நிலம் தொடர்பான சட்ட சிக்கல்களை தவிர்க்க, கூட்டு பட்டா, தனி பட்டா பற்றிய தெளிவான அறிவு அவசியம். உரிமையாளர்களின் ஒப்புதல் மற்றும் சரியான ஆவணங்கள் இருந்தால், தனி பட்டா பெறும் நடைமுறை எளிதாகவும் விரைவாகவும் பெற பின்பற்ற படவேண்டிய வழிமுறைகள் குறித்த விளக்கம் பின்வருமாறு…
நில உரிமையை உறுதிப்படுத்தும் முக்கிய அரசாணை ஆவணம் தான் பட்டா. ஒரு நிலம் யாருடைய பெயரில் உள்ளது, அதன் சர்வே எண், பரப்பளவு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் ஆவணமாக பட்டா பயன்படுகிறது. நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் பயன்பாட்டை பொறுத்து பட்டா வகைகளும் மாறுபடுகின்றன.
பட்டாவின் வகைகள்
- தனி பட்டா (Individual Patta)
- கூட்டு பட்டா (Joint Patta)
- கூட்டு பட்டாவில் இருந்து பிரிக்கப்பட்ட தனி பட்டா
கூட்டு பட்டா என்றால் என்ன?
ஒரே நிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உரிமையாளர்களாக இருப்பின், அனைவரது பெயர்களும் சேர்த்து வழங்கப்படும் பட்டா தான் கூட்டு பட்டா. இதில் யாருக்கு எவ்வளவு நிலம் என்பது தனித்தனியாக குறிப்பிடப்படாது.

தனி பட்டா என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான நிலப்பகுதியை தனியாக பிரித்து, சர்வே எண், உட்பிரிவு எண் உள்ளிட்ட விவரங்களுடன் வழங்கப்படும் பட்டா தான் தனி பட்டா.
கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெறுவது எப்படி?
கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெற, அந்த நிலத்தில் உரிமை உள்ள அனைவரும் சம்மதிக்க வேண்டும். வாரிசு சொத்தாக இருந்தால், வாரிசு சான்று அல்லது பங்கீட்டு பத்திரம் அவசியம். தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையம் மூலம் “பட்டா பிரிப்பு” விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் பழைய பட்டா, சிட்டா, அடங்கல், பங்கீட்டு/விடுவிப்பு பத்திரம் போன்ற ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். VAO மற்றும் நில அளவையாளர் நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள்.
தாசில்தார் ஒப்புதல் அளித்த பின், கூட்டு பட்டா ரத்து செய்யப்பட்டு, தனித்தனி பட்டாக்கள் வழங்கப்படும். அனைவரின் ஒப்புதல் இருந்தால், 30 முதல் 60 நாட்களில் தனி பட்டா கிடைக்கும். ஒப்புதல் இல்லையெனில், நீதிமன்ற தீர்ப்பு பெற வேண்டிய நிலை ஏற்படும்.
தனி பட்டா பெற தேவையான முக்கிய ஆவணங்கள்
- தற்போதைய கூட்டு பட்டா
- முந்தைய பட்டா நகல்
- விற்பனை / பரிசளிப்பு பத்திரம்
- பங்கீட்டு உடன்படிக்கை
- நில வரைபடம்
- சொத்து வரி ரசீது
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- ரேஷன் கார்டு
- நில அளவை கோரிக்கை மனு
- மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது எப்படி?
விற்பனை, பரிசு அல்லது வாரிசு அடிப்படையில் பெயர் சேர்க்க வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வழியாக பட்டா மாற்றம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தாசில்தார் அதிகாரம் உடையவர்.
கூட்டு பட்டாவில் பெயர் நீக்குவது எப்படி?
ஒருவரின் பெயரை நீக்க வேண்டுமெனில்,பதிவு செய்யப்பட்ட விடுவிப்பு பத்திரம் (Release Deed) அல்லது நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், வருவாய் துறை அலுவலகத்தில் பட்டா திருத்தம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
சுமார் ரூ.2 கோடி அளவிலான தங்க கட்டியை கொள்ளையடிக்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் போலீசார் மீட்டு சாதனை…


