சுந்தரபுத்தன்
எதற்கெடுத்தாலும் ஊருக்குத்தான் வண்டிகட்ட வேண்டியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் இருக்கிறது கண்கொடுத்தவனிதம். எங்கள் ஊர். அருகருகே ஆலத்தாங்குடி, தக்களூர், விடையபுரம், காவாலகுடி, வடபாதி, தென்பாதி,திருமாஞ்சோலை, பருத்தியூர், வடக்குசேத்தி எனப் பல சின்ன கிராமங்கள் உண்டு. காலையும் அந்திமாலையும் எல்லோரும் வந்துபோகும் கடைத்தெருவுக்குப் பெயர் முக்கூட்டு.
அங்குதான் அரசியல் கூட்டங்கள் நடக்கும். அந்தப் பொதுக்கூட்டங்கள் பலவிதமாக இருக்கும். எல்லாக் கட்சிகளும் அங்குதான் கூட்டங்களை நடத்துவார்கள். உள்ளூர் அரசியல் பிரச்சினைகள் தொடங்கி, தலைமைக்கழகம் அறிவுறுத்தும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள், கண்டனக் கூட்டங்கள், கவனஈர்ப்புக் கூட்டங்கள் மற்றும் கண்டனப் பேரணி, உண்ணாவிரதம் என எல்லாவற்றையும் கட்சியினர் நடத்துவார்கள்.

நான் கல்லூரியில் படிக்கும் வரையில் ஊரில்தான் இருந்தேன். எத்தனை எத்தனை பொதுக்கூட்டங்கள், போராட்டங்களைப் பார்த்திருக்கிறேன். வட்டம், மாவட்ட அளவில் தொடங்கி, மாநில அளவில் புகழ்பெற்ற பேச்சாளர்கள் வரை ஊரில் பார்க்கலாம். உள்ளூர்க்காரர்களே பெரும் பேச்சாளர்களாக இருப்பார்கள். சாதாரண நாட்களில் வயலில் இறங்கி விவசாயம் செய்துகொண்டிருப்பார்கள். கூட்டம் என்று வந்துவிட்டால் மைக்கைப் பிடித்து முழக்கமிடுவார்கள். இப்படிப் பலரை நான் கிராமத்தில் பார்த்திருக்கிறேன். அவர்களைப் போன்ற எளிய தொண்டர்கள் நீரூற்றி வளர்த்த விருட்சம்தான் தி.மு.க.
கொரடாச்சேரி ஒன்றிய அளவில் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள்தான் கூட்டம் நடத்துவதற்கான அனுமதி தருபவர்களாக இருப்பார்கள். உள்ளூரில்தான் ஏற்பாடுகள் நடக்கும். ஒன்றியச் செயலாளரின் ஒப்புதலுடன் கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார்கள். கொரடாச்சேரியில் நகரச் செயலாளராக இருந்து மாவட்டச் செயலாளராக உயர்ந்தவர், மறைந்த பூண்டி கே.கலைச்செல்வன். இன்று அவரது சகோதரர் பூண்டி கே.கலைவாணன் தற்போதைய திருவாரூர் மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர். நான் பள்ளியில் படிக்கும் காலங்களில், ஒன்றிய சேர்மனாக, பொன். நரசிம்மன் இருந்தார். எங்கள் கிராமப் பகுதியில் தி.மு.க.வின் பிரபல பிரமுகராக அவர்தான் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். பக்கத்து ஊரான பருத்தியூர்தான் அவரது சொந்த ஊர். என்பீல்டு புல்லட்டில் போய்வருவார். காலையில் கொரடாச்சேரி சென்றால் மாலையில் வீடு திரும்புவார். உள்ளூர் பேச்சாளர்களில் அவருடைய பேச்சுக்கு மவுசு இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் நகரச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் மிகுந்த முனைப்புடன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவார்கள். மாவட்டச் செயலாளர்கள் சொல்வதற்கு முன்பே பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான திட்டமிடல்களில் ஈடுபடுவார்கள். மாதத்திற்கு ஒரு கூட்டமாவது நடந்துவிடும். அதற்கான ஏற்பாடுகள் ஏதோ திருவிழாபோல இருக்கும். பல நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் தயாராகிவிடும். தி.மு.க. பொதுக்கூட்ட அழைப்புகளுக்கான நோட்டீஸ் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். வெள்ளை நிறத்தில் கருப்பு சிவப்பு எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதுவொரு தனித்துவமான அழகைக் கொடுக்கும்.

