spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

-

- Advertisement -

கவின் மலர்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தைக் கல்வி வாயிலாகக் கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக விளங்குகிறது தமிழ்நாடு. கல்வியில் சமூக நீதி எனும் கோட்பாட்டை சுதந்திரத்திற்கும் முன்பிருந்தே திராவிட இயக்கம் கடைப்பிடித்துவருகிறது. கல்வியில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்தவென நீதிக்கட்சி காலத்திலேயே காலேஜ் கமிட்டி ஒன்றொரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. அதை பின்வந்த காங்கிரஸ் ஆட்சி நீக்கியது

we-r-hiring

1940ல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘உயர்தர கல்விக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் காரியத்தில் சகல வகுப்பு மக்களையும் சேர்த்துக்கொள்ளச் சவுகரியம் இருக்கும்படியாக ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலேஜ் கமிட்டி என்பதை காங்கிரஸ் ஆட்சி வந்து எடுத்துவிட்டதையும் இப்போது இருக்கும் கவர்னர் பிரபு சர்க்காரும் அதையே பின்பற்றி திராவிட மக்களை ஆதரவற்றவர்களாகச் செய்ததை இம்மாநாடு வருத்தத்தோடு கண்டிக்கிறது’ என்கிறது அத்தீர்மானம்.

நீதிக்கட்சியைச் சேர்ந்த டாக்டர் சி.நடேசன், ‘திராவிடர் இல்லம் என்கிற விடுதியை ஏற்படுத்தி, ஏழை மக்களுக்கு உணவு, இடம், பாடநூல்களை அளித்தார்.

குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் தி.மு.க.வின் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். சென்னை மாவட்ட தி.மு.க – சமூக சீர்திருத்த அரசியல் மாநாடு ஜூலை 11,12 1953ல் நடந்தது. அதில் அண்ணா பேசுகிறார். ‘வர்ணாசிரமக் கல்வித் திட்டம் வீழ்க! அறிவு வளர்க! என குலக்கல்விக்கு எதிரான போராட்டத்திற்கு அறைகவல் விடுத்தார் அண்ணா. சென்னையில் ராஜாஜி இல்லம் முன்பு அறப்போர் நடந்தது. செல்லுமிடமெல்லாம் ராஜாஜிக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

‘அனைவருக்கும் பத்தாவது வகுப்பு வரை செகண்டரி கட்டம் வரை இலவசக் கல்வி அளிப்பது என்பது நமது நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியமானதொரு கட்டமாகும். பத்தாவது வகுப்பு வரை இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்க முடியும். அடுத்து கட்சி, அரசியல், மத வகுப்பு உணர்ச்சிகள் திணிக்கப்படாததும் அறிவு வளர்ச்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டதுமான கல்விதான் மெய்யான பயன்படும் கல்வியாகும். பெண்கள், சிறுகுழந்தைகள் ஊமைகள், செவிடர்கள் குருடர்கள் ஆகியோருக்கும் அவரவர்களுக்கு உரிய முறையில் கல்வி அளிக்கும் வசதிகள் விரிவாக்கப்பட வேண்டும் விஞ்ஞான தொழில் நுணுக்கக் கல்வி நிலையங்கள் தேவைக்கேற்ப பெருக வேண்டும்’ என 1957ல் அண்ணா பேசுகிறார்.

இன்றைக்கு தி.மு.க. அரசு பள்ளிக் கல்வித் துறையில் செய்துகொண்டிருக்கும் பல்வேறு மாற்றங்களுக்கும் முயற்சிகளுக்கும் வித்திடும் விதமாக அன்று அண்ணா பேசிய உரை அமைந்தது.

தூத்துக்குடியில் 1961ல் நடந்த தி.மு.க. பொதுக்குழு, ‘ஆதாரக் கல்விக்கு (ஆரம்பக் கல்வி) முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தியது. 1967ல் தி.மு.க. உதகையில் கல்வி மாநாடு ஒன்றை நடத்தியது. “ஆசிரியர்கள்தான் நாட்டில் நல்ல சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்கள். ஒரு சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வு ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது” என்கிறது அம்மாநாடு, சமூகத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் கல்வி வளர்ச்சியில்தான் என்கிற புரிதல் தி.மு.க.விற்கு ஆரம்பம் முதலே இருந்தது.

