ஹரியானாவில் வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை வேன் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கணவரை பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் திங்கட்கிழமை கல்யாண்புரி மெட்ரோ நிலையம் அருகே பேருந்துக்காக காத்து நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வாடகை வேனில் லிஃப்ட் கேட்டு அந்த பெண் சென்றுள்ளார். ஆனால் வேன் ஓட்டுநர் பெண்ணை உரிய இடத்தில் இறக்காமல் குருகிராம் நோக்கி சென்றுள்ளனர். பின்னர் மலைப்பாங்கான பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி, ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்த நபர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
3 மணி நேரத்துக்குப் பிறகு நள்ளிரவில் ஓடும் வாகனத்தில் இருந்து பெண்ணை சாலையில் தள்ளிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் தனது சகோதரிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்கு டெல்லி கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் 12 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்துள்ள அந்த பெண் வாக்கு மூலம் அளிக்கும் நிலைக்கு திரும்பவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஹரியானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுனர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை போன்று அரங்கேறியுள்ள இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