சிறப்புப் பேச்சாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்கள் மத்தியில் கொட்டை எழுத்துகளில் காணப்படும். அதற்கடுத்த நிலையில் ஊரில் உள்ள கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரது பெயர்களையும் பொடி எழுத்துகளில் அச்சிட்டிருப்பார்கள். பெரும்பாலும் கொரடாச்சேரியில் கருணாநிதி அச்சகம், அன்னை அச்சகம் அல்லது மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருவாரூரில் உள்ள அச்சகங்களில்தான் நோட்டீஸ்கள் தயாராகும். நோட்டிஸின் கீழே அச்சகத்தின் பெயர் இடம்பெற்றிருக்கும்.
மேடை போடுவதும் ஒரு கலைதான். கீற்று வேய்ந்த சிறு பந்தல் போடுவார்கள். மேடைக்கு வசதியாகப் பலகை போட்டிருப்பார்கள். அவ்வளவு பலமாக சவுக்குக் கம்புகளைக் கட்டிவைத்திருப்பார்கள். புயலுக்கும் மழைக்கும் அசையாமல் இருக்கும். இதுவும் கட்சிப்பணிகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. கழகப் பொறுப்பாளர்கள், ஊர் ஊராகச் சென்று நோட்டீஸ் கொடுத்து கூட்டத்திற்கு அழைப்பார்கள். கல்யாணத்திற்கு அழைப்பது மாதிரிதான். கூட்டம் நடைபெறும் நாளன்று ஊரே விழாக்கோலமாக இருக்கும். அதுவொரு கார்காலம் கண்ணே, என்பது மாதிரி நான் சிறுபிராயத்தில் பார்த்த அரசியல் பொதுக்கூட்டங்கள் இருந்தன.
பெரிய பேச்சாளர்கள் கிடைக்காதபோது உள்ளூர் பேச்சாளர்களே கூட்டங்களைக் களைகட்ட வைத்துவிடுவார்கள். சிலரது பெயர்களை நினைவுகூர விரும்புகிறேன். கொரடாச்சேரி பகுதிகளில் எந்த ஊரில் தி.மு.க. கூட்டம் நடந்தாலும் அவர்களது பெயர்கள் இருக்கும். பொன். நரசிம்மன், பூண்டி கே.கலைச்செல்வன், எஸ்.பி.சேசுராசன், கா.பழநிமுருகையன், தஞ்சைத்தம்பி, கோ.வில்வளவன், தரும வெங்கடாசலம், அரங்க சத்தியமூர்த்தி, இரா.கிருஷ்ணமூர்த்தி, சிவ புண்ணியம், கருணாமூர்த்தி, தாழை மு.அறிவழகன், நட்டுவாக்குடி அன்பழகன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நாலில்ஒன்று கிராமத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவர், அண்ணா காலத்திலேயே உள்ளூரில் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்கியிருக்கிறார்.
அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களும் அவ்வப்போது கூட்டங்களுக்கு வந்துபோவார்கள். போராட்டங்களுக்குத் தலைமையேற்பார்கள். தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்களாகப் பணியாற்றிய கே.கே.நீலமேகம், மன்னை ப.நாராயணசாமி, தாழை மு.கருணாநிதி, பழநிமாணிக்கம், டி.ஆர்.பாலு, எஸ்.என்.எம்.உபயதுல்லா, போன்ற தலைவர்களும் கொரடாச்சேரி வட்டாரங்களுக்கு வந்து பேசியிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. கட்சியின் முக்கிய முகங்களை எல்லாம் உள்ளூரில் பார்க்கலாம். உரைவீச்சைக் கேட்கலாம்.
