தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தரக் குடும்பங்கள் தவித்து வரும் நிலையில், முன்னணி தனியார் பால் நிறுவனமான ‘ஆரோக்யா’ பால் மற்றும் தயிர் ஆகியவற்றின் விற்பனை விலை இன்று முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் பால் முகவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, நடப்பாண்டில் இரண்டாவது முறையாகத் தனியார் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய விலை மாற்றத்தின்படி, 500 மி.லி. பால் பாக்கெட்டுகளுக்கு ரூ.2 வரையிலும், ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 வரையிலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை விபரம்:
அதன்படி, இதுவரை ரூ.29-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) இனி ரூ.31-க்கும், ரூ.35-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) இனி ரூ.37-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. அதேபோல், 500 மி.லி. கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Full Cream Milk) ரூ.39-லிருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பாக்கெட்டுகளைப் பொறுத்தவரை, ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.54-லிருந்து ரூ.57 ஆகவும், ஒரு லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.66-லிருந்து ரூ.69 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோரால் அதிகம் வாங்கப்படும் ஒரு லிட்டர் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலின் விலை ரூ.73-லிருந்து ரூ.76 ஆக உயர்ந்துள்ளது.
தயிரும் விலை உயர்ந்தது:
பால் மட்டுமின்றி, ஆரோக்யா தயிர் மற்றும் ஹட்சன் தயிர் ஆகியவற்றின் விலையும் 500 மி.லி. பாக்கெட்டுக்கு ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சந்தையில் முதன்மை நிறுவனமாகத் திகழும் ஆரோக்யா நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள இதர முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் இன்னும் ஓரிரு தினங்களில் தங்களது பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