“கல்வி எங்கள் நாட்டிலேயே ஜாதி முறையோடு பிணைக்கப்பட்டு இருக்கிறது. சில ஜாதிக்குதான் படிப்பு வரும்; சில ஜாதிக்கு படிப்பு வராது என்று பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஜாதி, முதலைப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறது” என்று பச்சையப்பன் கல்லூரியில் ‘கல்வியும் அரசாங்கமும்’ எனும் தலைப்பில் உரையாற்றுகையில் குறிப்பிடுகிறார். அண்ணா. கல்வி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதை அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது தி.மு.க.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் கல்வியில் இந்தி திணிப்பை எதிர்த்த தி.மு.க.வின் போராட்டங்கள் உலகறிந்தவை. இன்று, தி.முகவின் கடைப்பிடிக்கும் இரு மொழிக் கொள்கைக்கான வித்து, தி.மு.க. உருவான காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்படுவது. தாய்மொழிவழிக் கல்வியைத் தொடக்கக் காலத்திலிருந்தே பேசிவந்த கட்சி, தி.மு.க.

அண்ணாவின் ஆட்சியில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் 1968ல் கொண்டாடப்பட்டதன் விளைவாக உருவானதுதான், சென்னையில் இருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். மேலும், பல்கலைக்கழகங்களில் திருக்குறள் குறித்த ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கினார் அண்ணா. அப்போதைய பியூசி படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கினார். பள்ளிகளில் செயல்பட்ட என்சிசி அணிகளுக்குள்ளான தகவல் பரிமாற்றங்களில் இந்தியை நீக்கினார்.

மிகக் குறுகிய காலமே முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்குப் பின், கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சரானார். சமூக நீதியைக் காத்திட கல்வித் துறையையே பெரிதும் பயன்படுத்தினார், கலைஞர்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

உயர்கல்வி

1967ல் தமிழ்நாட்டில் 109 கலை அறிவியல் கல்லூரிகள் இருந்தன. அவற்றில் 2 மட்டுமே அரசுக் கல்லூரிகள். கலைஞர் ஆட்சியில் (1969-1976) 68 கல்லூரிகள் தொடங்கப்பட்டன. முழுப் பட்டப்படிப்பும் இலவசமாக்கப்பட்டது. நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் பல புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 2010ல் 587 ஆக இந்த எண்ணிக்கை வளர்ந்தது. இதில் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் உண்டு.

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வேண்டுமென்ற திமுகவின் நோக்கத்தால், 17 மருத்துவம் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்லூரிகள், 33 பல் மருத்துவம் மற்றும் செவிலியர் போன்ற இதர மருத்துவப் படிப்புக் கல்லூரிகள் ஆகவும் 2010ல் அதிகரித்தன.

1966ல் ஒரேயொரு சட்டக் கல்லூரி மட்டுமே இருந்தது. 2010ல் 8 ஆக அதிகரித்தது. சென்னையில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில்தான்.

உயர்கல்வி மற்றும் கலை அறிவியல் படிப்பில் ஊக்கப்படுத்தும் வகையில் 2010-2011ஆம் ஆண்டில் எம்ஏ மற்றும் எம்எஸ்சி படித்த 375000 மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டது.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை 645ஆக 2010ல் உயர்ந்தது. அதிகரித்துவரும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

கலைஞரின் ஆட்சிக் காலத்தில் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டதால், அதிக மாணவர்கள் தொழில்முறைப் படிப்பைத் தொடரவும், உயர்கல்வியைத் தொடரவும் முடிந்தது. அண்ணா பல்கலைக்கழகமும் தொலைதூரக் கல்விக்கான தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டன. கலைஞர் ஆட்சியில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பெண்களைப் பட்டதாரிகளாக்கும் வகையில், முதுகலைப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது. இதன்மூலம் ஏராளமான பெண்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். அவர்களுடைய உலகம் விரிவடைந்தது.

தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை கலைஞர் ரத்து செய்தார். சமமான வாய்ப்புகளை வழங்கும் வகையில் மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தினார். இதன்மூலம் இரட்டைச் சுமை குறைக்கப்பட்டு, பலரும் பயனடைந்தனர். விருப்பப்பட்ட மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற்றனர். தொழில் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தார்,கலைஞர்.