கொரடாச்சேரியில் பொதுக்கூட்டம் என்றால் காந்தி பூங்காவில்தான் நடைபெறும். அங்கு வராத தலைவர்களே இல்லை. எத்தனையோ முறை கலைஞர் வந்திருக்கிறார். தேர்தல் நேரமென்றால் தினமும் ஒரு கூட்டத்தை அங்கே பார்க்கலாம். இங்கு வந்து பேசாத தி.மு.க. தலைவர்களே இல்லையென்று சொல்லமுடியும்.
காந்தி பூங்கா எப்படி இருக்கும் என்று சொல்லியாக வேண்டும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இந்தப் பூங்காவுக்குத் தனியொரு இடம் இருக்கிறது. கொரடாச்சேரி ரயில்வே ஸ்டேசன் அருகே நிரந்தரமான பெரிய அலங்கார வளைவு ஒன்று இருக்கும். அதன் இடதுபுறத்தில் இருக்கிறது காந்தி பூங்கா. நான் பள்ளியில் படித்த காலத்தில் அதனருகில் ஒரு சைவ ஹோட்டல் இருந்தது. வாசலில் காந்தியின் அழகான சிலை. பார்ப்பதற்கு வயதான குழந்தை போல இருப்பார் காந்தி. தூங்குமூஞ்சு மரங்கள் நிறைந்த திடல் அது. ஸ்டேசனையொட்டி அரசுக் கிளை நூலகம். பழைய சீம ஓடுகள் வேய்ந்த பழைமையான கட்டடம். அவ்வப்போது ரயில்கள் நிற்பதும் போவதுமாக இருக்கும். மரநிழல்கள் படிந்த வளாகத்தில் நாற்காலிகள் போட்டிருப்பார்கள். அதில் உட்கார்ந்து படிப்பதே தனி சுகம். கடைசி மூலையில் மேடை. அதுவும் காங்கிரீட் மேடை. சீரணி அரங்கம் போல இருக்கும். எந்தப் பந்தலும் போடவேண்டியதில்லை. வெயிலே தெரியாத மாதிரி நிழல் படர்ந்திருக்கும்.
அறிஞர் அண்ணா தொடங்கி காமராசர், கலைஞர், எம்.ஜி.ஆர், கி.வீரமணி, நாவலர், பேராசிரியர் க.அன்பழகன், சி.பி. சிற்றரசு, என்.வி. நடராசன், ஈ.வெ.கி.சம்பத், சத்யவாணி முத்து, கே.ஏ.மதியழகன், இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஐ. பெரியசாமி, துரைமுருகன், அ.ரஹ்மான்கான். வைகோ, க. சுப்பு, நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், கம்பம் செல்வேந்திரன், நடிகர் வாகை சந்திரசேகர், கோவை ராமநாதன், இளங்காடு இளங்கோவன், புலவர் முருகையன் என பூங்காவில் பேசியவர்களின் பட்டியல் நீளமானது. இன்று வரையில் அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. மாநில அளவில் புகழ்பெற்ற பேச்சாளர்களாக இருந்த இரா.வெற்றிகொண்டான், சிதம்பரம் ஜெயவேல், தீப்பொறி ஆறுமுகம், விடுதலைவிரும்பி, புலவர் ஆடலரசு உள்ளிட்ட பலரும் அவ்வப்போது சிறப்பு பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார்கள்.
