கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையைக் கட்டிவிட்டால் தமிழகத்திற்கு நீர் வரத்து முற்றிலுமாக நின்று, விவசாயம் பொய்த்துப் போய், தற்போது 30 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயாக உயரும் அபாய நிலை உள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் அநீதியான முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி, பாமக சார்பில் 4 நாட்கள் தொடர் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைபயணத்தின் 3-வது நாளான இன்று திருப்பூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்து பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சுருங்கும் விவசாயப் பரப்பும், அரிசி பற்றாக்குறையும்:
கர்நாடக அரசு நினைப்பது போல மேகதாதுவில் அணையைக் கட்டிவிட்டால் நமக்குச் சொட்டுத் தண்ணீர்கூட வராது. அதன் காரணமாகத் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகும். தற்பொழுது சந்தையில் 30 ரூபாய்க்குக் கிடைக்கும் ஒரு கிலோ அரிசியின் விலை, 300 ரூபாயாக உயரும் பேராபத்து இருக்கிறது என்பதைப் பொதுமக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நம்முடைய டெல்டா பகுதியில் விவசாயப் பரப்பு 29 லட்சம் ஏக்கரிலிருந்து 20 லட்சம் ஏக்கராகச் சுருங்கிவிட்டது. கர்நாடகத்திலிருந்து தண்ணீர் வரத்து மேலும் குறைந்தால், அது வெறும் 8 லட்சம் ஏக்கராகக் குறைய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய உணவு மற்றும் அரிசி பற்றாக்குறை ஏற்படும்.
பொருளாதாரத்தைப் பாதிக்கும் நீர் பற்றாக்குறை:
தண்ணீர் பற்றாக்குறை என்பது விவசாயத்தையும் உணவையும் மட்டும் பாதிப்பதில்லை; அது ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தையும் சேர்த்துத் தலைகீழாக மாற்றிவிடும். இதற்குச் சான்றாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான தண்ணீர் பஞ்சத்தின் போது, கோயம்புத்தூரில் வழக்கமாக ஒரு லட்சம் டிராக்டர்கள் உற்பத்தி செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 40,000 டிராக்டர்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. எனவே, தமிழ்நாட்டு மக்கள் இது ஏதோ விவசாயிகளின் பிரச்சினை என்று ஒதுங்கி நிற்காமல், தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அனைவரும் ஒன்று திரண்டு போராடி இந்த அணைத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
கர்நாடக வனவிலங்கு வாரியத்திற்குக் கண்டனம்:
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக வனவிலங்கு வாரியம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது எவ்வளவு பெரிய அநியாயம். காடுகளில் வாழும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதுதான் அந்த வாரியத்தின் வேலை; ஆனால், அவர்களே காடுகளை அழிக்கும் திட்டத்திற்குச் சாதகமாகச் செயல்படுவது வெட்கக்கேடான செயல். கர்நாடக அரசு அணையைக் கட்டிய தீர வேண்டும் என அனைத்துப் பணிகளையும் மிகத் துரிதமாகச் செய்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் எந்தக் கட்சியிலிருந்து யார் விலகுவார்கள், எந்தக் கட்சியில் யார் சேர்வார்கள் என்ற அரசியல் குதிரைபேரப் பேச்சுகளே ஓடிக்கொண்டிருக்கின்றன.
நான் அரசியலுக்காகவோ அல்லது ஓட்டுக்காகவோ இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலச் சந்ததியினரின் நலனைக் காப்பதற்காக மட்டுமே வீதியில் இறங்கிப் போராடி வருகிறேன். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நானும், பாமக நிறுவனர் ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களும் தலா மூன்று முறை போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்த நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கவும் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என அன்புமணி ராமதாஸ் உருக்கமாகப் பேசினார்.
