சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கு மிக அருகில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதை ஆசாமிகள் பட்டாக்கத்திகளுடன் வீடுகளின் மொட்டை மாடிகளில் தாவி குதித்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி, பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் அவலம்:
தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் திருவள்ளுவர் தெருவில் 4,164 எண் கொண்ட அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், பள்ளி மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றின் அருகிலேயே இந்த மதுக்கடை அமைந்துள்ளது.

இங்கு நாள்தோறும் மது அருந்திவிட்டு சாலையில் விழுந்து கிடப்பவர்களாலும், ஆபாசமாக பேசுபவர்களாலும் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் தினசரி பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் நீண்டநாட்களாகப் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பட்டாக்கத்திகளுடன் மாடிகளில் பாய்ந்த கும்பல் – அலறிய பொதுமக்கள்:
இந்நிலையில், நேற்று இரவு 9:30 மணியளவில் இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்திய இரு தரப்பினரிடையே திடீரென பயங்கர மோதல் வெடித்தது. இதில் ஒருவரை கொலை செய்யும் நோக்குடன், 10 பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்திகளுடன் பழைய பெருங்களத்தூர் திருவள்ளுவர் தெருவுக்குள் ஓடியுள்ளது.
தப்பியோடிய நபர்களும், துரத்திய கும்பலும் அங்கிருந்த குடியிருப்பு வீடுகளின் மொட்டை மாடிகளில் அடுத்தடுத்து அசுர வேகத்தில் தாவி குதித்து ஓடினர். தங்களின் வீட்டின் கூரைகளிலும், மொட்டை மாடிகளிலும் போதை ஆசாமிகள் ஆயுதங்களுடன் தங்கு தடையின்றி பாய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அலறியடித்துக்கொண்டு தங்களது வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீர்க்கன்காரனை போலீசார், வீடுகளின் மாடிகளில் ஏறி தப்பியோட முயன்ற வாலிபர்களில் ஒருவரை மட்டும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.
கொதித்தெழுந்த மக்கள்: தாம்பரம் – முடிச்சூர் சாலையில் மறியல்!
இந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், நள்ளிரவிலும் உடனடியாக சாலையில் திரண்டு தாம்பரம் – முடிச்சூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் ஆவேசக் கேள்வி:
“தமிழக அரசு 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நிலையில், பத்தாயிரம் குடும்பங்கள் வாழும் பகுதி மற்றும் பள்ளிக்கு அருகில் இருக்கும் இந்த 4,164 எண் கொண்ட ஆபத்தான கடையை ஏன் இன்னும் மூடவில்லை?” என மக்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தால் தாம்பரம் – முடிச்சூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒட்டுமொத்த பகுதி மக்களையும் திரட்டி தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் எச்சரித்துள்ளனர்.