கிராமங்களில் மக்களின் கவனத்தைப் பெறுவதற்காகக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது முருகுபாண்டியன், முரசொலி முகிலன் போன்றவர்கள் தி.மு.க.வின் சாதனைகள் பற்றிய பாடல்களைப் பாடுவார்கள். விவசாய வேலைகள் முடித்துவிட்டு களைத்துப்போய் வீடு திரும்பிய கிராமத்து மக்கள், மகிழ்ச்சியாக அந்தப் பாடல்களைக் கேட்பார்கள். பெரிய கூட்டங்கள் என்றால் நாகூர் ஹனிபாவின் கச்சேரி இருக்கும்.
உள்ளூரில் நட்சத்திரப் பேச்சாளர் என்றால் கொரடாச்சேரியில் வாழ்ந்து திசையெங்கும் கொடிகட்டிப் பறந்த பெரியவர் நன்னிலம் நடராசன். தினமும் காலையில் ஊரில் இருந்து கொராடாச்சேரிக்கு சைக்கிளில் சென்று, அங்கிருந்து ரயிலில் பூண்டி செல்ல வேண்டும். அப்படி ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன். அந்த நாட்களில் மாதம் ஒருமுறையாவது கரைவேட்டியின் முனையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு,நன்னிலம் நடராசன் ரயிலில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்திருக்கிறேன் உதவியாளர் ஒருவர் சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு வருவார். அந்தக் காட்சி பசுமையாக மனதில் ஒடுகிறது.
தி.மு.க. இணையதளத்தில் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அவரைப் பற்றிய பெருமையைப் பேசுகின்றன. அதில் சிறு பகுதியை இங்கே நாம் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
“பெரியோர்களே, தாய்மார்களே… நண்பர்களே.., இளைஞர் அணியைச் சேர்ந்த தம்பிமார்களே… என ஒரு கரகரத்த குரல் மெல்லிய ஓடை போல கழக மேடைகளில் ஒலிக்கத் தொடங்கும். தொண்டர்கள் சிரிப்பலைகளை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் அவரது பேச்சு, வாகனத்தின் உச்ச வேகத்தைப்போல ஏறும். தொண்டர்கள் சிரித்து மாள்வார்கள். முதல்முறையாக அந்தப் பேச்சைக் கேட்பவர்கள் கிறங்கிய தேனீயாகத் திளைப்பர்.
கழக மேடைகளில் கலைஞர், பேராசிரியர் எனத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துவார்கள். அல்லது தலைமைக் கழக நிர்வாகிகள் செல்வார்கள். அதற்கு முன்னர் தொண்டர்களைத் தயார்படுத்துவது, தலைவர்கள் வரும் வரை அவர்களைச் சோர்வடையாமல் உற்சாகமாக வைப்பது என மேடைகளைத் தன்வசப்படுத்துவது கழக முன்னணி தளகர்த்தர்களின் வழக்கம். அப்படி மேடைகளைத் தன்வசம் செய்த முன்னணிக் களவீரர்களில் ஒருவர்தான், நன்னிலம் நடராசன். இளமைப்பருவம் முதல் இறுதி நாள் வரை கழகத்தின் கொள்கை முழக்கம் செய்தவர். தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்குமுள்ள கழகத் தோழர்களின் அன்பைப் பெற்றவர்” எனப் பேசுகிறது அக்குறிப்பு.
கொரடாச்சேரியில் இருந்து நான்கைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அபிவிருத்தீஸ்வரத்தில் 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று பிறந்தவர், நடராசன். தன் அரும்புப் பருவத்தில் திராவிடர் கழகத்தில் ஆர்வம்கொண்டு அரசியல் ஈடுபாட்டைத் தொடங்கிய அவர், பின்னாளில் தி.மு.க. தொடங்கப்பட்டபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டார். சொந்த ஊரில் சைக்கிள் கடை நடத்தியவர். ஒவ்வொரு பலகையாக வைத்து சாத்தும் கதவு அந்தக் கடையில் இருக்குமாம். சில நேரங்களில் அந்தப் பலகையைக் கீழே போட்டு படுத்து உறங்கிவிடுவாராம். எளிமையான வாழ்க்கை முறையில் இருந்து தமிழ்நாட்டை எழுச்சிபெறவைத்த தலைமுறையின் தவப்பிள்ளைகள் அவர்கள்.