அண்ணா பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் சென்னை, கோவை திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி வளர்ச்சியைத் தரம் உயர்த்தும் செயல்பாடு இது. 14 இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கலைஞர் தொடங்கினார். பல்வேறு பிராந்தியங்களில் உயர் கல்வியைக் கொண்டுசெல்வது இதன் நோக்கம்.

தமிழ்நாட்டில் பெரம்பலூர், திருவண்ணாமலை உட்பட ஆறு இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள், கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 12 இடங்களில் அரசு பொறியியல்  கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

செம்மொழி படிப்புக்கான மத்திய கல்வி நிறுவனத்தை சென்னையில் கலைஞர் தொடங்கினார். அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பேருதவி புரியும் மையமாக இது மாறியது.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, 2021ல் பொறுப்பேற்ற பின் உயர்கல்விக்கான பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக, வகுப்பறைகளுக்கும் வேலைவாய்ப்புச் சந்தைக்கும் இருந்த இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை மேலும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள். போட்டித் தேர்வுகளுக்கும் நேர்முகத் தேர்வுகளுக்கும் தயாராகிறார்கள்.

‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் வாயிலாக 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் உயர்கல்விக்குள் நுழையும்போது, மாதந்தோறும் பெறும் ஆயிரம் ரூபாய் என்பது அவர்களுடைய உயர்கல்விக்குப் பெருமளவில் உதவுகிறது. இதன்மூலம், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. செப்டம்பர் 5, 2022ல் தொடங்கப்பட்ட ‘புதுமைப் பெண்’ திட்டத்தின்மூலம் பட்டம், பட்டயம் அல்லது ஐடிஐ பயிலும் மாணவிகளுக்குத் தொகை வழங்கப்படுகிறது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல் ஆண்டு மட்டும் வழக்கமான எண்ணிக்கையைவிட 13,681 பெண்கள் அதிகமாகக் கல்லூரிகளில் சேர்ந்திருந்தனர் என்கிறது மாநில திட்டக் கமிஷனின் ஆய்வறிக்கை. பெண்களை முன்கூட்டியே திருமணம் செய்து வைப்பதைத் தடுப்பதோடு, அவர்கள் சொந்தக் காலில் நிற்கவும் வழிசெய்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2025ல் இத்திட்டத்தில் திருநங்கையரையும், பால்புதுமையினரையும் இணைத்திருக்கிறது தி.மு.க. அரசு.

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் 9, 2024ல் தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே 3.28 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயனடைந்தனர். ‘புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்கள் தமிழ்நாட்டின் உயர்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. வறிய குடும்பங்களில் ஒரு காலத்தில் பொருளாதாரச் சூழல் காரணமாக குழந்தைகளைப் படிக்கவைக்காமல் வேலைக்கு அனுப்பிக்கொண்டிருந்த நிலையை இத்திட்டங்கள் மாற்றி அமைத்திருக்கின்றன.

பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 75 சதவிகிதமாக ஆக உயர்ந்து, இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழ்நாடு. இந்த உதவித்தொகை என்பது வெறுமனே பண உதவி அல்ல. கண்ணியம், வெற்றிபெறும் கனவு, சமத்துவம் ஆகியவற்றிற்கான முதலீடு.

பள்ளிக் கல்வி

கலைஞருடைய ஆட்சியில்தான் மேல்நிலை வகுப்புகளில் கணினிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, மிகப்பெரும் கணினிப் புரட்சிக்கு வழிவகுத்தது. அதன் பின்னர், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடிகட்டிப் பறந்தது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் (Mobile Science Labs) உருவாக்கப்பட்டன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 50 லட்சம் மாணவர்களின் சிறப்பு கல்விக் கட்டணம் ரத்துசெய்யப்பட்டது இதன்மூலம், மாணவர்களின் நிதிச்சுமை குறைந்தது. சமமான வாய்ப்பை வழங்கும் நோக்கில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த 11 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலும் கலைஞர் ஆட்சியில் விலக்களிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கியதும் தி.மு.க. அரசுதான்.

