சென்னை வேப்பேரி பெரியார் திடல் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் எம்.பி, சொற்பொழிவாளர் சுகி சிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர் சுகி சிவம், “இந்திய வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் இடையே இயல்பான ஒரு முரண் இருப்பதை உணரலாம். மகாபாரதத்தில் வரும் கர்ணன் தமிழகத்தில் மிகப்பெரிய கதாநாயகன். ஆனால், வடநாட்டில் அவர் வில்லனாகப் பார்க்கப்படுகிறார். தமிழகம் எதை முன்னெடுக்கிறதோ, அதை இந்தியா பின்பற்றும். நெருக்கடி நிலையின்போது வடக்கே மதச்சார்புள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், தெற்கே இனச்சார்புள்ள திராவிட இயக்கமும் நசுக்கப்பட்டன. இன்று ஒன்று டெல்லியை ஆள்கிறது; மற்றொன்று தமிழ்நாட்டை ஆள்கிறது.
மாநில உரிமைகள் என்று வரும்போது மிகப்பெரிய அநீதி இழைக்கப்படுகிறது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அம்மாநிலத்தின் 13 பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் நேரடி நிர்வாகத்தில் இருந்தன. ஆனால், தமிழகத்தில் மட்டும் பல்கலைக்கழகங்களை மாநில அரசு நிர்வகிக்கக் கூடாது என ஆளுநர் மூலம் தடுக்கிறார்கள். குஜராத்தில் பிறந்தவர் அறிவாளி, தமிழகத்தில் பிறந்தவர் முட்டாளா? இது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்ய விடாமல் கைது செய்தார்கள். ஆனால், இன்று நீதிமன்றமே அவருக்கு எதிராகப் போதிய ஆதாரமில்லை என்கிறது. தேர்தல் நேரத்தில் மாநில அரசுகளையும், எதிர்க்கட்சிகளையும் முடக்குவது போல, மத்திய அரசின் அதிகாரங்களும் தேர்தல் நேரத்தில் முடக்கப்பட்டால் மட்டுமே நியாயமான தேர்தல் நடக்கும்” என்றார். திரைத்துறை குறித்தும், அரசியல் குறித்தும் பேசுகையில், “இங்குள்ள நடிகர்களைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால், இவர்களை விடப் பெரிய நடிகர் நம் பாரதப் பிரதமர் தான். அவர் போடும் வேஷங்களை வேறு யாராலும் போட முடியாது. அவர் நடிக்கிற மாதிரி இனி எவனுமே நடிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

நம் முதல்வர் யாரையும் அழிக்கும் நோக்கம் கொண்டவர் அல்ல. ‘யாரோடும் பகை கொள்ளலன்’ என்ற கம்பராமாயண வரியைப் போல, எதிர்ப்பவர்களையும் அரவணைத்துச் செல்பவர். ஆக்கப்பூர்வமான அரசியல் செய்பவர். மாநில உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வரும் அவருக்கு நீண்ட ஆயுளும், உடல்நலமும் கிடைக்க வேண்டும்” என்று வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், “சமீபத்தில் கொல்கத்தா சென்றிருந்தேன். அங்கு அன்னை தெரசா வாழ்ந்த இல்லத்திற்குச் சென்றோம். உலகிற்கே கருணை வடிவமாகத் திகழ்ந்தவர் அன்னை தெரசா. அங்குள்ள கன்னியாஸ்திரிகள் மற்றும் சேவையாளர்கள், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியையும், முதலமைச்சரின் திட்டங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அங்குள்ள சேவையாளர்கள் என்னிடம், ‘உங்கள் ஊர் முதலமைச்சர் செய்யும் பணிகளை நாங்கள் கவனிக்கிறோம். குறிப்பாக, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம், பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டம் ஆகியவை மிகச் சிறப்பானவை’ என்று பாராட்டினர். அன்னை தெரசாவே நேரில் வந்து பாராட்டுவது போல அவர்களின் வார்த்தைகள் இருந்தன.
மேலும், தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை ‘காலனி’ என்று அழைப்பதை மாற்றி, அதற்கு கண்ணியமான பெயர்களை சூட்டியதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ‘மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு உங்கள் முதலமைச்சரிடம் உள்ளது’ என்று அவர்கள் கூறியது எனக்குப் பெருமையாக இருந்தது. புட்டபர்த்தி சாய்பாபாவைத் தரிசிக்க பக்தர்கள் எப்படி தவம் கிடப்பார்களோ, அதேபோல் இன்று தமிழக மக்கள் நம் முதலமைச்சரைச் சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். சத்ய சாய் பாபா, நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா வரிசையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராக நம் முதலமைச்சர் திகழ்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து, தொடர்ந்து ஏழாவது முறையாகவும் அவரே ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்“ என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் எம்.பி, “முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு 70 வயது என்றால், அதில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலிலேயே ஊறிப்போனவர். நான் அரசியலுக்கு வந்து சில ஆண்டுகளே ஆகின்றன. சினிமாவில் பணம் கொடுத்தால் கூட்டம் வரும், ஆனால் அரசியலில் கொள்கைக்காகவும், ஒரு தலைவனுக்காகவும், ஒரு குடும்பமாகவும் மக்கள் திரள்வது என்பது சாதாரண விஷயமல்ல. அது ஸ்டாலின் அவர்களின் நீண்ட கால உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.
நாங்கள் காந்தி தாத்தா, நேரு மாமா என்று உறவுமுறை கொண்டாடி வளர்ந்த தலைமுறை. தேசத்திற்கு ஆபத்து என்று வரும்போது, ‘நீ ஒரு கட்சி, நான் ஒரு கட்சி’ என்று பிரிந்து கிடப்பது நியாயமல்ல. அந்த சமயத்தில் நாம் ஒரு இனமாக, தேசத்தின் குரலாக ஒன்றிணைய வேண்டும்.
திராவிடம் என்பது தமிழ்நாடு சார்ந்தது மட்டுமல்ல; அது இந்தியா முழுமைக்குமான ஒரு சித்தாந்தம். ‘திராவிடம் நாடு தழுவியது’ என்று நான் சொல்வது வரலாற்றில் நடந்தே தீரும். இந்திய தேசத்தைக் காக்க திராவிடம் என்னும் கவசம் தேவை. இது வெறும் அரசியல் கூட்டணி அல்ல, இது ஒரு சித்தாந்தக் கூட்டணி” என்று கூறினாா்.
விமர்சனங்கள் இருக்கலாம், அதனை எதிர்கொள்ளும் துணிவும் வேண்டும். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம், நிறைகள் இருந்தால் பாராட்ட வேண்டும். அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. ஆனால், விமர்சனம் என்ற பெயரில் வெறுப்பை உமிழ்வதை ஏற்க முடியாது. நான் இங்கு ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் வரவில்லை; ஸ்டாலின் அவர்களின் சகோதரனாக, ஒரு தமிழனாக, இந்தியனாக வந்துள்ளேன். அவருக்குத் தோள் கொடுப்பது தமிழனாகவும், இந்தியனாகவும் எனது கடமை. நாளை நமதாக வேண்டும் என்றால், திராவிடம் எங்கும் பெருக வேண்டும்.
முறிந்த பாஜக சூழ்ச்சி! ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி! தராசு ஷ்யாம் நேர்காணல்!


