குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அங்கு ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. நவகிர ஸ்தலங்களில் ராகு ஸ்தலமாக விளங்கக்கூடிய இந்த கோவிலின் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .10 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் ஏழாம் நாளான இன்று மகாரத உற்சவம்(தேரோட்டம்) நடைபெற்றது. காலையிலேயே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் திருநாகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேர் திருவிழாவை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தேரின் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். கோவிலின் முக்கிய மாட வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக சென்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே தண்ணீர் மோர் குளிர்பானங்கள், அன்னதானம் ஆகியவையும் வழங்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு வாகனங்கள் அனைத்தும் பஜார் பகுதிக்கு வராமல் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.
திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்