கல்வி சார்ந்து ஆற்றிய அரும்பணிகளில் மிக முக்கியமானது, பள்ளிக்கல்விக்கென தனித்துறை உருவாக்கப்பட்டதுதான். 1996 ஆம் ஆண்டு, கல்வித் துறையைப் பள்ளிக் கல்வித் துறையாகவும் உயர்கல்வித் துறையாகவும் பிரித்து, அவற்றுக்கு தனித்தனியே அரசு செயலர்களையும் நியமித்தார் கலைஞர். இதன்மூலம் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் கவனம் கிடைத்தது.

2006 – 2010 காலகட்டத்தில், அப்போது நடைமுறையில் இருந்த மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிகுலேசன் கல்வித் திட்டம், ஓரியண்டல் கல்வித் திட்டம் மற்றும் ஆங்கிலோ இந்திய கல்வித் திட்டம் ஆகிய நான்கு பாடத்திட்டங்களை ஆராய்ந்து, சமச்சீரான கல்வித் திட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பொதுக் கல்வி வாரியம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறைச் சட்டம் -2010 இயற்றப்பட்டு, 1ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறந்த வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு 1 முதல் 10ஆம் வகுப்புகளுக்குப் பொதுவான சமச்சீர் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதனடிப்படையில் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் பல்வேறு கல்வித் திட்டங்களில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு, அனைவருக்கும் சமச்சீரான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

அடுத்து வந்த அ.தி.மு.க அரசு இத்திட்டத்தை கைவிடத் துணிந்தபோது, எழுந்த எதிர்ப்பலைகளே இத்திட்டம் எவ்வளவு சிறந்தது என்பதற்குச் சான்று.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

‘தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் -2006 இயற்றப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தமிழ் மொழி கற்பதை உறுதிசெய்ய இச்சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் பயில வழிவகை செய்யப்பட்டது.

மாணவர்கள் உயர்கல்வி பயில தேவைப்படும் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் நாட்கணக்கில் காத்திருந்து பெறவேண்டிய சூழல் இருந்தது. இச்சான்றிதழ்களைப் பள்ளியிலேயே பெற்றுக்கொள்ள வழிவகை செய்ய, முக்கிய நிர்வாகச் சீர்திருத்தம் ஒன்றை தி.மு.க. அரசு அறிவித்ததன் வாயிலாக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர்.

தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களின் பொருளாதார சிரமங்களுக்குத் தீர்வாக, தீர்வாக, பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிகள் கட்டண வசூல் ஒழுங்குமுறை சட்டம் 2009 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் கட்டண நிர்ணயம் செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகளில் கட்டண ஒழுங்கு முறைப்படுத்துதல் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த மிக முக்கியமான நடவடிக்கை.

நெடுந்தொலைவு சென்று படிக்க பேருந்துக் கட்டணம் செலுத்த பணமின்றி இருந்த மாணவர்களுக்கு உதவும் வகையில், கலைஞர் இலவசப் பயணச்சீட்டு திட்டத்தைக் கொண்டுவந்தார். இத்திட்டத்தால் இடைநிற்றல் தவிர்க்கப்பட்டது. பின்னர், 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காகவும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

கிராமப் பகுதிகளில் இருந்து பெண் பிள்ளைகள் பொதுப் பேருந்துகள் மூலமாக அருகில் உள்ள நகர்ப்புறப் பள்ளிகளுக்கு வரத் தொடங்கினார்கள். அவர்களின் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் பெண்கல்வி உயர்வதற்கும் இத்திட்டம் உதவியது.

2005 ஆம் ஆண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றன. பெற்றோர்களின் ஜூன் மாதச் சுமையைப் பெருமளவு குறைப்பதில் இத்திட்டம் பெரும்பங்கு வகிக்கிறது.

குழந்தைகளின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு முக்கியமான புரதச்சத்து உணவை உறுதிப்படுத்த, சத்துணவில் வாரம் ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு முதல் சத்துணவுடன் சேர்த்து, வாரத்தில் மூன்று முட்டைகள் வழங்கிட ஆணையிடப்பட்டது. 2010 முதல் ஐந்து நாட்களிலும் முட்டைகள் வழங்கப்பட்டன. முட்டை உண்ணாத மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் வாழைப்பழம் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து விதமான உணவுப் பழக்கங்களையும் மதித்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

