பாரத், இன்டேன், எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தம். சிலிண்டர் லோடு ஓட்டுநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிப்பு.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றி வரும் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவிற்கு கப்பல்களின் வருகை தடைப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட துவங்கியுள்ளது. நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு நகரங்களில் உணவகங்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாரத் பெட்ரோலிய நிறுவன எரிவாயு நிரப்பும் ஆலை மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன எரிவாயு நிரப்பும் ஆலையும், அத்திப்பட்டு புதுநகரில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான இன்டேன் எரிவாயு நிரப்பும் ஆலையும் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாரத், இன்டேன், எச்பி எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தகரீதியான சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும், 14 கிலோ எடை கொண்ட சிவப்பு நிற சிலிண்டர்கள் மட்டும் ஆலையிலிருந்து தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீக்கடை, ஹோட்டல்கள் உள்ளிட்ட வர்த்தகரீதியில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட நீல நிற சிலிண்டர்கள் விநியோகம் என்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக ரீதியிலான சிலிண்டர்களை ஏற்றுவதற்காக எரிவாயு ஆலைகளில் காத்திருக்கும் லாரி ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தினக்கூலி அடிப்படையில் லாரிகளை இயக்கி வருவதாகவும் 3 நாட்களாக லோடு ஏற்றப்படாததால் உணவிற்கு கூட வழியின்றி காத்திருக்கும் நிலை உள்ளதாக ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலைமை எப்போது சரி செய்யப்பட்டு தங்களுக்கு லோடு ஏற்றப்படும் என்பது தெரியாத சூழல் உள்ளதாகவும், பல நாட்கள் காத்திருந்து லோடு ஏற்றி சென்றாலும், ஒரு நாள் கூலி மட்டுமே கிடைக்கும் என வேதனை தெரிவித்தனர். வாடகை கட்டிடங்களில் ஹோட்டல் வைத்து நடத்தி வருவதாகவும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விறகு அடுப்பு கூட பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பே விறகு அடுப்புகளில் இருந்து சிலிண்டருக்கு மாறிவிட்ட சூழலில் திடீரென விறகு அடுப்புகளை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்களது கடையில் பணி புரியும் ஊழியர்களுக்கான ஊதியம், கடை வாடகை, சமையலுக்கான பொருட்கள் என அனைத்தையும் வாங்கி வைத்த நிலையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல் மூடப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தங்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் உடனடியாக சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
