2026 தேர்தலில் பாஜகவின் இலக்கு தமிழ்நாடு, கேரளா கிடையாது. அவர்களின் இலக்கு அசாம், மேற்குவங்கம் மட்டும் தான் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.


திமுக கூட்டணியில் அதிகளவு கட்சிகள் சேர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் வருகை, புதிய கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்ற உத்வேகத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளது. விஜய் பேக்டர் என்பது குட்டி குட்டி கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற நிர்பந்தத்தை அவருக்கு கொடுத்துள்ளது உண்மை. 2021-ல் பாரம்பரியமாக திமுகவுக்கு வாக்களிக்காத நபர்களும் ஸ்டாலினுக்காக வாக்களிக்க வேண்டும் என்று சொன்னார்கள். 50 வருடங்களாக முதலமைச்சர் ஆக வாய்ப்பே இல்லாமல் இருந்தவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நினைத்தனர். கலைஞர், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகாக அரசியலில் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டதற்காக பல தரப்பினரும் அவருக்கு வாக்களித்தனர். அந்த ஒரு வசதி இந்த தேர்தலில் இருக்காது என்பது அவருக்கு தெரியும். ஸ்டாலினின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்பட்டிருக்கும். நமக்கு 2021ல் இருந்த அனுகூலங்கள் தற்போது இருக்காது என்பதை அவர் தனது அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளார்.

அதிமுக உள்ளிட்ட வெளிக்கட்சியினரை அதிகளவு சேர்ப்பதால், திமுகவுக்குள் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இன்றைக்கு அதிகாரத்தை தக்க வைப்பது தான் முக்கியம். ஸ்டாலின் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தால் சரிசெய்யலாம். ஆனால் ஸ்டாலின் அந்த விஷயத்தில் கோட்டை விடுகிறார் என்று நினைக்கிறோம். இரண்டாவது முறையாக திமுக 118 இடங்களை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அப்படி வருகிறபோது இந்த பிரச்சினைகள் எல்லாம் பின்னால் போய்விடும். உதயநிதி வருகைக்கு பின்னர் கட்சியில் அதிகார பரிமாற்றம் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துவிட்டது. அதேவேளையில் வெளியில் இருந்து வருபவர்களால் கட்சிக்குள் உள்ள சமனிலை பாதிக்கப்படும். ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு திமுக தலைமை கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் அதுவும் ஒன்று. ஆனால் அவர்கள் கவனம் செலுத்துவார்களா? என்பது சந்தேகத்திற்குரியது தான். இன்றைக்கு அவருடைய ஒரே நோக்கம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது மட்டும்தான். இயற்கையும் கலைஞருக்கு செய்ததை விட பல மடங்கு ஸ்டாலினுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது.

பாஜக என்பது இந்தியாவுக்கு சாபக்கேடு. ஆனால் தமிழ்நாட்டிற்கு வரம். அவர்களால் தான் திமுகவுக்கு இந்த அளவுக்கு வாக்கு வங்கி கூடுகிறது. பாஜக மீண்டும் மீண்டும் செய்கிற தவறுகள், ஸ்டாலினின் பொலிட்டிக்கல் கிராபை உயரச் செய்கிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து திருப்பரங்குன்றம் செல்ல உள்ளார். தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில்கள் இருக்கும்போது அவர் ஏன் அங்கே செல்ல வேண்டும்? பிரதமர் வெளிப்படையாக இப்படியான நிலைப்பாட்டை எடுக்கிறபோது, அது திமுகவுக்கு தான் சாதகம். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் உறுதியாக உள்ளனர். மூன்று தேர்தல்களில் எந்த கூட்டணியும் இணைந்து இருந்தது கிடையாது. ஸ்டாலின் நான்காவது முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளதை அருவருப்பான விஷயமாக பார்க்கிறேன். ஸ்டாலினுக்கு முன்பே முதலமைச்சர் ஆனவர் ஒபிஎஸ். மூன்று முறை முதலமைச்சராக இருந்த அவருக்கு திமுகவில் என்ன பொறுப்பு வழங்குவார்கள் என்று தெரியவில்லை. அவர் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சியில் சேர்த்தது திமுகவின் பலவீனத்தை காட்டுகிறது.