‘தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தை உருவாக்கியவர், கலைஞர். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். இக்கழகம் 1970ல் மார்ச் 4 அன்று தமிழ்நாடு பாடநூல் சங்கம் (Tamilnadu Textbook Society) என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வியை அறிமுகம் செய்தபோது கல்லூரிப் பாடங்களுக்கான பாட நூல்களை உருவாக்கும் பொறுப்பை பாடநூல் கழகம் சிறப்பாகச் செய்தது. பாடநூல் கழகம் நூற்றுக்கணக்கான பேராசிரியர்களைக் கொண்டு 15 பாடத் தலைப்புகளில் வேறு மொழிகளில் இருந்து 864 நூல்களை தமிழில் கொண்டுவந்தது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இன்றும் பல மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது இந்நிறுவனம்.

பேரறிஞர் அண்ணாவின் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், சர்வதேசத் தரத்திலான நவீன நூலகமாக, அண்ணா நூற்றாண்டு நூலகம் 15.09.2010 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் இறந்துவைக்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய நூலகம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பிற நூலகங்களைப் பார்வையிட்ட பின்னர், அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்டது. பரப்பளவில் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் விளங்குகிறது. தமிழகத்தின் அறிவுக்கருவூலமாகத் திகழவேண்டும் என்கிற நோக்கில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் வடிவமைத்தார்.

இன்று, ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் வந்து படிக்கும் இடமாக, பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பல பயிற்சி வகுப்புகள் நடக்கும் இடமாக அறிவுத் துறையில் தமிழர்களைப் பல அடிகள் முன்னோக்கி நகர்த்தும் விதமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட்டுவருகிறது. தொலைநோக்குப் பார்வையுடன் இந்நூலகத்தை வடிவமைக்க கலைஞர் தனி சிரத்தை எடுத்துக்கொண்டார்.

கலைஞரின்வழி பதவியேற்றிருக்கும் இன்றைய தமிழ்நாடு அரசு, கல்விக்கென பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் வாயிலாக, ஒன்று முதல் மூன்றாம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கான எண்ணறிவும் எழுத்தறிவும் உறுதிசெய்யப்படுகிறது. எட்டு வயதிற்குள் குழந்தைக்கு இந்த அறிவை ஊட்டுவதை ஆசிரியர்கள் பாடல்கள், நடனம், நாடகம், விளையாட்டுகள் வாயிலாக நிகழ்த்திக்காட்டுகின்றனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படத் தொடங்கியபின், மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்திருக்கிறது. மலைப் பகுதிகளில் தொலைவில் இருந்துவரும் குழந்தைகள், அடித்தட்டு மக்களின் குழந்தைகள், இத்திட்டத்தின்மூலம் பெருமளவில் பயனடைகிறார்கள். 20.2 லட்சம் குழந்தைகள் (1 முதல் 5 வகுப்பு) தமிழ்நாடு முழுதும் பள்ளிகளில் காலை உணவு உட்கொள்கிறார்கள். முன்பைவிட மாணவர்களின் கவனிக்கும் திறன் கூடியுள்ளதையும், எழுதும்-வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளதையும் மாநில திட்ட கமிஷனின் ஆய்வு தெரிவிக்கிறது.

மாணவர்கள் முன்பைவிட உடல்நலத்தோடு ஆரோக்கியமாக இருப்பதையும் ஆய்வுகள் சொல்கின்றன. 2023 டிசம்பர் தொடங்கி 2024 டிசம்பர் வரை மருத்துமனைகளுக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 60சதவிகித குறைந்துள்ளது. தீவிரமான நோய்த் தாக்குதல்கள் 70 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அளிக்கும் கல்வி உதவித்தொகை அச்சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பெரிதும் உதவுகின்றது. முதல் வகுப்பு தொடங்கி பிஎச்டி வரையிலான அவர்களுடைய ஒட்டுமொத்த கல்விக்கும் இத்தொகை உதவிகரமாக உள்ளது.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்ட நிலையில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைப் போக்கும் வகையில் தொடங்கப்பட்ட ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம் லட்சக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு பெருவெற்றிபெற்றது. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கிராமமொன்றில் வகுப்பு எடுக்கும் தன்னார்வலர் தலித் என்பதால் ஆதிக்க சாதியினர் குழந்தைகளை அனுப்ப மறுத்தனர். ஆனால், வகுப்பில் அன்றாடம் தலித் குழந்தைகள் ஆடல், பாடல் விளையாட்டு என மகிழ்வுடன் பாடங்களைக் கற்ப பள்ளியில் சொல்லக் கேட்டு, பிற குழந்தைகள் இல்லம் தேடிக் கல்வி வகுப்புக்கு வரவேண்டும் என அழுது பிடிவாதம் பிடித்து, அதனால் பெற்றோர் வேறுவழியின்றி வகுப்புக்குக் கொண்டுவந்து விட்ட காதைகளும் உண்டு. இதுபோன்ற சமூக மாற்றத்திற்கும் இத்திட்டம் பல இடங்கள் வழிவகுத்ததுடன், கற்றல் இடைவெளியைப் போக்கவும் உதவியது.

