அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக்கோரிய மனுக்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளன.
கரூர் மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. கரூர் துயர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது தங்களது பரிந்துரைகளை வழங்குமாறு அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய தலைமை அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய நாராயண் தங்களது பரிந்துரைகளை வழங்கிவிட்டதாக கூறினார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வழக்கறிஞர் அறிவழகன் , தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சூரிய பிரகாசம், ஆகியோர் தங்களது பரிந்துரைகளை தாக்கல் செய்தனர்.
அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அரசியல் கட்சிகள் அளித்துள்ள பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் எனக் கூறினார். இதனையடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அத்தீர்ப்பில், மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு என்றும் நிகழ்ச்சியின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக தூய்மை செய்து வழங்க வேண்டும்.
கர்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்களுக்கு பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தான் செய்ய வேண்டும்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மேலும், வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஆட்சேபனைகள் இருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து விரைவில் ரோடு ஷோவுக்கான இறுதி வழிகாட்டி நெறிமுறைகளை ஜனவரி 5-க்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