நன்னிலம் வட்டத்தில் கழகத்தை வளர்த்த நடராசனின் கால்படாத ஊர்களே தஞ்சை மாவடத்தில் இருக்காது. பெயர் அறியாத குக்கிராமங்களுக்கும் கால்நடையாக நடந்துசென்ற, மேடையில் முழங்கிய அனுபவசாலி. “நாவன்மை படைத்த நன்னிலம் நடராசன் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமல்ல, பட்டிதொட்டிகளில் கழகக் கொள்கைகளை மேடைதோறும் முழங்கிவந்தவர். படித்தவர்கள் மட்டுமல்ல, பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையோடு பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்” என கலைஞரின் புகழ் வார்த்தைகளே அவரது நாவன்மையின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டிருக்கும்.

1991 ஆம் ஆண்டில், தி.மு.க. முப்பெரும் விழாவில் தலைமைக் கழகத்தின் கலைஞர் விருதும், 1999 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பெற்ற பெருமைக்குரியவர், நன்னிலம் நடராசன் பெரியார் விருதை கலைஞர் கரங்களால் பெற்றுக்கொண்டு இப்படிப் பேசினார்: “தலைவர் எனக்கு விருதுடன் பணம் அளிப்பதை மேடையிலேயே சொல்லிவிட்டார். இதைக் கேட்டதும், நாளை என் வீட்டு வாசலுக்குக் கடன்காரர்கள் வந்து நிற்பார்கள். அதனால், நான் ஊருக்குப் போவதா, சென்னையிலேயே தங்கிவிடுவதா என யோசனையில் இருக்கிறேன்” என்றார், அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்து அடங்கியது.
கொரடாச்சேரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்தில், அப்போது தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு வெள்ளிவாள் வழங்கி மகிழ்ந்தார் நன்னிலம் நடராசன். அதை அண்ணா கையால் வழங்கவைத்தார். அந்தக் கூட்டத்தில் பேசும்போதுதான் எம்.ஜி.ஆரை ‘இதயக்கனி’ என்று முதன்முதலில் அழைத்தார் அண்ணா. ஒரு பத்திரிகையில் எழுதிய தொடரில் இதுபற்றிய குறிப்பை எழுத்தாளர் பி.சி. கணேசன் கட்டிக்காட்டியிருந்தார்.
1949 செப்டம்பர் 17ஆம் தேதியன்று சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பவளக்காரத் தெருவில், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என முடிவெடுத்த காலகட்டத்திலேயே, உள்ளூரில் தொடங்கி உலகளவில் பேசக்கூடிய பேச்சாளர்கள் இருந்தார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் பேச்சில்
ஆளுமை கொண்டவர்களே பெரும் தலைவராக உருவெடுத்தார்கள்.இன்றைய நிலையில், எந்தச் சமூகப் பங்களிப்பும் போர்க்குணமும் இல்லாமல் தலைவர்களாக உருவெடுக்கும் புதியவர்கள் வெகு சாதாரணமாக தி.மு.க.வை விமர்சிப்பதை நாம் பார்க்கிறோம். அந்த மாபெரும் இயக்கத்தின் ஆணிவேர்கள் 75 ஆண்டுகள் பழைமையானவை. ஒவ்வொரு ஊரின் சின்னச் சந்துகளிலும்கூட வேரூன்றி வளர்ந்த இயக்கம் என்பதை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.
இங்கே, உதாரணமாக ஒரு தகவலைச் சுட்டிக்காட்டினால் சரியாக இருக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. பேச்சாளர் சாவல்பூண்டி மா. சுந்தரேசன், தன் முகநூல் பக்கத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பைப் பகிர்ந்திருக்கிறார். அதிலிருந்து தி.மு.க.வில் மேடைப் பேச்சு என்பது எந்தளவுக்கு விழுதிறங்கிய ஆலமரம் என்பது புரியும்.
