Homeசெய்திகள்தலையங்கம்திரை உலகக் காதல் Vs நிஜ உலகக் கடமை: ரசிகைக்கு ஷாருக்கான் கொடுத்த நெத்தியடி அறிவுரை...

திரை உலகக் காதல் Vs நிஜ உலகக் கடமை: ரசிகைக்கு ஷாருக்கான் கொடுத்த நெத்தியடி அறிவுரை – மாஸ் ஹீரோக்களுக்குப் பாடம்!

-

- Advertisement -

இந்தியத் திரையுலகின் ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் அண்மையில் மங்களூருவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டார். திரையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமன்றி, நிஜ வாழ்க்கையிலும் தான் ஏன் ஒரு முதிர்ச்சியான மனிதர் என்பதை அவர் இந்த விழாவின் மூலம் நிரூபித்துள்ளார்.

ஷாருக்கான்

we-r-hiring

​விழாவில் ஷாருக்கான் தனது சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனமாடி, அங்கிருந்த பார்வையாளர்களுடன் கலகலப்பாகக் கலந்துரையாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவர் மைக் பிடித்து, அனைவர் முன்னிலையிலும், “என் கணவரைவிட உங்களைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஐ லவ் யூ ஷாருக்!” என்று தனது காதலை வெளிப்படுத்தினார்.

கணவரின் அருமையைப் புரியவைத்த ஷாருக்:
​இதைக் கேட்டு அரங்கே அதிர்ந்த நிலையில், ஷாருக்கான் தனது வழக்கமான புன்னகையுடன் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த அறிவுரை, அங்கிருந்த ஒட்டுமொத்த ஆண்களையும் கைதட்ட வைத்தது.

ஷாருக்கான் அந்தப் பெண்ணை நோக்கிக் கூறியதாவது:
​“இது பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விஷயம், உங்களது உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால், ஒரு நிஜத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னை நீங்கள் திரையில் மட்டும்தான் பார்க்க முடியும், நிஜத்தில் உங்கள் அருகில் நான் இருக்கப் போவதில்லை.
​உங்களுக்கு நான் வீடு வாங்கித் தர மாட்டேன்; உங்கள் வீட்டு வாடகையைக் கட்ட மாட்டேன். உங்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்புக் கட்டணத்தைச் செலுத்தவோ, அவர்களை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வரவோ மாட்டேன். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் நான் துடித்துப் போக மாட்டேன்; உங்கள் கஷ்டத்தில் பங்கெடுக்க மாட்டேன்.

இவை எதையுமே செய்யாத என் மீது நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருக்கும்போது, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் இவை அனைத்தையும் உங்களுக்காகச் செய்யும் உங்கள் கணவரை நீங்கள் எந்த அளவுக்குக் காதலிக்க வேண்டும்? என்னை நீங்கள் ஒரு நடிகனாக ரசித்தால் மட்டும் போதும்.” இப்படிப் பேசிய ஷாருக்கான், அங்கிருந்த அனைவர் முன்னிலையிலும் அந்தப் பெண் ரசிகையை அவரது கணவருக்கு போன் மூலம் ‘ஐ லவ் யூ’ சொல்ல வைத்தார்.

​தமிழ்நாட்டுச் சூழலும், விஜய் ரசிகர்களின் போக்கும்: ஓர் ஒப்பீடு
​ஷாருக்கானின் இந்த முதிர்ச்சியான பேச்சு, தற்போது தமிழ்நாட்டுத் திரையுலக மற்றும் அரசியல் சூழலில், குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் நடக்கும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.

எல்லை மீறும் ரசிகர்களின் மோகம்:
தமிழ்நாட்டில், குறிப்பாக நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) என்ற கட்சியைத் தொடங்கி, தற்போதைய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் மோகம் எல்லை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பதாகைகளுக்குப் பாலாபிஷேகம் செய்வது, குடும்பக் கடமைகளை மறந்து கட்சிக்காகவும், சினிமாவுக்காகவும் நேரத்தைச் செலவிடுவது, சமூக வலைத்தளங்களில் மாற்றுக் கட்சியினரைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவது என விஜய் ரசிகர்கள் பல நேரங்களில் எல்லையை மீறுகின்றனர்.
​அண்மையில் கூட, விஜய் குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சித்த மாற்றுக் கட்சியினரைக் குறிவைத்து தவெக-வினர் கொடுத்த புகாரின் பேரில் கைது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.

விஜய்யின் மௌனமும் – ஷாருக்கின் பாணியும்:
ஷாருக்கான் போன்ற பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் தங்களை ‘கடவுளாக’வோ அல்லது குடும்பத்தை விட உயர்ந்த இடத்திலோ வைக்கும்போது, அதை மேடையிலேயே தடுத்து நிறுத்தி, “நாங்கள் வெறும் நடிகர்கள், உங்கள் குடும்பமே முக்கியம்” என்று எதார்த்தத்தை முகத்தில் அடித்தாற்போல் பேசுகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள், தங்களை நோக்கி ரசிகர்கள் கட்டுகடங்காத வெறியோடு வரும்போது, அதைத் தடுத்து அறிவுரை கூறுவதைக் காட்டிலும், “என் நெஞ்சில் குடியிருக்கும்…” என்று தழுவிக்கொண்டு, அந்தப் பிம்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ரசிகர்களின் வெறியைத் தங்களின் சினிமா வியாபாரத்திற்கும், அரசியல் லாபத்திற்கும் முதலீடாக மாற்றும் போக்கே இங்கு அதிகம் காணப்படுகிறது.

மாற வேண்டிய ‘ஹீரோ ஒர்ஷிப்’ (Hero Worship):
குடும்பக் கஷ்டங்களை மறந்து நடிகர்களுக்காகத் தங்களின் வாழ்க்கையைத் தாரைவார்க்கும் ரசிகர்களுக்கு, ஷாருக்கானின் இந்த மங்களூரு பேச்சு ஒரு மிகச்சிறந்த பாடம். திரையில் தோன்றும் நாயகர்கள் தங்களின் பொழுதுபோக்குக்கு மட்டும்தான், நிஜ வாழ்க்கையின் நாயகர்கள் நம்மைச் சுற்றி இருக்கும் குடும்பத்தினர்தான் என்பதைத் தமிழ்நாட்டு ரசிகர்களும், அவர்களை வழிநடத்தும் விஜய் போன்ற தலைவர்களும் உணரும்போதுதான் இங்கு ஆரோக்கியமான மாற்றம் சாத்தியப்படும்.

MUST READ