திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதர் மண்டி, செயல்படாமல் கிடக்கும் போலீஸ் உதவி மையம் (Outpost) அருகிலேயே இந்த துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோழவரத்தை அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உதயப்பிரகாஷ். இவர் சென்னை மாநகர பேருந்து (MTC) நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.மகரைப் பார்ப்பதற்காக உதயப்பிரகாஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு கோவைக்குச் சென்றிருந்தார். கோவைக்குச் சென்ற உதயப்பிரகாஷ் குடும்பத்தினர், இன்று மீண்டும் ஆத்தூரில் உள்ள தங்களது வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகளை மர்ம கும்பல் அள்ளிச்சென்றிருப்பது தெரியவந்தது. உரிமையாளர்கள் வீட்டில் இல்லாததை மிகத் துல்லியமாக நோட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகிலேயே காவல்துறையின் ‘காவல் உதவி மையம்’ (Police Booth/Outpost) ஒன்று அமைந்துள்ளது. ஆனால், அது நீண்ட நாட்களாக எவ்விதப் பயன்பாடும் இன்றி, முற்றிலும் செயல்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த காவல் உதவி மையம் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இதனைப் பயன்படுத்தி, இப்பகுதியைச் சேர்ந்த கஞ்சா ஆசாமிகள் மற்றும் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் இந்த உதவி மையத்தை தங்களது தங்குமிடமாகவும், கஞ்சா குடிக்கும் புகலிடமாகவும் மாற்றிப் பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காவல்துறையினர் இப்பகுதிகளில் இரவு நேரங்களில் எவ்வித ரோந்துப் பணிகளையும் (Patrolling) மேற்கொள்வதில்லை என்றும், இதனால் சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து, தற்போது ஆள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே 35 சவரன் கொள்ளை போகும் அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டது என்றும் ஆத்தூர் கிராம மக்கள் ஆவேசமாகத் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தடயங்களைச் சேகரித்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைவிடப்பட்ட காவல் உதவி மையத்தை உடனடியாகச் சீரமைத்து, அங்கு போலீசாரைப் பணியமர்த்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் அவசரக் கோரிக்கையாக உள்ளது.
