சென்னையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக குற்ற முன்மொழிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சென்னை சிவானந்தா சாலையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் அடுத்த அயோத்தியா? என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக பாஜகவை கண்டித்தும், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவி விலக வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பேராசியர் சுப. வீரபாண்டியன், திருப்பரங்குன்றம் உண்மையில் சமணர்களின் குடைவரை கோயில். அதற்கு கல்வெட்டு சான்றுகளும் உள்ளது. விளக்கு ஏற்றுவது அவர்கள் நோக்கம் அல்ல. கலவரத்தை தூண்டுவதுதான் அவர்களின் நோக்கம். அது வெறும் நில அளவைத்தூண். கார்த்திகை தீபம் முடிந்து 3 நாள் ஆகிவிட்டது. இனிமேல் என்ன விளக்கு ஏற்றுவது. நாங்கள் திமுகவுக்கு ஆதரவாளர்கள் இல்லை. நாங்கள் திமுகவேதான்… அந்த சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் ஸ்டாலின்தான். நீதிபதி சுவாமிநாதன் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவரிடத்தில் இனி நிதி கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. குற்ற முன்மொழிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து சுவாமிநாதனை நீதிபதி பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தொடர்ந்து நிகழ்ச்சிய்ல திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசு பேசியதாவது:- மத்திய அரசிடம் பணிந்து முட்டிபோட்டு கொண்டு இருப்பவர்களுக்கு திருப்பரங்குன்றம் பற்றி எல்லாம் கவலை இல்லை. மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதி, வரி பகிர்வை கொடுக்காமல் தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்கிறது. எல்லா வகைகளிலும் தமிழ்நாட்டில் காவி கூட்டம் நுழைய பார்க்கிறது. அது முடியாததால் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்து கலவர பூமியாக மாற்ற பார்க்கிறார்கள். அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. அதை முறியடித்து மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கம்.
அவர்களும் கூட்டணி உருவாக்க என்ன என்னமோ செய்கிறார்கள்… A team B team என்றார்கள் பின்பு ED IT என்றார்கள் இப்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். பீகார் இளைஞர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்று பேசினார்கள். ஆனால் இங்குள்ள பீகாரை சார்ந்தவர்கள் தங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பேட்டி கொடுத்ததை பார்த்தோம். தமிழ்நாட்டில் காவிக் கூட்டம் என்றைக்கும் நுழைய முடியாது… முதலமைச்சர் இருக்கும் வரை… திமுகவும் அதன் தாய் கழகங்களும் இருக்கும் வரை அது எப்போதும் நடக்காது.

போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் சுப. வீரபாண்டியன், மக்களின் ஆதரவை திராவிட மாடல் ஆட்சி பெற்று இருக்கும் நிலையில் அதை சிதைத்து தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் வெற்றி பேரும் முயற்சியாக திருப்பரகுன்ற விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாடு மதவெறிக்கு இடம் தராது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பயன்படுத்தி அதன் கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பயன்பெறலாம் என்று கருதுகிறார்கள். தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு 1920-களில் இருந்து ஒரு நூற்றாண்டாக நடந்து வருகிறது.
நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய உரிமை உள்ளது. யாரையும் கண்டிப்பதற்கும் விமர்சனம் செய்வதற்கும் உரிமை உண்டு. மேல் முறையீட்டுக்கு செல்வதே தீர்ப்பை விமர்சனம் செய்வது போலதான். அயோத்தி இந்தியாவில்தான் உள்ளது என்பதை நயினார் கண்டுபிடித்துள்ளார். அயோத்தியில் கலவரத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் அந்த கலவரம் அவர்களுக்கு உதவவில்லை. எச்.ராஜாவைவிட இந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்களை இனி மேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். சட்ட ஒழுங்கு கெட்டு போக வேண்டும் என்கிற உள்நோக்கம் ஹெச்.ராஜாவிடம் வெளிப்படுகிறது. திமுகவால் இந்துக்களைவிட பயன்பெற்றவர்கள் யார்?, இவ்வாறு அவர் கூறினார்


