புதுச்சேரி காலாபட்டு மத்திய பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி தலைமறைவு ஆனதை தொடந்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி வில்லியனூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவருக்கு கோவிந்த சாலையை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ராஜ்குமார், தனக்கு ஜிப்மரில் முக்கிய அதிகாரியை தெரியும். அவர் மூலமாக ஜிப்மரில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய முரளிதரன் தனது மகளுக்கு நர்ஸ் வேலை வாங்கித்தரும்படி கூறி பணம் கொடுத்துள்ளார். இதேபோல இன்னும் சிலரிடமும் ராஜ்குமார் பணம் பெற்றுள்ளார். மொத்தம் ரூ.40 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் தரவில்லை. இதனால் பணத்தை அளித்தவர்கள் திருப்பித் தரும்படி ராஜ்குமாருக்கு நெருக்கடி அளித்தனர். அவர் பணத்தை திருப்பித்தரவில்லை. இதையடுத்து முரளிதரன் ஓதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் ராஜ்குமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஜிப்மரில் பதிவாளராக இருந்த மகேஷிடம், பணத்தை அளித்ததாகவும், அவர் வேலை பெற்றுத் தரவில்லை என்றும் தெரிவித்தார். புதுச்சேரி காலாபட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் அதிகாரியான மகேஷ், டெபுடேஷன் அடிப்படையில் ஜிப்மரில் பணியாற்றியபோது பணத்தை பெற்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டது. இதில் அதிகாரி மகேஷ் தொடர்பு குறித்து போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

இதனிடையே மகேஷ் கடந்த 4-ந் தேதி முதல் நீண்ட விடுப்பு எடுத்து தலைமறைவாகிவிட்டார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது பெங்களூரில் மகேஷ் முகாமிட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
இலக்கு 65 இடங்கள்: ஜனவரியில் என்டிஏ தலைவர்கள் பங்கேற்கும் மெகா கூட்டம்…