ஸ்டாலினின் 2.0, மோடியின் 3.0 உடன் பல்வேறு வகைகளில் ஒத்துப் போகிறது. ஆட்சி அமைக்க தேவையான அருதி பெரும்பான்மை கூட திமுகவுக்கு கிடைக்காமல் போகலாம். மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்களை கட்சிக்குள் கொண்டு வரும் போது, அவர்களுக்குள் மோதல் அதிகரிக்கும். திமுகவில் உள்ள நிர்வாகிகள் மக்களை மையப்படுத்தி அரசியல் செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அதே வேளையில் அதிமுகவின் நிர்வாகிகள் மக்களை மையப்படுத்திய அரசியல் செய்பவர்கள். திமுகவில் அதிமுக பிரிவினர் அதிகரிப்பதன் மூலம் திமுகவின் டிஎன்ஏவில் மாற்றம் செய்ய ஸ்டாலின் முயற்சிப்பதாக தோன்றுகிறது. சொந்த கட்சியினர் மட்டும் இன்றி மக்கள் நலக்கூட்டணி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளையும் நண்பனாக்கி அவர்களையும் வெளியே செல்ல விடமால் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதற்கு புறக்காரணிகளும் ஸ்டாலினுக்கு சாதகமாக உள்ளது. ஸ்டாலின் ஒரு அதிர்ஷ்டசாலி ஆவார். கூட்டணி கட்சிகள் கட்டுக்கோப்பாக இருப்பது அவருடைய திறமையால் மட்டும் வந்தது கிடையாது. வெளிப்புறத்தில் பாஜக அரசியல் திமுகவுக்கு சாதகமாக வேலை செய்கிறது.

அதிகாரத்தை எப்படி பயன்படுத்து என்று நன்கு அறிந்தவர்களிடம், அந்த அதிகாரத்தை கொடுத்தால், அவர்களிடம் இருந்து அதிகாரத்தை திரும்ப வாங்குவது கடினம். எடப்பாடியிடம் அதிகாரத்தை கொடுத்தார்கள். 2021ல் திரும்ப வாங்கிவிட்டனர். தற்போது 2026ல் அவர் அதிகாரத்தை திரும்ப வாங்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகும். ஸ்டாலினிடம் கொடுத்த அதிகாரத்தை திரும்ப வாங்குவது எளிதாக தெரியவில்லை. 2014-ல் பிரதமர் பதவிக்கு வந்த மோடியிடம் கொடுத்த அதிகாரத்தையே திரும்ப பெற முடியவில்லை. வரலாற்றை முழுமையாக பார்க்கிறபோது சில தனிமனித ஆளுமைகளிடம் அதிகாரம் சென்றுவிட்டால், கட்சியும் வலிமையான சித்தாந்தங்களை கொண்டதாக இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் ஒருமுறை அதிகாரம் சென்றுவிட்டால், அதை திரும்ப வாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல. அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் அதிமுக கூட்டணிக்கு சென்றபோது அந்த கூட்டணி வலிமை பெற்றது போன்ற தோற்றம் அளித்தது. ஆனால் திமுகவில் அதிகமானோர் சேர்ந்ததால் அவர்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி திருப்பரங்குன்றத்திற்கு செல்வது என்பது, அவர்கள் தமிழ்நாட்டு தேர்தலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் என 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் கவனம் மேற்குவங்கத்தில் உள்ளது. ஆர்எஸ்எஸ்-ன் கவனம் அசாமில் உள்ளது. கேரளா, தமிழ்நாடு அவர்களின் ரேடாரிலே இல்லை என்று சொல்கிறார்கள். பீகார் தேர்தல் முடிவுக்கு பின்னர் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சொன்ன வார்த்தைகள், அடுத்து மேற்குவங்கம் என்பதுதான். மற்றொருபுறம் கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பிறகு மோடி, திமுகவை காலி செய்துவிடுவார் என்று சொன்னார்கள். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. டெல்லி மதுபானக் கொள்கையை விவகாரத்தில் கெஜ்ரிவாலை விடுவித்த நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, அமலாக்கத்துறையால் அவ்வளவு எளிதாக போய் யாரையும் கைது செய்ய முடியாது. எனவே திமுகவுக்கு தான் அதிர்ஷ்டம் வாய்த்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


