தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது தொடர்பாக இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும். கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்,” என்றார். இதற்கிடையில், விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி, “விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விசிக இடம்பெற உள்ளது. இது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய திருப்புமுனை முடிவாக அமையும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விசிக சார்பில் வன்னி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அது உறுதியாகும் பட்சத்தில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தவெக தரப்பில் இருந்து அமைச்சரவையில் சேருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த கூட்டணி மற்றும் அமைச்சரவை பங்கேற்பு தொடர்பான இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
