலக்கி வைக்கிறார்கள். பிரதான மக்களின் நம்பிக்கையான கடவுளை, மக்களை வைத்து அடிமைப்படுத்தி வைக்கின்றனர். மாணவர்களுக்கு அறிவியலை வைத்து பகுத்தறிவு சிந்தனையை உருவாக்குவது தான் முதல் வேலை. தமிழ்நாட்டில் இணக்கமான, அமைதியான சூழல் இருக்கிறது என்றால், அதற்கு பெரியார் போட்டு வைத்த அடித்தளம் தான் காரணம்.
மாணவர்கள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி தான் கல்லூரிகளில் சேர்கிறார்கள். அவர்களுக்கு இடஒதுக்கீடு பற்றி தெரியவில்லை. அதனால் தான் அவர்கள் ஒரு நடிகர் பின்னர் திரள்கிறார்கள். இடஒதுக்கீடு குறித்தான புரிதல்களை மாணவர்களிடம் பேச வேண்டும். திமுகவின் கொள்கைதான் தமிழ்நாட்டின் அரசியல். திமுகவின் கொள்கை தமிழ்நாட்டின் அரசியலாக இருப்பதால் தான் தமிழ்நாடு முற்போக்கு மாநிலமாக உள்ளது. கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் இறந்தது தான் திருப்புமுனை. பெரியாரிய இயக்கத் தோழர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கல்வியையும், சமூக நீதியையும், இடஒதுக்கீட்டையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


