பாரம்பரிய விவசாயத்தில் தொடர் நஷ்டத்தைச் சந்தித்த வேடசந்தூர் விவசாயி ஒருவர், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ‘டிராகன் ஃப்ரூட்’ (Dragon Fruit) சாகுபடி செய்து மாற்று விவசாயத்தில் பெரும் லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார். குறைந்த செலவு, குறைந்த தண்ணீர் மற்றும் எளிமையான பராமரிப்பில் இச்சாகுபடி அதிக லாபம் தருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்த சுவாரசியமான கள நிலவரம் வருமாறு:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புலங்கட்டிநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனராஜ். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். வெங்காயம், கடலை உள்ளிட்ட பாரம்பரிய பயிர்களைப் பயிரிட்டு வந்த தனராஜிற்கு, போதிய விலை கிடைக்காமலும் தட்பவெப்ப நிலை மாற்றங்களாலும் தொடர் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாற்று விவசாயமாகத் திராட்சை சாகுபடி செய்யத் திட்டமிட்டு, அதற்காகக் கல்தூண்கள் நட்டு பந்தல் அமைத்துள்ளார். ஆனால், திராட்சைக் கொடிகளைப் பராமரிப்பது மிகவும் கடினம் என்பதால், பாதியிலேயே அந்தப் பணிகளைக் கைவிட்டுள்ளார்.
வழிகாட்டிய யூடியூப் (YouTube):
விவசாயத்தில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனராஜ் தினந்தோறும் தனது செல்போனில் யூடியூப் மூலம் பல்வேறு நவீன விவசாய முறைகளை ஆராய்ந்துள்ளார். அப்போது டிராகன் ஃப்ரூட் சாகுபடி குறித்த வீடியோக்கள் அவரது கவனத்தை ஈர்த்துள்ளன.
இதுகுறித்து முழுமையாகத் தெரிந்துகொண்ட தனராஜ், நேரடியாக மும்பையிலிருந்து தரமான டிராகன் ஃப்ரூட் கன்றுகளை வாங்கி வந்துள்ளார். ஏற்கனவே திராட்சைக்காக அமைக்கப்பட்டிருந்த கல்தூண் பந்தல் அமைப்பையே இதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடிப் பணிகளைத் தொடங்கினார்.
இரண்டு ஆண்டுகளில் முழு லாபம்:
கன்றுகளை நட்ட 7 மாதங்களிலேயே முதல் அறுவடை கிடைத்துள்ளது. அதில் அவர் செய்த முதலீட்டின் பாதித் தொகை திரும்பக் கிடைத்துள்ளது. தற்போது கன்றுகள் நட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சாகுபடிக்காக அவர் செய்த ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகையும் முழுமையாகக் கைக்கு வந்ததோடு, தற்போது நிகர லாபத்தை ஈட்டி வருகிறார்.
”வெங்காயம், கடலை போன்ற பாரம்பரிய பயிர்களோடு ஒப்பிடும்போது டிராகன் ஃப்ரூட்டில் நல்ல மகசூலும், கைநிறைய வருமானமும் கிடைக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 10 அடி இடைவெளியில் செடிகளை நட்டுள்ளேன். இதற்கு அதிகளவு தண்ணீர் தேவையில்லை என்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்.”
– தனராஜ், சாதனை விவசாயி.
தேடி வரும் வாடிக்கையாளர்கள் – இன்றைய விலை நிலவரம்:
டிராகன் ஃப்ரூட் விற்பனை குறித்து தனராஜ் மேலும் கூறுகையில், “முன்னதாக ஒரு கிலோ டிராகன் ஃப்ரூட் 100 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது சந்தையில் கிலோ 150 ரூபாய் வரை நல்ல விலை கிடைக்கிறது. பெரிய அளவிலான தரமான பழங்கள் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகின்றன.
இப்பழங்களின் மருத்துவக் குணங்களை அறிந்து பொதுமக்களே நேரடியாகத் தோட்டத்திற்கு வந்து தலா 4 முதல் 5 கிலோ வரை வாங்கிச் செல்கின்றனர். இதனால், பழங்களைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டிய அலைச்சலும், போக்குவரத்துச் செலவும் எங்களுக்கு முற்றிலும் மிச்சமாகிறது.
தற்போது நிலவும் குறைந்த மழைப்பொழிவு மற்றும் தோட்டத்தில் அணில்களின் தொல்லை அதிகமாக இருப்பது மட்டும்தான் சற்றே சவாலாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
வறட்சிப் பகுதியான வேடசந்தூரில், யூடியூப் வழிகாட்டுதலின்படி மாற்று விவசாயத்தைக் கையில் எடுத்து லாபம் ஈட்டி வரும் விவசாயி தனராஜிற்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
