Homeசெய்திகள்கட்டுரைசமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

-

- Advertisement -

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

“சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்”

we-r-hiring

அரச குடும்பத்தில் பிறந்த புத்தர், அடித்தட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்ததைப் போல – இராஜ பரம்பரையில் பிறந்த வி. பி.சிங் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒளிவிளக்காக விளங்கினார். அத்தகைய சமூகநீதியின் ஒளிவிளக்காம் வி.பி. சிங் அவர்களுக்கு சென்னை கடற்கரை சாலையில்-மாநிலக் கல்லூரி வளாகத்தில் கம்பீரச் சிலையைத் திறந்து வைத்தார் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இந்தியாவின் சமூக நீதிக் காவலராம் வி.பி.சிங் அவர்கள் பிறந்தது உத்தரப்பிரதேச மாநிலம், ‘எங்களது சொந்த மாநிலமான உ.பி. யில் கூட எங்களது தாத்தாவுக்குச் சிலை வைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் தான் முதன்முதலாக அமைகிறது’ என்று வி.பி.சிங் அவர்களின் பேத்தி சொல்லி இருக்கிறார்.

உயர்குலம் என்று கருதப்படும் குலத்தில் பிறந்தார். ஆனால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே ஆட்சியை நடத்தினார். பதவிகள் அவருக்கு மிகமிகக் குறுகிய காலமே இருந்தது. அந்தக் குறுகிய காலத்தில் தான் எல்லா விதமான சாதனைகளையும் செய்தார். மண்டலுக்குப் பிறகு நான் வேறு ஒரு மனிதனாக மாறி விட்டேன்’ என்றவர் அவர்.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது முக்கியமா? பிரதமர் பதவி முக்கியமா?-என்ற இரண்டில் சமூகநீதியைக் கையில் எடுத்தவர் வி.பி.சிங்,

என் ஆட்சி கவிழ்க்கப்படும்’ என்று எனக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், சமூகநீதியில் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நாடு தெரிந்து கொள்ளவே இதனைச் செய்கிறேன்’ என்றவர் வி.பி.சிங்,

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை அவர் வழங்குவார் என்று அவரது கட்சியினரே எதிர்பார்க்கவில்லை. அதனைத் தான் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்களே லேசாகக் கோடிட்டுக் காட்டினார்கள்.

மண்டல் அறிக்கையை அமல்படுத்துவதற்காக 1990 ஆகஸ்ட் 2 ஆம் நாள் இரண்டு தடவை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதற்கு இடையில் தேசிய முன்னணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டமும் நடந்தது. மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்த பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தார்கள். அதேநேரத்தில், இதனை அமல்படுத்துவதற்கு பிரதமர் வி.பி.சிங் கால தாமதம் செய்கிறார் என்றும் சந்திரசேகர் குழுவைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் சொன்னார். ‘நாட்டில் உயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருக்கும் வரை மண்டல் கமிஷன் பரிந்துரை அமல் ஆகாது’ என்று அந்த எம்.பி.சொன்னதும் கோபம் ஆனார் பிரதமர்.

“மண்டல் அளித்துள்ள பட்டியலையும், மாநிலங்கள் வைத்துள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலையும் பொருத்த வேண்டியுள்ளது. அதனால் தான் தாமதம்” என்றார் பிரதமர் வி.பி.சிங். ‘இவை எல்லாம் வெறும் சாக்குப் போக்குகள்’ என்று சில எம்.பிக்கள் கூச்சலிட்டார்கள். உடனே பிரதமர் வி.பி.சிங் அவர்கள் எழுந்து, மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதற்கான தேதியை இப்போதே முடிவு செய்வோம்’ என்று அறிவித்தவர் தான் அவர். இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் அனுபவிக்கும் இடஒதுக்கீடு உரிமையை பெற்றுத்தந்தவராக உயர்ந்து நிற்கிறார் பிரதமர் வி.பி. சிங் அவர்கள். இது தான் அவரது ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவுக்கு காரணமாக அமைந்தது.

