ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.


ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்து அதன் அடிப்படை கட்டமைப்பையே பாதிக்கும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், மாநில சட்டப்பேரவைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை சீர்குலையும் என்று எச்சரித்துள்ளார். மாநில தேர்தல்களில் மக்கள் அளிக்கும் தீர்ப்பின் முக்கியத்துவம் குறைந்து, ஜனநாயகத்தின் அடிப்படை உணர்வு மங்கிப் போகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையே தலைகீழாக திருப்பக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை இந்தியா படிப்படியாக அதிபர் ஆட்சிமுறைக்கு செல்லும் சூழல் உருவாகும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
நிர்வாக வசதிக்காக இந்திய ஜனநாயகம் மாற்றி அமைக்கப்படக் கூடாது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக பதவிக்காலம் முடிந்து அரசுகளுக்க பதவி நீட்டிப்பு அளிப்பதன் மூலம் கூட்டாட்சி முறை மீறப்படும். இதனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை சிந்தனைகளுக்கும் கூட்டாட்சி முறைக்கும் எதிரானதாக இருப்பதால், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
” வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு சமரசம்” – முதலமைச்சர் குற்றச்சாட்டு
