கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல ஒட்டுமொத்த மக்களும் தன்னெழுச்சியாகப் போராட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அவர் பேசியதாவது,
”நாம் கையில் எடுத்துள்ள காவிரி உரிமைக்கான காரியம் மிகவும் கடினமானது. வழக்கமாக ஜூலை மாதத்தில் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓட வேண்டும். ஆனால், இன்று தண்ணீருக்குப் பதிலாகக் கழிவுநீர் தான் காவிரியில் வருகிறது. அணை கட்டுவதற்கு முன்பே தமிழகத்திற்குத் தண்ணீர் வரவில்லை. இந்தச் சூழலில் அணையைக் கட்டினால், தமிழகத்திற்கு குடிக்கக்கூடத் தண்ணீர் வராது. சுமார் 12,000 ஏக்கர் காடுகளை அழித்து இந்த அணையைக் கட்டுவது என்பது சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களைப் படுகொலை செய்வதற்குச் சமம். காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை என்றால், தமிழ்நாட்டில் 5 கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இது ஒரு இனப்படுகொலையாகவே மாறும்.
கர்நாடகாவின் திட்டமும், தமிழகத்தின் நிலையும்
கர்நாடக அரசு எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்பையும் மதிப்பதில்லை. பெங்களூருவின் குடிநீருக்காக மேகதாதுவில் அணை கட்டுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், வெறும் 5 டி.எம்.சி தண்ணீருக்காக 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மாபெரும் அணையைக் கட்ட நினைக்கிறார்கள். இந்த 5 டி.எம்.சி குடிநீர்த் தேவையை அவர்கள் தாராளமாக கே.ஆர்.எஸ் (KRS) அணையிலிருந்தே எடுத்துக் கொள்ள முடியும். மேகதாது அணை கட்டப்பட்ட பிறகு, ‘நாங்கள் விவசாயத்திற்குத் தண்ணீர் தருகிறோம்’ என்று அவர்கள் சொன்னால் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஏனென்றால், அவர்கள் மேல்தட்டிலும் (Upper Riparian), நாம் கீழ்த்தட்டிலும் இருக்கிறோம். தண்ணீர் கொடுக்கும் இடத்தில் அவர்கள் தான் இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு பாணியில் போராட அழைப்பு
முன்பு ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தபோது, அதற்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்தது. ஆனால், தமிழக இளைஞர்கள் ஒட்டுமொத்தமாகத் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடியதால் தான் ஜல்லிக்கட்டுக்கான அனுமதி கிடைத்தது. அதேபோல, இந்த மேகதாது அணை விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க ஒட்டுமொத்த பொதுமக்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக வந்து போராட வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
“தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு” – திமுக ஐடி விங் கடுமையான குற்றச்சாட்டு