1951 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாத காலங்களில் நடந்த தி.மு.க.வின் நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார். அதில் அவர், ‘இது தலைமைக்குக் கிடைத்த செய்திகள் மட்டும்தான். அதுவல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு குக்கிராமங்களில், பட்டிதொட்டிகளில் பல நகரங்களில் எத்தனையோ கூட்டங்கள், இசைக்கச்சேரிகள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் நடந்திருக்கின்றன. அவைகளெல்லாம். தலைமைக்குச் சொல்லப்படவில்லை’ என்று குறிப்பிடுகிறார்.

மேலும் அவர், தி.மு.க. தொடங்கப்பட்ட காலகட்டத்தில் முதல் இரண்டு ஆண்டுகளில் பொதுக்கூட்டங்களில் பேசியவர்களின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார். அதைப் படிக்கும்போது, நம் விழிகள் ஆச்சரியத்தில் விரிகின்றன. அண்ணாவில் தொடங்கி மு.கருணாநிதி, இரா.நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், க.அன்பழகன், கே.ஆர்.ராமசாமி, டி.கே.சீனிவாசன், எம்.எஸ்.சிவசாமி, சி.வி.எம். அண்ணாமலை, எஸ்.வி.லிங்கம், கே.ஏ.மதியழகன், ஈழத்து அடிகள், என். வி. நடராசன் கா.அப்பாதுரையார், பாலசுந்தரம் புட்டாசாமி, கணபதி, தில்லைவில்லாளன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, குன்றத்தூர் நடராசன், சத்தியேந்திரன் பிஏ.,பிஎல்., போளூர் சுப்ரமணியம்.
கே.டி.எஸ்.மணி, பி.பி.சிவம், மேலூர் அய்யாசாமி. வானமாமலை, செண்பகராஜன், விஜய கோபால், ஆதிமூலம், வடிவேலு, மருதமுத்து, அமராவதி, அழகரசு, எம்.எஸ்.ராமசாமி, திராவிடமணி, என்.எஸ்.கிருஷ்ணன், பஞ்சாட்சரம், சாம்பு, முத்துகிருஷ்ணன், கோவை ராயப்பன், அங்கமுத்து, சுந்தரம், கோவிந்தராசு, அன்பில் தர்மலிங்கம், டி.வி.முத்துகிருஷ்ணன், எம்.எஸ்.மணி, தங்கவேல், புத்தூர்பாண்டியன், தங்கையன், சேலம் சித்தையன், இராமாமிர்தம் அம்மையார், மா.இளஞ்செழியன், ஏ.வி.பி.பதி, பெத்தண்ணன், சோ.மு.ஜீவரத்தினம்,ரத்தினம், எம்.ஆர்.பாண்டியன், முத்துசாமி, டி.வி.நாராயணசாம், குட்டியப்பன், சி.பி.சிற்றரசு, கோகுல் கிருஷ்ணன், சித்தையன், நாராயணசாமி, வரதராஜுலு, வி.நாடிமுத்து, இளமுருகு பொற்செல்வியார், எம்.எஸ். மணி, ராஜவேலு, சாமிக்கண்ணு, பச்சையப்பன், எம்.எஸ். ராமசாமி, சிதம்பரபாண்டியன், ஏ.கே.வேலன், இராம.அரங்கண்ணல், வி.எம்.ஜான், சத்தியவாணி முத்து, எஸ்.கே.சாமி, எஸ்.ஆர்.சந்தானம், நாரண துரைக்கண்ணன், எஸ்.வேதரத்தினம், எம்.எஸ்.சிவசாமி, ஆர்.எஸ். தங்கப்பழம், பூங்கோதை, ஜி.பி.சோமசுந்தரம், நாஞ்சில் கி.மனோகரன், ஈ.வெ.அ.வள்ளிமுத்து, என்.வி.கலைமணி, முத்து, சித்தையன், பஉசண்முகம், முல்லைவடிவேல், கண்ணதாசன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. இது வெறும் பெயர்கள் அல்ல. தி.மு.க.வின் வேராக இருந்தவர்கள்.
