2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் தலைவர் எஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க புதிய திராவிட கழகம் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் திமுக தலைமையில் 234 தொகுதிகளிலும் அறிவிக்கப்படவுள்ள வேட்பாளர்கள் வெற்றி பெற புதிய திராவிட கழக நிர்வாகிகள் அயராது பாடுபடுவோம் என்றார். மேலும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் புதிய திராவிடக் கழகத்தின் சார்பாக தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தப் போவதாக அவர் கூறினார். கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் எஸ். ராஜ்குமார் என்று மட்டுமே பெயரை பயன்படுத்த போவதாகவும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இதே பெயரில் தான் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தங்களது ஆறாவது மாநில மாநாட்டில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், வேட்டுவக்கவுண்டரின் உட்பிரிவுகளான வேட்டுவக்கவுண்டர், வேட்டைக்காரர், வேட்டைக்கார கவுண்டர், பூலூவர், பூலுவக்கவுண்டர், புன்னம் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்கார நாயக்கர், வேடர், வேட்டுவர், வில்வேடுவர், மலைவாழ் வேட்டுவர், வால்மீகி, வலையர் ஆகிய பெயர்களில் தமிழகத்தில் BC, MBC, SC, ST, DNC) ஆகிய பிரிவுகளில் உள்ள அனைத்தையும் MBC-யாக வேட்டுவக்கவுண்டர் என்ற பெயரில் அறிவிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் ஆனால் அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அதன்படி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அதிகப்படியான தொகுதிகளில் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார். மேலும் தானும் ஒரு விஜய் ரசிகர் தான் என்றும் ஆனால் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று புதிய திராவிட கழகம் தலைவர் எஸ் ராஜ்குமார் கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் – கே.என்.நேரு உறுதி…


