spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது - டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது – டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

-

- Advertisement -

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது என திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளாா்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கம் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது - டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து திமுக முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.

we-r-hiring

அப்போது பேசிய டி.ஆர்.பாலு, தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கும் போது தமிழ் தாய் வாழ்த்துடன் பேரவை நடைபெறுவது மரபு என்றும், இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம் என்றும் குறிப்பிட்டார். ஆனால், ஆளுநர் ‘ஜன கன மன’ தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவதோடு, சட்டமன்றத்தை புறக்கணித்து வெளியேறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், மக்களையும் அவமதிக்கும் செயல் என குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தை அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் முன்வைத்ததாக தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த டி.ஆர்.பாலு, இந்த தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். ஓசூர் விமான நிலையம் தொடர்பாக ராணுவத்தின் கடிதத்தை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசு தேவையான அனுமதிகளை வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை அது நடத்தப்படவில்லை என்றும், உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியதாக டி.ஆர்.பாலு கூறினார். கச்சத்தீவு விவகாரத்தில், இந்தியா – இலங்கை இடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளதால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மெட்ரோ சேவை வழங்க முடியாது என்ற காரணத்தை முன்வைத்து மத்திய அரசு திட்டங்களை நிராகரிப்பதாக குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கூறினார். அதேபோல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை வேறு பெயரில் மாற்றி புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பது மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துவதாகவும், எனவே அந்த சட்டத்தை திரும்பப் பெற்று, பழைய திட்டத்தை அதே பெயரில் அமல்படுத்த வேண்டும் என கோரியதாக தெரிவித்தார்.

கல்விக்கான நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்றும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கம் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது - டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, ஆளுநர் தொடர்ந்து சட்டமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகக் கூறினார். இந்த விவகாரத்தில் தெளிவான வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்றும், சட்டமன்ற கூட்டத்துக்கு முன் ஆளுநர் உரை அவசியம் என்ற மரபை மாற்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சட்டசபையில் ஆளுநர் உரை கட்டாயமில்லை என்ற திருத்தத்தை அரசியல் சாசனத்தில் கொண்டு வர வேண்டும் என திமுக முன்மொழிவதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் அனைத்தையும் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதாகவும், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் திருச்சி சிவா தெரிவித்தார். இந்த விவகாரங்களை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தொடர்ந்து எழுப்புவோம் என்றும் அவர் கூறினார்.

பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழு தமிழகம் வருகை…

MUST READ