தன் வாழ்நாள் கடைசி வரையில் தி.மு.க.வை விமர்சித்துக்கொண்டே இருந்த துக்ளக் ஆசிரியர் சோ, மணா எழுதிய ‘ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபவங்கள்’ என்ற நூலில் கலைஞரின் பேச்சாற்றல் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்: “கலைஞருடைய மேடைப் பேச்சு தனி ரகம். அதில் கிண்டல், கூர்மையான தாக்குதல், அவருடைய சாமர்த்தியமான வாதத்தை விளக்கும் ஆதாரமான விஷயங்கள், அடுக்குமொழி என்று பல அம்சங்கள் இருக்கும். அவரை விமர்சிப்பவர்கள்கூட அவருடைய பேச்சை ரசிப்பார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
1957ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், குளித்தலை தொகுதியில் நின்று முதல்முறையாக வெற்றிபெற்றார், கலைஞர். அந்த முதல் வெற்றிக்கு, பேச்சும் புதுமையான பிரச்சார முறைகளும் எவ்வளவு உதவியாக இருந்தன என்பதைப் பற்றி அவர் ‘நெஞ்சுக்கு நீதி’யில் சொல்லியிருக்கிறார். ‘தேர்தலுக்கு நாம் புதியவர்கள். ஆனாலும் நமது தேர்தல் பிரச்சார முறைகள், புதுமையும் கவர்ச்சியும் பொதிந்து விளங்கின.

அச்சிடப்பட்ட எனது வேண்டுகோளும் எனது சொற்பொழிவும், சுவர்களிலும் தட்டிகளிலும் மாயூரம் பி.டி.ராஜன் தீட்டிய வண்ணம் பொலியும் வாசகங்களும், எங்கள் வீட்டுப் பிள்ளை மு.கருணாநிதி என்று நண்பர்களால் தயாரிக்கப்பட்ட காலண்டரும், அனைத்துக்கும் மேலாக நாள்தோறும் ஒரு சிற்றூர் சென்று வீடு வீடாக நான் வாக்கு கேட்ட முறையும்,தி. மு.க. கொள்கைகளை விளக்கிப் பேசியதால் மக்களுக்குப் புதிதாக மலர்ந்த ஆர்வமும் தலைவர் அண்ணாவிடமும் பிற முன்னணித் தலைவர்களிடமும் ஏற்பட்ட நம்பிக்கையும் நான் குளித்தலையில் வெற்றிபெறத் துணை செய்தன’ என்று நினைவுகூர்ந்துள்ளார்.
இப்படி அதிசயமாய் நிகழ்ந்த பொற்காலங்களின் தமிழ் அரசியல் வரலாற்றில் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குக் காரணமாய் அமைந்தது. மேடைப் பேச்சுகள்தான் என்பதை நாம் கடந்த பாதைகள் நமக்கு உணர்த்துகின்றன. சாதாரண மனிதர்களைக்கூட சாதிக்கும் தலைவர்களாக மாற்றியவை மேடைப்பேச்சுகள்.
தமிழ்நாட்டின் சின்னச்சின்ன கிராமங்களில் சிற்றூர்களில் சிறு நகரங்களில் முழங்கிய சிறு குரல்களும் மாநிலம் தழுவிய அளவில் மாற்றங்களை உருவாக்கும் மந்திரசக்திகளாக இருந்திருக்கின்றன. என் கிராமம்போலவே எத்தனையோ சிற்றூர்களின் பேசப்பட்ட அரசியல்தான் தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எந்த வயல்வரப்புகளில், டீக்கடை பெஞ்சுகளில், ஆற்றங்கரைகளில், மக்களால் நிலையிலும் வீழ்ந்துவிடாமல் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாக வைத்திருக்கிறது.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!



