Homeசெய்திகள்சென்னைமோதலுக்காக கோவிலை மூடுவது அதிகாரிகளின் திறமையின்மை – சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

மோதலுக்காக கோவிலை மூடுவது அதிகாரிகளின் திறமையின்மை – சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

-

- Advertisement -

​”இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுகிறது என்பதற்காகக் கோவிலைப் பூட்டி வைப்பது என்பது, சூழலைக் கையாளத் தெரியாத அரசு அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மையையே பிரதிபலிக்கிறது” என்று சென்னை உயர் நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், பொதுமக்கள் வழிபாட்டிற்காகக் கோவில்கள் எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தூட்டப்பூவாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திம்மராயசுவாமி மற்றும் பச்சையம்மன் கோவில்களில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் சுட்டிக்காட்டி கோவிலை மூடி வருவாய் கோட்டாட்சியர் (RDO) உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அக்கோவிலின் பூசாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

we-r-hiring

மனுதாரர் தரப்பில், “சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் புதிய கோவில் கட்ட வேண்டும் என்று வேண்டுமென்றே தேவையில்லாத பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றனர். இதைக் காரணம் காட்டி வழிபாட்டுத் தலத்தை மூடுவது முறையல்ல” என்று வாதிடப்பட்டது.
​இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்துள்ள அதிரடி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வருமாறு:

நிர்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு:
“இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவாகிறது என்பதற்காகக் கோவிலை மூடி வைப்பது என்பது, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத அரசு அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மையையே (Administrative Inefficiency) காட்டுகிறது. சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி எந்தவொரு சூழ்நிலையிலும் கோவில்களை மூடக்கூடாது.

வழிபாட்டிற்காக நிறுவப்படும் கோவில்களில் பொதுமக்கள் சென்று தங்களின் இறை வழிபாட்டை நடத்துவதை இந்து சமய அறநிலையத் துறையோ அல்லது எந்தவொரு தனி நபரோ தடுத்து நிறுத்த முடியாது. பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி வழிபடும் வகையில் அனைத்து நேரங்களிலும் கோவில் திறந்தே இருக்க வேண்டும்.

பிரச்சினை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை:
கோவிலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தவோ அல்லது பொதுமக்களின் வழிபாட்டிற்குத் இடையூறு விளைவிக்கவோ முயலும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான குற்றவியல் (Criminal Action) நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
​ஒருவேளை, இந்தக் கிராமத்தில் இரு பிரிவினரிடையேயான பிரச்சினை காலவரையின்றி நீடித்தால், அங்குச் சுமுகமான சமாதானச் சூழல் ஏற்படும் வரை அந்த குறிப்பிட்ட கோவிலின் நிர்வாகத்தை மட்டும் தற்காலிகமாகத் தன் கையில் எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது” என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தனது தீர்ப்பில் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.

​உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி தமிழகத்தில் கோவில்கள் பூட்டப்படும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது எனச் சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

MUST READ