நெமிலிச்சேரி முதல் கோவிலம்பாக்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள பிரதான சாலை, பல வருடங்களாக மக்கள் நடக்கக்கூட லாயக்கற்ற முறையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், இன்று காலை சாலை விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


விபத்துகளும், தற்காலிகத் தீர்வுகளும்
பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, அருள் முருகன் நந்தவனம் நகர் நெமிலிச்சேரி முதல் கோவிலம்பாக்கம் வரையிலான இந்தச் சாலை, குரோம்பேட்டையிலிருந்து வேளச்சேரிக்குச் செல்லும் முக்கிய பிரதான சாலையாகும். தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பயன்படுத்தும் இச்சாலையில், குண்டு குழிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ச் சேதங்களும் உண்டாகி வருகின்றன.

பெரிய விபத்துகள் ஏற்படும் போது மட்டும், நெடுஞ்சாலைத் துறையினர் ‘வெட்மிக்ஸ்’ (Wet Mix) ஜல்லிக் கற்களைக் கொட்டி தற்காலிகமாக குழிகளை மூடுகின்றனர். ஆனால், ஒரு சிறிய மழை பெய்தால் கூட அந்த ஜல்லிகள் முற்றிலும் பெயர்ந்து, மீண்டும் சாலை மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம் – மக்கள் பேரணி
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பரங்கிமலை ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மிகப்பெரிய விபத்து ஏதேனும் நடப்பதற்குள் தரமான சாலை அமைக்க வலியுறுத்தி, இன்று காலை குடியிருப்பு வாசிகள் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை விழிப்புணர்வு பேரணி நடத்தி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

குடியிருப்பு சங்க நிர்வாகி தினகரன் பேட்டி:
“இந்தச் சாலையில் செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தலையிட்டு இச்சாலையைத் தரமாக அமைத்துத் தர வேண்டும். இல்லையென்றால், அடுத்தகட்டமாக ஒட்டுமொத்த பொதுமக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தத் தயாராக உள்ளோம்.”
