அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை வழங்காத நிலையில், மாநிலம் இதுவரையில் இல்லாததொரு அரசியல் தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கியிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை எட்டுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

முழுமையான பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே பதவிப் பிரமாணம் என்ற நிலையில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உறுதியாக இருப்பது, அரசியல் களத்தை இன்னும் சூடாக்கியுள்ளது. இந்தச் சூழலில், அரசியல் ரீதியாகப் பரஸ்பரம் எதிரெதிர் துருவங்களாக விளங்கும் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த பேச்சுகள் நடத்துவதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இது போன்றதொரு நகர்வு, தமிழகத்தின் ஜனநாயகப் பண்பிற்கே விடப்படும் சவால். அரை நூற்றாண்டு காலமாக எதிரெதிர் துருவங்களாக மோதிக் கொள்ளும் இரு கட்சிகள், அதிகாரத்திற்காக இணைவதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். குறிப்பாக, இன்றைய ‘ஜென்சி’ தலைமுறை மற்றும் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வுடன் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் இது ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கும்.
மக்கள் தீர்ப்புக்கு முரணான கூட்டணி அமைந்தால், அது சமூக வலைதளங்களில் தொடங்கும் போராட்டமாக மட்டும் இல்லாமல், ஜல்லிக்கட்டு போராட்டம் போல பொதுவெளியிலும் பெரும் சட்டம் ஒழுங்கு சிக்கல்களை ஏற்படுத்தி, அரசாங்கம் பதவி விலக வேண்டிய நெருக்கடியை உருவாக்கும்.
கழகத்தின் முன்னணித் தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் போன்றோர், தவெக ஆதரவு கோரினால் அதனை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதில் ஒரு தெளிவான அரசியல் தொலைநோக்குப் பார்வை இருப்பதை மறுக்க முடியாது. அதிமுக மற்றும் தவெக ஆகிய இரண்டுமே தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் கட்சிகள் என்பதால், இவற்றுடன் தேசியக் கட்சியான காங்கிரஸ் இணையும்போது, அது ஒரு வலிமையான மற்றும் நிலையான மாற்றாக அமையும்.
இந்தக் கூட்டணியானது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தற்காலிக ஏற்பாடாக இல்லாமல், நீண்டகால அரசியல் மாற்றத்திற்கான அஸ்திவாரமாக இருக்கும். குறிப்பாகத் தமிழக மக்கள் பாஜகவின் அரசியலைத் தொடர்ந்து நிராகரித்து வரும் சூழலில், இந்தத் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஒரு வலுவான மதச்சார்பற்ற பிம்பத்தை உருவாக்கும்.
இது வரும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு மிகப்பெரிய வாக்குப் பங்கைப் பெற்று, திமுகவை வீழ்த்தி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்க வழிவகுக்கும். திமுகவுடன் கைகோர்ப்பதை விட, வளர்ந்து வரும் ஒரு புதிய சக்தியுடன் இணைந்து செயல்படுவது அதிமுக தொண்டர்களுக்குப் பெரிய அளவில் மனக்கசப்பை ஏற்படுத்தாது என்பதுடன், ஒரு ஆரோக்கியமான அரசியல் மாற்றத்திற்கும் வித்திடும்.
ஆதரவு கோரி தவெக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வக் கடிதம் வரவில்லை என்பது ஒரு சிக்கலாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, எடப்பாடியார் ஒரு முதிர்ச்சியான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, மக்கள் தீர்ப்பை மதிக்கும் வகையிலும், தமிழகத்தை ஒரு சமூகப் பதற்றத்திலிருந்து காக்கவும் இந்த முற்போக்குக் கூட்டணி அமைவதே தற்போதைய காலத்தின் கட்டாயம்.
முடிவுகள் எடுப்பதில் தாமதம் என்பது ஜனநாயகத்திற்குத் தேக்கநிலையைத் தரும். தெளிவான முடிவும், துணிச்சலான கூட்டணியுமே தமிழகத்தை அடுத்தகட்டப் பொற்காலத்திற்கு அழைத்துச் செல்லும். திமுகவின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்று பரவும் செய்தி உண்மையானால் அது தற்கொலைக்குச் சமமானது என்பதை உணர்ந்து, தார்மீக அடிப்படையில் புதிய கூட்டணியை நோக்கி அதிமுக அடியெடுத்து வைப்பதே கட்சிக்கும், தமிழகத்திற்கும் நலம் பயக்கும்.
கதாநாயகன் தலைவனாகும் போது ஜனநாயக அரசியலுக்கு ஆபத்து ஏற்படும்
