பாவூர்சத்திரம் அருகே குடி போதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய நண்பரையே கொலை செய்து விபத்து போல நாடகமாடிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.


தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் டாஸ்மாக் அருகே விபத்து ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்ததாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்றது 108 ஆம்புலன்ஸ் விரைந்தது. அங்கு பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை, ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்குப் பின்னர், அந்த இளைஞர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக பாவூர்சத்திரம் போலீஸார், ஆம்புலன்ஸ் வரவழைத்த இளைஞரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தவகவல்கள் வெளியாகின. அதன் விவரம் பின்வருமாறு, 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (26). இவருக்குத் திருமணமாகி ப்ரியா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. ப்ரியா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரும் அதே ஊரில் வடக்குத் தெருவில் வசிக்கும் திருமணமாகாத 22 வயது முகிலன் என்ற வசந்த் என்பவரும் சிறு வயது முதல் நகமும் சதையும் போன்ற நண்பர்கள்.
தன் வீட்டில் கறிக்குழம்பு, பிரியாணி போன்றவை செய்தால் முதலில் வசந்த் வீட்டிற்குக் கொண்டு செல்லும் அளவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிரவீன் தனது உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்குத் தனது நண்பன் வசந்தையும் அழைத்துச் செல்வார்.
தற்போது இருவரும் சேர்ந்து ஆட்டோ மூலம் பழைய இரும்பு வியாபாரம் செய்து லாபத்தைப் பங்கிட்டுக் கொண்டு வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை, புதிய செல்போன் வாங்க வேண்டும் என்று கூறி, பிரவீனை அவரது வீட்டிற்குச் சென்று அழைத்துள்ளார் வசந்த். ஒரே பைக்கில் சென்ற இருவரும் கீழப்பாவூரில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். தொடர்ந்து டாஸ்மாக் இருக்கும் சாலையில் உள்ள தென்னந்தோப்பிலும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதையில் பல விஷயங்களைப் பேசிய இருவருக்கும் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் வசந்த், கீழே தள்ளி விட்டதில் பிரவீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பயந்து போன வசந்த் இந்த சம்பவத்தை, பைக்கில் சென்ற போது விபத்து ஏற்பட்டு விட்டதாக கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரவீன் ஞாயிற்றுக்கிழமை மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, முகிலன் என்ற வசந்தைக் கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். தீய நட்பு, மது போதை ஒரு உயிரை மாய்த்ததுடன், கைக்குழந்தை மற்றும் 6 மாத கர்ப்பபிணியாக உள்ள இளம்பெண்ணை நிர் கதியாக விட்டுச் சென்றுள்ளது கல்லூத்து கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் செய்வதாக நம்ப வைத்து ரூ.9.35 கோடி பறிப்பு – நடிகை ஆஹஷூ ரெட்டி மீது பரபரப்பு புகார்…
