கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவை தவெக அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை விவரம் பின்வருமாறு:


அதிகார துஷ்பிரயோகமா? சிபிஎம் கேள்வி தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சோக சம்பவம் அரங்கேறியது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.
இது தவெக கட்சியின் பிரச்சாரத்தின் போது நடந்த விபத்து என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக பெ.சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்கு நீர்த்துப்போகும் அபாயம்! மேலும், இந்த 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விசாரணை முழுமையாக முடிவடைவதற்குள் இப்படியான அதிரடி அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை முற்றிலும் நீர்த்துப் போகச் செய்துவிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
தனியார் வேலை வேறு; அரசு வேலை வேறு! சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி இதற்குப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, ஆனால் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு வேலையை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது என்று சிபிஎம் தெளிவுபடுத்தியுள்ளது.
பொது வழிகாட்டுதல் தேவை! எனவே, விபத்துக்கள் மற்றும் பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான, வெளிப்படையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு முதலில் உருவாக்க வேண்டும். அதுவரை, கரூர் சம்பவத்திற்காகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அரசு வேலை வழங்கும் அறிவிப்பை தவெக அரசு உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