ஒவ்வோர் அரசுப் பள்ளியிலும் உருவாக்கப்பட்ட உயர்கல்வி வழிகாட்டி மையம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவுகிறது. 9 ஆம் வகுப்பு முதலே உயர்கல்வி வழிகாட்டி புத்தகம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் உரையாடுதல், வெளிப்பாட்டுத் திறன், வழிகாட்டி மையங்கள் மாதிரித் தேர்வுகளை எழுதுதல் உட்பட பல செயல்பாடுகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் உதவுகின்றன. மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம்; அவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டறிந்து, அவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுவதோடு, அவர்களின் வேலைவாய்ப்பையும் உறுதிசெய்கிறது.

பள்ளிகளைப் பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் ஊர் மக்களும் இணைந்து நிர்வகிக்கும்படியான ஜனநாயக மாற்றத்தைக் கொண்டு வந்தது தி.மு.க. அரசு. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மொத்தமுனை 37,655 பள்ளிகளிலும் உருவாக்கப்பட்டன. பெண் ஒருவரை தலைவராகக் கொண்டிருக்க வேண்டும், 50 சதவிகித உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும், அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன்கூடிய  பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான தேர்தல் ஒவ்வொரு பள்ளியிலும் நடந்து, உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை இக்குழு நிறைவேற்றித் தருவதோடு, பிள்ளைகள் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வருவதையும் உறுதிசெய்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுக்கள்மூலம் பள்ளிகள் ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கின்றன.  `நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி’ திட்டத்தின் வாயிலாகப் பெருநிறுவனங்களின் பங்களிப்பைப் பணமாகவோ பொருளாகவோ பெற்று, அத்தந்தப் பள்ளிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன. முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு, மாநில அளவில் அரசு உருவாக்கிய ‘விழுதுகள்’ அமைப்பும் பள்ளிகளின் மேம்பாட்டிற்கென பங்களிப்பை வழங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கென தனியே சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பள்ளிகளுக்கு வரமுடியாத குழந்தைகளுக்கு வீடுகளுக்குச் சென்று பாடமெடுப்பதும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், பள்ளிக் கல்வித் துறையின் சிறப்புன முன்னெடுப்புகளில் ஒன்று. ஆண்டுதோறும் மாணவர்களின் எடை, உயரம் கண்டறிவது உட்பட அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. கண்பார்வையை சரிபார்த்து, கண்ணாடி வழ திட்டமும் உண்டு.

மாணவர்களுக்கு, மாதந்தோறும் உலகத் திரைப்படங்களைத் திரையிடுவதன்மூலம் அவர்களை உலகின் வெவ்வேறு கலாச்சாரங்களை அறிந்துகொள்ளச் செய்வதும் அவர்களுடைய ரசனையை மேம்படுத்துவதும் நடந்துவருகிறது. இப்படங்களைச் சிறப்பான முறையில் விமர்சனம் செய்யும் மாணவர்கள், மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு திரைப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க வேண்டும் என்கிற அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலின்படி, ‘வானவில் மன்றம்’ என்கிற அமைப்பு பள்ளிகள்தோறும் தொடங்கப்பட்டிருக்கிறது.

