தமிழக அரசியலில் தற்போதைய த.வெ.க அரசாங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அங்கம் வகித்து வரும் சூழலில், கட்சிக்குள் ‘த.வெ.க ஆதரவு அணி’, ‘த.வெ.க எதிர்ப்பு அணி’ என இருவேறு துருவங்களாகத் தலைவர்கள் பிரியத் தொடங்கியிருப்பது அக்கட்சியைப் பெரும் பிளவை நோக்கித் தள்ளியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. இந்தியா முழுவதும் தலித் தலைவர்களைத் தன்வசப்படுத்திப் பலவீனப்படுத்திய பாஜக, அதே உத்தியைத் தமிழகத்தில் த.வெ.க அரசு மூலமாக விசிக மீது பிரயோகிக்கத் தொடங்கியுள்ளதா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
எஞ்சி நிற்கும் ஒரே தலித் ஆளுமை திருமாவளவன்!
கடந்த கால இந்திய அரசியலை உற்று நோக்கினால், நாடு முழுவதும் இருந்த செல்வாக்குமிக்க தலித் தலைவர்களைப் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தந்திரமாகத் தன்வசப்படுத்தி, அவர்களின் தனித்துவமான அரசியல் முகவரியைச் சிதைத்துள்ளதை அறியலாம். தமிழகத்திலும் கூட, டாக்டர் கிருஷ்ணசாமி முதல் ஜான் பாண்டியன் வரையிலான தலித் தலைவர்கள் பாஜக பக்கம் சென்று தங்களது தன்னாட்சி அடையாளத்தை இழந்தனர். இத்தகையச் சூழலில், பாஜக-வின் சித்தாந்தத்தை எதிர்த்துச் சமரசமின்றி நின்ற ஒரே தலைவரான தொல். திருமாவளவனை, தற்போது த.வெ.க அரசின் கூட்டுக்குள் வைத்தே அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த பாஜக பின்னணியில் இருந்து வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் நீடித்தாலும் தொடரும் பிம்ப அரசியல்
விசிக தற்போது த.வெ.க அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தாலும், கட்சியின் நிலைப்பாட்டைத் தட்டிகேட்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா போன்ற முக்கியப் புள்ளிகள் மூலம், “முன்பிருந்த திமுக அரசு தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை” என்ற தோற்றத்தை விசிக தொண்டர்கள் மத்தியில் திட்டமிட்டு விதைக்கிறார்கள். தலித் சமூகத்திற்குத் த.வெ.க அரசுதான் அதிக அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளது என்ற பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டே, மறுபுறம் திருமாவளவனின் தனித்துவமான இமேஜையும், கட்சியின் அடையாளத்தையும் காலி செய்யும் வேலைகள் தடையின்றி நடக்கின்றன. வேறு வழியில்லாமல் த.வெ.க-வோடு தொடர்ந்து பயணிக்கும்படியானப் புற அழுத்தத்தை விசிக-விற்குப் பாஜக உருவாக்கியுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விசிக-வுக்குள் ஆதரவு – எதிர்ப்பு அணி மோதல்!
இந்த அரசியல் அழுத்தங்களின் விளைவு, தற்போது த.வெ.க அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளால் விசிக-விற்குள் இருவேறு அணிகள் உருவாகக் காரணமாகி, கட்சி கருத்தியல் ரீதியாகப் பிளவுபடத் தொடங்கியுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அண்மையில் த.வெ.க அரசு ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை ‘சமூக நீதித்துறை’ என மாற்றியதற்கு, ‘த.வெ.க எதிர்ப்பு அணியாக’ மாறும் விசிக பொதுசெயலாளரும் எம்பியுமான ரவிக்குமார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவரான அமைச்சர் வன்னி அரசு, ‘த.வெ.க ஆதரவு அணியாக’ நின்று, “விஜய் அரசு செய்தது சரிதான்” என ஆதரித்துப் பேசியுள்ளார். அரசாங்கத்தில் இருந்துகொண்டே கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தத் தெளிவற்ற போக்கு மற்றும் ஆதரவு – எதிர்ப்பு அணிகளின் மோதல், விசிக-வைப் பிளவை நோக்கி நகர்த்தி வருகிறது.

நம்பகத்தன்மையைச் சிதைக்கும் அரசியல் நகர்வுகள்
மறுபுறம், திருமாவளவன் தனது அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றி மாற்றிப் பேசுகிறார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி, அவரது பொதுவாழ்வு நம்பகத்தன்மையை நாசம் செய்யச் சதி நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் பின்னணியில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போன்ற பிற கட்சித் தலைவர்களை விட்டு திருமாவளவனை நக்கல் செய்ய வைக்கும் அரசியல் உத்திகளும் அரங்கேறி வருகின்றன.
தலித் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்து: முறியடிப்பாரா திருமா?
திருமாவளவனை அரசியல் ரீதியாகக் காலி செய்வதன் மூலம், தமிழகத்தில் தலித் சமூகத்திற்கு என்று வலிமையானத் தலைமை தாங்கக்கூடியத் தனித்துவ ஆளுமைகள் யாரும் இருக்கக் கூடாது என்பதே இந்த நிழல் யுத்தத்தின் இறுதித் திட்டமாகச் சொல்லப்படுகிறது. இது ஒட்டுமொத்த தலித் மக்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்தாக முடியும். தற்போதைய சூழலில், த.வெ.க அரசாங்கத்திற்குள் உருவாகியுள்ள ஆதரவு – எதிர்ப்பு அணி மோதலில் இருந்து விசிக-வாலோ, திருமாவளவனாலோ தப்பிப்பது கடினம் என்றே தோன்றுகிறது. அரசின் முடிவுகளை எதிர்த்து ஏதேனும் தன்னிச்சையான முடிவை எடுத்தால், விசிக-வை உடைக்கும் அளவிற்குப் புற அழுத்தங்கள் தயாராக இருக்கின்றன. பல அரசியல் புயல்களைக் கடந்து, காலம் கடந்து நிற்கும் தலைவர் தொல். திருமாவளவன். கட்சிக்குள் முளைத்துள்ள இந்த ஆதரவு – எதிர்ப்பு பிளவை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார், தலித் மக்களின் உரிமைகளைக் காக்க இந்தச் சதியை எப்படி முறியடிக்கப் போகிறார் என்பது இனி அவரது தீர்க்கமான அரசியல் நகர்வுகளில்தான் உள்ளது.
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக – த.வெ.க இணைய வேண்டும்: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
