பாஜக அரசு விளம்பரத்துக்கு செய்த செலவில் மூன்றில் ஒருபங்குதான் எரிசக்தி சேமிப்புக்கு செய்துள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவர் தனது வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, ”இந்தியாவின் ஒரு மாத எல்பிஜி தேவை 30 லட்சம் டன். நெருக்கடி காலத்திற்காக நிலத்தடி குகைகளில் இருப்பாக சேமித்து வைக்கும் வசதி (Strategic Reserve) வெறும் 140 லட்சம் டன் மட்டுமே. அதாவது விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டால், நம்மிடம் உள்ள இருப்பு வெறும் 1.5 முதல் 2 நாட்களுக்கு மட்டுமே.

இதற்கு காரணம் எதிர்காலப் பாதுகாப்பிற்காகச் சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க அரசாங்கம் காட்டிய அலட்சியம். 2025-26 பட்ஜெட்டில் சேமித்து வைக்கும் இருப்பு வசதிகளுக்காக முதலில் ரூ5,876 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால், பின்னர் அந்த நிதி அதிரடியாகக் குறைக்கப்பட்டு, வெறும் ரூ870 கோடியாக (80% குறைவு) வெட்டிச் சுருக்கப்பட்டது. இந்த ஆண்டு 2026-27 பட்ஜெட்டில், புதிய கொள்முதலுக்காக வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெயரளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
ஜப்பான் நாடு இந்தியாவை விடவும் அதிக இறக்குமதி சார்பு (95%) கொண்டது. ஆனால் அதன் முன்னேற்பாடு வியக்க வைக்கிறது. ஜப்பான் தன்னிடம் 254 நாட்களுக்குத் தேவையான அவசரகால இருப்பைப் பராமரிக்கிறது. தற்போதைய உலகளாவிய நெருக்கடியின் போது, ஜப்பான் எந்த பதட்டமும்,நெருக்கடியும் இல்லாமல் பிரச்சனையை எதிர் கொள்கிறது. ஆனால் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே இருப்பு வைத்துள்ள இந்தியா பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறது.
33 கோடி குடும்பங்கள் எல்பிஜி இணைப்பைச் சார்ந்திருக்கிற இந்தியாவில் ஆளும் பாஜக அரசு தனது விளம்பரத்துக்கு ஒதுக்கிய தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் புதிய சேமிப்பு வசதிக்கு ஒதுக்கியது என்பது நாட்டிற்கு இழைத்துள்ள மாபெரும் அநீதி.
உக்ரைன் – ரஷ்யா போருக்கு பின் உலகமே இந்த விசயத்தில் விழித்துக்கொண்டது. ஐரோப்பிய நாடுகள் தனது எரிசக்தி தேவையில் 30 சதவிகிதம் சேமிப்பு வசதியை உருவாக்க கட்டாயமாக்கியது. ஆனால் அதில் இருந்து பாஜக அரசு எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை. சர்வதேச எரிசக்தி முகமை (IEA) பலமுறை எச்சரித்த பிறகும் தன்னை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. அதனால் தான் இந்த பட்ஜெட்டில் பெயரளவுக்கு வெறும் ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்திய மக்களின் தேவை மற்றும் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பாஜகவின் விளம்பர மோகமே முன்னுரிமை பெற்றன. அதனால் தான் உஜ்வாலா விளம்பரம் மோடி படத்தோடு குக்கிராமத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது இந்தியாவின் அடுப்புகள் எரியமுடியாமல் தத்தளிக்கின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு ஊடக விளம்பரங்களுக்கு செலவு செய்த தொகை ரூ3,723 கோடி. ஆனால் எரிசக்திக்கான புதிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்க ஒதுக்கிய தொகை ரூ1670 கோடி மட்டுமே. தேசத்தின் தேவை புறக்கணிக்கப்பட்டு,பாஜக தேவைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது தான் இன்றைய நெருக்கடிக்கு அடிப்படை” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.
ஈரானின் ராஜதந்திரம் – பொருளாதார மண்டல்ததை சீர்குலைக்கும் வியூகம்….