அனைத்திற்கும் மகுடம் வைத்ததுபோல 2021ல் தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகளில் ஜோஈ, நீட், க்ளாட், க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு முறையாகப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. உண்டு உறைவிடப் பள்ளிகளாகச் செயல்படும் பள்ளிகளில் விடுதி வசதி, பரிசோதனைச் சாலைகள், நூலகங்கள், கணினி வசதி, விளையாட்டு வசதிகள் போன்றவற்றோடு கலைத்திறனையும் தனித்திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையிலான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

ஐஐடி போன்ற நிறுவனங்களில் பயிலச் செல்லும் மாணவர்களில் சிலர், பாடச் சுமை தாங்காமலும் அங்குள்ள பெரும்பான்மை உயர்சாதி ஆதிக்கத்திற்கிடையில் தாக்குப்பிடிக்க முடியாமலும் கல்வியைப் பாதியில் விடுவதைப் பார்க்கிறோம். சில தற்கொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு நிறுவனத்தில் ஒரே ஒரு அரசுப் பள்ளி மாணவர் சென்று பயில்வதற்கும் பல அரசுப் பள்ளி மாணவர்கள் அதே வளாகத்தில் பயில்வதற்கும் வேறுபாடு உண்டு. ஒருவரோடு ஒருவர் துணை நின்று தடைகளைக் கடந்துவிட முடியும். இந்த உண்மையை உணர்ந்துகொண்ட தி.மு.க. அரசு, கொத்துக் கொத்தாக உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்ப வேண்டும் என முடிவுசெய்து, அதற்காகவே உருவாக்கப்பட்டவை மாதிரிப் பள்ளிகள்.

கடந்த நான்காண்டுகளில், நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனங்களுக்கு முதன்முறையாக 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமப்புற அடித்தட்டு மாணவர்கள் மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் அறிவியல் புலத்தில் உயர்கல்வி பயிலச் சென்றிருக்கின்றனர். சிலர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்விக்காகச் சென்றிருக்கின்றனர். இவர்களுக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டிருக்கிறது. 2021-22 கல்வியாண்டில் 75ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2024-25ல், 910ஆக உயர்ந்திருப்பது அசாதாரணமானது.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்கிற நிகழ்வை தமிழ்நாடு அரசு நடத்திக் காட்டியது. அதில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முதன்மை கல்வி நிறுவனங்களுக்குச் சென்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மேடையேறி, தங்கள் அனுபவங்களை எடுத்துச் சொன்னபோது, தமிழ்நாடே கண்ணீரோடும் பெருமையோடும் அவர்களைப் பார்த்தது. மாதிரிப் பள்ளிகள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் மகத்தான சாதனை இது. மாவட்டத்திற்கு ஒன்று என செயல்பட்டுவந்த மாதிரிப் பள்ளிகள் வட்டார அளவிலும் செயல்படத் தொடங்கி இருக்கின்றன.

சாதி, வர்க்கம், பாலினம் என அனைத்துத் தடைகளையும் உடைத்து, இந்த வரலாற்றுச் சாதனையை நம் அரசுப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள். சமூக நீதியிலும் சமத்துவத்திலும் தமிழ்நாடு சாதித்திருக்கிறது என்பதற்கான சான்றாக இச்சாதனை வரலாற்றில் நிலைத்திருக்கும்.

‘மணற்கேணி’ என்கிற டிஜிட்டல் கற்றல் தளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, மாணவர்கள் வீடியோ விளக்கங்களுடன் தங்கள் பாடங்களைப் பயில முடியும். உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி வாயிலாக ஆசிரியர்கள் கற்பிக்கும்பொழுது, மாணவர்களுக்கு அது காட்சிரீதியான அனுபவத்தை வழங்குவதால் பாடப்பொருளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள் எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் மணற்கேணி செயலியைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலை செய்யப் போய்விடுவது, வறிய குடும்பங்களில் இன்றும் நடந்துவருகிறது. இப்படி இடைநின்றுவிடும் குழந்தைகளைக் கண்டறியவென்றே ஒரு செயலியை உருவாக்கியுள்ளது, தி.மு.க. அரசு. ஒரு குழந்தை, மூன்று நாட்கள் வரை வகுப்புக்கு வரவில்லை எனில், அது வகுப்பாசிரியரின் கவனத்தைக் கோரும். ஒரு வாரம் வரவில்லை எனில், அக்குழந்தையின் வருகைப் பதிவு விவரங்கள் டேஷ் போர்டில் தலைமையாசிரியருக்குப் போகும்.

