புத்தாண்டை எந்தவிதமான நிர்வாக சிக்கலும் இல்லாமல் தொடங்க வேண்டும் என்றால், ரேஷன் KYC முதல் வருமானவரி, ஆதார்–பான் இணைப்பு முதல் பயிர் காப்பீடு வரை — இந்த Checklist-ஐ ஒரு முறை சரிபார்த்து, நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடித்துக் கொள்ளுங்கள்.
2025ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் நாம் நிற்கிறோம். இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில், எந்தவிதமான நிர்வாக சிக்கலும், அரசின் சலுகை இழப்பும் இல்லாமல் புத்தாண்டை தொடங்க வேண்டுமெனில், டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சில முக்கிய பணிகளை மக்கள் கட்டாயமாக முடித்தாக வேண்டும்.

இந்த பணிகளை காலக்கெடுவுக்குள் நிறைவேற்றத் தவறினால், அடுத்த ஆண்டு பல்வேறு நடைமுறை பிரச்சனைகள், அபராதங்கள், அரசின் உதவித் திட்டங்களில் இருந்து விலக்கு போன்ற சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடித்து புத்தாண்டை நிம்மதியாக எதிர்கொள்ள அரசு வட்டாரங்களும் அறிவுறுத்தி வருகின்றன.
ரேஷன் கார்டு KYC – அரசின் சலுகைகள் தொடர வேண்டுமெனில் அவசியம்
மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும், மானிய விலையிலும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றன. ஆனால், இத்திட்டத்தின் பயன்கள் அதிக வருமானம் கொண்டவர்களுக்கும் சென்றடைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனைத் தவிர்க்க, உண்மையான பயனாளர்களை அடையாளம் காணும் நோக்கில் ரேஷன் கார்டு KYC சரிபார்ப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 31 என்ற கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், பெரும்பாலான மாநிலங்களில் ஆண்டு முடிவுக்குள் KYC முடிக்க வேண்டும் என ரேஷன் கடைகள் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
KYC செய்யாமல் விட்டால், எதிர்காலத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதால், மக்கள் உடனடியாக அருகிலுள்ள ரேஷன் கடைகளில் சென்று KYC நடைமுறையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஆதார் – பான் இணைப்பு: தவறினால் பான் செயலிழக்கும்
பான் கார்டு வைத்திருப்போர் அனைவரும் தங்களுடைய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதுவரை இணைக்காதவர்கள், வருமான வரித்துறை இணையதளத்தில் சென்று தங்களுடைய பான்–ஆதார் நிலையை சரிபார்க்க வேண்டும். டிசம்பர் 31க்குள் இணைக்காவிட்டால், பான் கார்டு செயலிழக்க வாய்ப்பு உள்ளது.
அப்படி நடந்தால்: வருமானவரி கணக்குத் தாக்கல் வங்கி டெபாசிட்கள் முதலீடுகள் நிதி தொடர்பான பல பரிவர்த்தனைகள் எதையும் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்குத் தாக்கல் – தாமதமானாலும் இன்னும் வாய்ப்பு
2024–25ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை இதுவரை தாக்கல் செய்யாதவர்களுக்கு, டிசம்பர் 31ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடுவில் தாக்கல் செய்தால்:
ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்தால் – ₹1,000 அபராதம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் – ₹5,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். காலக்கெடுவை முழுமையாக தவறவிட்டால், கூடுதல் அபராதங்களும் சட்ட ரீதியான சிக்கல்களும் ஏற்படலாம் என்பதால், வருமான வரி செலுத்துவோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர் காப்பீடு – விவசாயிகளுக்கான கடைசி நாள்
ரபி பருவ பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக, பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி நாள்.
மழை, இயற்கை பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் பயிர்கள் சேதமடைந்தால், இந்த காப்பீட்டின் மூலம் அரசு முழுமையான இழப்பீடு வழங்கும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை தவற விடாமல், காலக்கெடுவுக்குள் பயிர் காப்பீட்டை முடிக்க வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.