“பல நூற்றாண்டு பழமையுடன் மோதும் போது எத்தனை சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை அறியாதவனல்ல நான். நம் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரை துரத்திச் சென்று ஒரு முட்டுச் சந்தில் நிறுத்துவோம் என்றால் நமது நாட்டில் மேலும், மேலும் அமைதியின்மையே நிலவும்” என்று நாடாளுமன்றத்நிலேயே அழுந்தமாகச் சொன்னவர் அவர்.

உயர்ஜாதி சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் உருவாகி நாடு முழுதும் கலவரங்களைக் கட்டவிழ்த்தபோது பாட்னாவில் லல்லுபிரசாத் ஏற்பாடு  செய்த மாபெரும் கூட்டத்தில் பேசிய வி.பி.சிங் ஒரு குட்டிக் கதையைக் கூறி, இடஒதுக்கீடு கொள்கையை விளக்கினார்.

“ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகளிடையே பாகப் பிரிவினை நடந்தது. வீட்டில் இருந்த ஒரே மாட்டையும் இரண்டாகப் பிரித்துவிட வேண்டும் என்றார்கள். மாட்டின் தலைப்பகுதி தம்பிக்கும், பின்பகுதி அண்ணனுக்கும் பிரிக்கப்பட்டது. தம்பியின் கடமை ஒவ்வொரு நாளும் தலைப் பகுதியிலுள்ள வாய்க்கு-மாட்டின் தீவனம் போட வேண்டும். அண்ணனோ ஒவ்வொரு நாளும், பின் பகுதியிலுள்ள மாட்டின் மடியிலிருந்து பால் கறந்து கொண்டே இருந்தார்.

எத்தனை காலத்துக்குத்தான் இந்த அநீதியை தம்பி சகித்துக் கொண்டிருப்பான்? ஒரு நாள் அண்ணன் பால் கறந்து கொண்டிருக்கும்போது தம்பி, தலைப்பகுதியிலிருந்த கொம்பைப் பிடித்து ஆட்டி விட்டான். அவ்வளவுதான்; இத்தனை ஆண்டுகாலம் தீனி போடாமலேயே பாலை மட்டும் கறந்து கொண்டிருந்த அண்ணனை மாடு எட்டி உதைத்தது.

அண்ணன் – ‘இது அநீதி; அநியாயம்’ என்று அலறுகிறான். அந்தக் கொம்பைப் பிடித்து ஆட்டிய வேலையைத்தான் நான் செய்தேன். அதற்காக காலம் காலமாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தவர்கள் என்னை எதிர்க்கிறார்கள்” என்றார் வி.பி.சிங்.

மதவாதமா? மத நல்லிணக்கமா?-எது முக்கியம் என்ற போது மத நல்லிணக்கத்தின் பக்கம் நின்றவர் வி.பி.சிங்.

“பெரியார் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அவருக்குப் பின்னாலே இருக்கின்ற மக்களின், வருகின்ற சந்ததியினரின் உள்ளங்களிலே, அவரது கருத்துகள் நிறைந்திருக்கின்றன என்றால், அவர் சாகவில்லை என்பதைக் காட்டுகிறது” என்று சொன்னவர் வி.பி.சிங்.

“ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது, ‘அவமானம்’ என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப்பட்டார்கள். மனத்தில் அவமானம் என்ற நெருப்புப் பற்றி எரிந்தால், இந்த நாட்டில் புரட்சிதான் வெடித்துக் கிளம்பும் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதை உணர்ந்ததால் தான், பெரியார், சுயமரியாதை என்ற முழக்கத்தைத் தந்தார்கள்” என்று சொன்னவர் வி.பி.சிங்,

“இன்றைக்கு இருக்கக் கூடிய சிக்கல்களுக்கு அடித்தளம் என்ன?

