பெங்களுரில் சேலத்தை சேர்ந்த பெண் வங்கி ஊழியரை சுட்டுக்கொன்ற கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன். மென்பொறியாளர். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் பெங்களூரில் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலமுருகன் – புவனேஸ்வரி, கடந்த 2018 முதல் பெங்களூரில் வசித்து வந்தனர். இதனிடையே, கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவரும் பரஸ்பரம் விவகாரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். மேலும், இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர். மேலும், புவனேஸ்வரிக்கு வேறு நபருடன் தொடர்பு உள்ளதாக பாலமுருகன் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவர் மீது பாலமுருகன் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று வங்கியில் இருந்து புவனேஸ்வரி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த பாலமுருகன் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், துப்பாக்கியை எடுத்து புவனேஸ்வரியை சுட்டுல்லார். இதில் படுகாயம் அடைந்த புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து பாலமுருகன், பெங்களூரு மாகடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து, போலீசார் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