அதன்பின்னும் வரவில்லை எனில் மாவட்ட ஆட்சியரின் டேஷ் போர்டிற்கும் 15 நாட்களாகிவிட்டால், முதலமைச்சரின் டேஷ் போர்டிற்கும் சென்றுவிடும். ஆகவே, ஒரு குழந்தை பள்ளிக்கு வரவில்லையெனில் அக்குழந்தையை வகுப்பாசிரியர், தலைமையாசிரியர் அனைவரும் தேடி மீண்டும் பள்ளிக்கு அழைத்துவருகின்றனர். இதற்காக சிரத்தையோடு பெற்றோரிடம் பேசி, மாணவர்களை வரவழைக்கின்றனர். இதன்மூலம் குழந்தைத் தொழிலாளிகள் உருவாவது தடுக்கப்படுவதோடு, அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்பதை உறுதிசெய்யப்படுகிறது.

மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் கலைத் திருவிழா, பெரும். வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர்வதிலும் ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்துவதிலும் கலைத் திருவிழாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழ்நாட்டில், முதன்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கென ‘தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ ஆகிய இரண்டு சிறார் இதழ்களும், ஆசிரியர்களுக்கென ‘கனவு ஆசிரியர்’ என்கிற இதழும் தி.மு.க. அரசால் தொடங்கப்பட்டது. சிறார்களையும் படைப்பாளிகளாக்கும் முயற்சி இது. சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதற்காக வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. ஒரு நாளில் 20 நிமிடங்கள் வாசிப்புக்கென ஒதுக்கப்பட்டு, இத்திட்டத்திற்காகவே எழுதப்பட்ட நூல்களை மாணவர்கள் வாசிக்கின்றனர். சிறார் இலக்கியத் திருவிழா, வினாடி- வினா போட்டிகள் என மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்து அவர்களை முழுமையான மனிதர்களாக இச்சமூகத்திற்கு ஒப்படைப்பதை பள்ளிக் கல்வித் துறை தன் கடமையாகக் கொண்டுள்ளது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கல்வியின் வழியே சமூக நீதி!

ஒட்டுமொத்தமாக, தி.மு.க. அரசு எடுத்துள்ள இத்தகைய நடவடிக்கைகளும் செயல்படுத்திவரும் திட்டங்களும் மாபெரும் கல்வி எழுச்சிக்கு வழிகோலியுள்ளன. அதன் விளைவுகளும் கண்கூடாகத் தெரிகின்றன.

புதிய கல்விக்கொள்கை என்கிற சனாதன கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியபின், அதை தமிழ்நாட்டில் பின்பற்ற மாட்டோம் என்கிற துணிச்சலான முடிவை எடுத்தது. தி.மு.க. அரசு. இதன் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய ‘சமத்ர சிக்ஷர் தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவைத்தபோதும் அத்தொகை இன்றியே இன்றளவும் சமாளித்துவருகிறது. தி.மு.க. அரசு. முன்னெப்போதும் இல்லாத வகையில் பள்ளிக் கல்வித் துறைக்கென ரூ.46,767 கோடி ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கென ஒதுக்கப்படும் நிதி அதிகரித்தவண்ணம் உள்ளது.

புதிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கை ஒன்றை உருவாக்குவதற்காகக் குழு ஒன்றை அமைத்தது, தி.மு.க. அரசு. அக்குழு தன் பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது.

அதிக அளவில் பள்ளிக்கூடங்களைத் திறப்பது, விடுதிகளைக் கட்டுவது, விளிம்புநிலை மக்களுக்கு உதவித்தொகைகளை வழங்குவது எனக் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்காகவே தமிழ்நாட்டின் வரலாற்றில் எப்பொழுதும் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாகக் கல்வி கற்றல் குடிமக்களின் உரிமை என்றானது.

வேளாண் குடியிலிருந்தும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களிலிருந்தும் தினக்கூலிக் குடும்பங்களில் இருந்தும் வந்த முதல் தலைமுறை குழந்தைகள் மெல்ல மெல்ல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நுழைந்தனர். சமூக நீதி காத்த பெருமைமிகு வரலாறு கொண்ட தமிழ்நாட்டில், கல்வியில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் மேலும் கவனம் குவிக்கப்பட்டு, செயலூக்கத்தோடு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

MUST READ