சமுதாயத்தில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்த்துவது எப்படி என்பதுதான் அந்தச் சிக்கல். அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப் பாடுபட்டவர்கள் தான் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களும். பெரியார் அவர்களும்” என்று சொன்னவர் வி.பி.சிங்.

“நாம் 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற்றுக்குச் செல்வோம்.” என்று சிந்திக்கத் தூண்டியவர் வி.பி.சிங்,

“மண்டல் ஆணைய அமுலாக்கம் என்பது, அதிகாரப் பங்கீடு” என்ற புதுவிளக்கம் கொடுத்தவர் அவர்.

“இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி அண்ணல் அம்பேத்கர் படத்தைக்கூட நாடாளுமன்றத்தில் திறக்க முடியவில்லையே! என்று  வேதனைப்பட்டதுடன் அண்ணல் அம்பேத்கர் படத்தினைத் திறந்து வைத்தவர் வி.பிசிங், “பாரத ரத்னா” பட்டத்தையும் அண்ணல் அம்பேத்கருக்கு வழங்கி, பட்டத்திற்குப் பெருமை சேர்த்த பெருமகனார் வி.பி. சிங்!

குடியரசு துணைத் தலைவராக கே.ஆர். நாராயணன் அவர்களை முன்மொழிந்தவரும் அவரே!

“வகுப்புவாதத்துக்கு எதிராக நாம் மதச்சார்பின்மை வேண்டும் என்கிறோம். ஆனால் மதச்சார்பின்மை மட்டுமே வகுப்புவாதத்தை ஒழித்துவிடாது. அத்துடன் கட்டாயமாக சமூக நீதியும் இணைந்தாக வேண்டும்”-என்ற புதிய அரசியல் நெறியை உருவாக்கிக் கொடுத்தவர் அவரே!

“சமூகநீதிக்காக ஒரு முறையல்ல, ஆயிரம் முறை பிரதமர் பதவியை இழக்கத் தயார். ஒரு நல்ல பொருளை வாங்க வேண்டுமா, அதற்கு நல்ல விலையைத் தந்தாக வேண்டும். நான் நல்ல பொருளை வாங்குவதற்காக நல்ல பொருளைத் தந்திருக்கிறேன்’ என்று சொன்னவர் அவர்.

சென்னை தியாகராயர் நகரில் ஒரு கூட்டம். வி.பி.சிங் பேசிக் கொண்டு இருந்தார். திடீரென கூட்டத்தைப் பார்த்து, ‘யாராவது உங்கள் முகத்தில் எச்சில் துப்பினால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். கூட்டம் அமைதியாக இருந்தது. ‘சொல்லுங்கள்’ என்று மறுபடியும் கேட்டார். ஒருவர் எழுந்து, ‘துப்பியவன் முகத்தில் ஒரு அடி கொடுப்பேன்’ என்றார். ‘இதுதான் சுயமரியாதை’ என்று சொன்னார் அவர்.

டெல்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்டது. அப்போது மருத்துவமனையில் இருந்தார் வி.பி.சிங். பின்னர் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் உரையாற்றும் போது, “நான் அப்போது அந்த இடத்தில் இருந்திருந்தால் புல்டோசர் முன்னால் ஏறி நின்று தடுத்திருப்பேன்” என்றவர் வி.பி.சிங்,

“காலம் மாறினாலும் தான் மட்டும் மாறாமல் இருக்கிற ஒரு தலைவர் உண்டென்றால் அது கலைஞர் அவர்கள் தான். பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்னுடைய கட்சி முதலமைச்சர்களே என்னை விட்டு ஓடிய நேரத்தில் என்னோடு இருந்தவர் கலைஞர் அவர்கள் என்று சொல்லி பாராட்டியவர் வி.பி. சிங் அவர்கள்.

“வி.பி.சிங்கை யார் மறந்தாலும் தமிழ்நாடு மறக்காது” என்று சொல்லி நன்றியின் உருவமாகச் சிலை திறந்தார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அமெரிக்கா – ஈரான் பேரழிவு… கழுகுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான போர்

MUST READ