நெல்லை பாளையங்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் 66 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகளைத் திருடிவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரது நெருங்கிய உறவினரை 9 மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வேலைக்கே செல்லாத நபர் திடீரென கார், வீடு வாங்கிய ஆடம்பர வாழ்க்கையே அவர் காட்டிக்கொடுக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
பீரோவைத் திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
நெல்லை பாளையங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (59). பிரபல தொழிலதிபரான இவருடைய மனைவி லதா (52). ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட கண்ணன், தனது குடும்பத்தினருடன் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகக் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காகப் பல மாதங்களாகச் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்கத் தங்களது அறையில் இருந்த பீரோவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் இருந்த ₹10,000 ரொக்கம், வைர நெக்லஸ் மற்றும் தங்க நகைகள் உட்பட மொத்தம் 66 பவுன் நகைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கண்ணன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்ததில், பீரோ உடைக்கப்படாமல் சாவியைப் பயன்படுத்தியே மர்ம நபர்கள் நகைகளைத் திருடிச் சென்றது கண்டறியப்பட்டது.

9 மாதங்களாகத் திணறிய போலீஸ் – ரகசியக் கண்காணிப்பு
திருட்டு நடந்து 9 மாதங்களாகியும் எவ்வித துப்பும் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வந்தனர். எனினும், விடாப்படியாக விசாரணையைத் தொடர்ந்த தனிப்படையினர், கண்ணனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் யார், யார் என்பது குறித்து ஒரு ரகசியப் பட்டியலைத் தயாரித்துக் கண்காணித்து வந்தனர். அப்போது, பாளையங்கோட்டை லங்கர்கானா தெருவைச் சேர்ந்த, கண்ணனின் மனைவி லதாவின் நெருங்கிய உறவினரான தெய்வநாயகம் (43) என்பவர் மீது போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது.
சிக்கியது எப்படி? சொகுசு வாழ்க்கை அம்பலம்!
தெய்வநாயகம் கடந்த பல ஆண்டுகளாக எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். ஆனால், உறவினர் என்ற முறையில் கண்ணனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து, சிறுசிறு வேலைகளைச் செய்து கொடுத்து, அங்கேயே சாப்பிட்டு அவர்களுடன் மிகவும் நம்பிக்கைக்குரியவராக, பாசமாகப் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தெய்வநாயகத்தின் வாழ்க்கை தரம் திடீரென அடியோடு மாறியது. வேலைக்கே போகாத அவர், பாளையங்கோட்டையில் புதிதாக ஒரு சொந்த வீடு வாங்கினார். அதுமட்டுமன்றி, சுமார் ₹15 லட்சம் மதிப்பில் புத்தம் புதிய சொகுசு கார் ஒன்றையும் வாங்கி வலம் வந்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் வாக்குமூலம்
வருமானமே இல்லாத நபர் திடீரென கார், பங்களா என சொகுசு வாழ்க்கைக்கு மாறியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர், தெய்வநாயகத்தைப் பிடித்து தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட தெய்வநாயகம், கண்ணன் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, பீரோவின் ரகசியச் சாவியை எடுத்து நகைகளையும் பணத்தையும் திருடியுள்ளார். பின்னர் அந்த நகைகளை விற்று, கார் மற்றும் வீடு வாங்கி உல்லாசமாக வாழ்ந்து வந்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, 9 மாதங்களுக்குப் பிறகு தெய்வநாயகத்தை பாளையங்கோட்டைப் போலீசார் இன்று முறைப்படி கைது செய்தனர். அவரிடமிருந்து கார், பணம் மற்றும் எஞ்சிய நகைகளை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாசமாகப் பழகி, வீட்டோடு வீடாக இருந்து உறவினரே கைவரிசை காட்டிய சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே அதிரடி: மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் – இருவர் கைது!
