spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொழில் ஊக்குவிப்பு - தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

தொழில் ஊக்குவிப்பு – தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

-

- Advertisement -

உற்பத்தி துறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.தொழில் ஊக்குவிப்பு - தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

இந்தியாவின் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.

we-r-hiring

இந்தியாவிலுள்ள ஆலைத் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ளதாகவும், அதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், நாட்டில் அதிக அளவில் பெரும் தொழிற்சாலைகள் செயல்படும் முதல் 8 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இணைந்து 40 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்கள் இந்திய தொழில்துறையின் முதுகெலும்பாக மாறி வருவது உறுதியாகிறது.

புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளதாக ஒன்றிய அரசு பாராட்டியுள்ளது. குறிப்பாக ஒற்றைச் சாளர அனுமதி, ஆன்லைன் அனுமதி முறை, நில சீர்திருத்தங்கள் ஆகியவை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன என பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் பாராட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழலைக் கவனத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள், மாவட்ட அளவிலான கார்பன் குறைப்பு திட்டங்கள் ஆகியவையும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.

பெண்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்றும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி வேலைவாய்ப்பை பெருக்கும் ‘தோழி விடுதி’ திட்டம் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றும் ஒன்றிய அரசு பாராட்டியுள்ளது.

மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் உயர் திறன் ஊக்கத்திட்டம் (பணவுறுதி ஆவணம்) சமூக நீதி சார்ந்த வளர்ச்சிக்கு உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்கரையோர பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் கருப்பொருட்களை மையமாகக் கொண்ட ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ திட்டத்திற்கும் ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு கிடைத்துள்ளது.

மொத்தத்தில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு மேற்கொண்டு வரும் முயற்சிகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதாக ஒன்றிய அரசின் ஆய்வறிக்கை உறுதி செய்கிறது.

குழப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ்! நடுத்தெருவுக்கு வந்த தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்

MUST READ