யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மாநில அரசுகள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான விதிகளை வகுத்து அமல்படுத்த வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார்.


யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுகளும், அதனை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் குறித்தும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஜனவரி 13ஆம் தேதி யுஜிசி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா மரணத்தை தொடர்ந்து உயர் கல்வி நிறுவனங்களில் தலித், பழங்குடியின மாணவர்களின் பாதுகாப்புக்காக பொதுவான விதிகளை யுஜிசி கொண்டு வர வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு பழங்குடி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ரோகித் வெமுலாவின் தாயார் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, தற்போதுள்ள விதிகள் போதாது. அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியது. அதன் அடிப்படையில் தான் யுஜிசி கமிட்டி அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரைகள் அடிப்படையில் விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

யுஜிசி புதிய விதிகள் குறித்து, எஸ்.எப்.ஐ வெளியிட்ட அறிக்கையில் தாங்கள் சட்டம் கேட்கிறபோது விதிகளை கொண்டு வந்துள்ளதாகவும், அவற்றில் உள்ள போதாமைகளை சுட்டிக்காட்டி, விதிகளை நேர்மையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதேநேரம் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி, யுஜிசி புதிய விதிகள் இடஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு எதிராக புகார் தெரிவிக்கப் பட்டு, அது தவறான புகாராக இருந்தால் தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை சொல்வது யார் என்றால் டெல்லி பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் சங்கமும், மாணவர் சங்கமும் சொல்லியுள்ளது. டெல்லி மாணவர் சங்க தலைவராக இருப்பது ஏபிவிபி அமைப்பினர் தான். அவர்கள் மோடி அரசிடம் சொல்லி சரிசெய்வதாக சொல்லி இருக்கலாம். ஆனால் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் கேள்வி எழுப்புகிறார்கள். எனவே பிள்ளையையும் கிள்ளி விடுவிகிறார்கள். தொட்டிலையும் ஆட்டி விடுகிறார்கள். ஏபிவிபி மாணவர் அமைப்பை போராட விட்டு உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த வழக்கு நியாயமாக நடத்தப்படவில்லை.

சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகியும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 14 மற்றும் 21ஆம் இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு கவலை இல்லையா? எனவே இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறையும், தீர்ப்பில் அவர்கள் காட்டியுள்ள வழிகாட்டுதல்களும் மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்பின் நோக்கத்திற்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்ற மிகப்பெரிய கவலை ஏற்படுகிறது. இந்த உத்தரவை இடைக்கால தீர்ப்பாக வழங்கவில்லை. இப்படியான ஆபத்து உள்ளதாக அங்கீகரிக்கிறார்கள். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைய தேதி வரை கண்ணியத்தோடு படிக்க முடியவில்லை என்கிற பெரிய உண்மையை மறைத்துவிட்டு, இவர்களை ஒடுக்குபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் கவலைப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்பவர்கள், ஆய்வுப் படிப்பவர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இந்த உண்மையை இதே உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. அந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ரோகித் வெமுலா சட்டம் போடப்பட்டது. சட்டத்திற்கு முன்பாக விதி வந்ததால் எல்லோரும் வரவேற்றார்கள்.

மோடி அரசு கொண்டு வந்ததற்காக யாரும் அதை எதிர்க்கவில்லை. இந்த சட்டம் தவறு செய்தவர்களை தண்டிப்பதற்காக தானே தவிர, தவறு செய்யாதவர்களை தண்டிக்க அல்ல. இது குறித்து அரசால் மாணவர்களிடம் எடுத்துச்சொல்லி இருக்க முடியாதா? சாதிய கட்டமைப்பு இருக்கும் வரை பட்டியல் இன மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இருக்கிறது. அந்த வகையில் யுஜிசி விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்ப்புகளை உச்சநீதிமன்றமே விரைந்து வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவரை காத்திருக்காமல் மத்திய அரசு, வெமுலா சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இதுதான் சரியானது. யுஜிசி விதிகளில் புகார் அளிப்பவரின் பெயர்கள் பாதுகாக்கப்படும் என்று ஒரு விதி சொல்லப்பட்டிருக்கிறது. இது தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் கிடையாது. அப்படி புகார் அளிக்கப்படும் என்ற அச்சம் போக வேண்டும் என்றால், உயர் சாதியினர் கீழே இறங்கி பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினருடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். அப்படி சொன்னால் பிரச்சினையே வராது.

சமூகத்தில் ஒடுக்குபவர்கள் குரல் எழுப்பக்கூடாது என்பது தான் இப்படிபட்ட அச்ச உணர்வை வெளிப்படுத்துகிறது. சாதாரணமான பிராமண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த அச்சம் இல்லை. தவறு செய்யாதவர்களுக்கு அச்சம் ஏற்படவில்லை. யாரெல்லாம் தங்களுடைய தலைமையை, அரசியல் செல்வாக்கை தக்க வைக்க முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு தான் சாதி தேவைப்படுகிறது. அவர்கள் தெரிவிக்கக்கூடிய இந்த கவலையை மக்கள் நிராகரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை தான் விதித்துள்ளது. நீதிமன்றம் மீது இன்னும் நம்பிக்கை உள்ளது. பல்கலைக்கழகங்களை மாநில அரசுகள் தான் நடத்துகின்றன. பல்கலைக்கழக சிண்டிகேட் மற்றும் செனட்களில், அவர்கள் தடை செய்த விதிகளை அமல்படுத்துவோம் என்று முடிவு எடுத்தால் யாரும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் முடிவு செய்து, விதிகளை வகுக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


